தமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்

இன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளை வாசிக்கும் பொழுது பலவிதமான இன்னல்கள், இடையூறுகள் மத்தியிலும் சில நினைவுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் சட்டத்திற்கு அடிபணிந்து சட்டத்தின் வாயலுக்கு பயமுற்று பகிரங்கப்படுத்தாமல் இருக்கும் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயம் காரணமாக மறந்தும் விடுகிறார்கள்.
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் நினைவாக இந்த நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பல நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நினைவு மலர்கள் பல வெளிவந்துள்ளன என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் வெளிநாடுகளில் வெளிவந்த நினைவுரைகளின் ஒரு சில பகுதிகளை வெளிப்படுத்துவது மாமனிதருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.
புகழ்மிக்க வாழ்க்கை! திரு.பழ.நெடுமாறன், தென் செய்தி வெளியீடு, சென்னை
புகழ்பெற்ற ஈழத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் புதல்வராய் பிறந்து "இவன் தந்தை எந்நோற்றான் கொல்' என்னும் வள்ளுவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் குமார் பொன்னம்பலம் ஆவார். தந்தையைப் போல இவரும் இலங்கையின் மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
சிங்கள இராணுவம், சிறப்பு அதிரடிப்படை, சிங்களப்பொலிஸ் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாகித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார். அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 வீதமான வழக்குகளை அவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது இவரது ஒப்பற்ற தொண்டுக்குச் சான்றாகும்.தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பல அறிக்கைகளை அவர் அளித்துள்ளார். செம்மணி புதைகுழி போன்ற பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார். சிறைகளில் சித்திரவதை, கேள்விமுறையின்றி கைது செய்யப்படுதல், சட்டவிரோதமான படுகொலைகள், காணாமல் போதல் போன்ற தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு அட்டூழியங்களை ஐ.நா. மனித உரிமைக் கமிசன் முன் ஆதாரபூர்வமாக அளித்து சிங்கள அரசின் முகமூடியைக் கிழித்து எறிந்தார். பெல்ஜியத் தலைநகரான பிரசெல்ஸில் இயங்கும் ஐரோப்பிய பாராளுமன்றம், இலண்டனில் உள்ள ராயல் நிறுவனம் மற்றும் பல்வேறு உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றுக்கு நேராகச் சென்று புகார்களை அளித்தார்.

அமெரிக்க பிரமுகர்கள் கண்டனம்
அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களான சுயி.டபிள்யூ.கெல்லி, நிரா.எம்.லோவே, பில்.பாங்கெரல், பிராட் ஷெர்மன், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் இவான்ஸு ஆகியோரும் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கம், நீதிபதிகள், வழக்கறிஞர்களின் சுதந்திர மையம், மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழு ஆகியவையும் தமிழ்த் தலைவர் குமார் பொன்னம்பலம் படுகொலையைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளனர்.பொன்னம்பலம் என்றுமே வாழ்வார்
ஆங்கிலத்தில் வெளிவந்த நினைவுரையின் மொழிபெயர்ப்புமர்மமான துப்பாக்கிதாரிகளால் சுடப்படவேண்டியிருந்ததானது குமார் பொன்னம்பலத்திற்கு இந்த வேளையில் எள்ளளவும் எதிர்பார்க்கப்பட்டிராத செய்தியாகும். ஏனெனில், குறிப்பாக அவர் தனது நோக்கத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பிரசித்தமான காலகட்டத்திற்கும் மிகப்பிந்திய காலத்திலேயே இது நிகழ்ந்தது.
தலைகவிழ்ந்து மரணித்த நிலையில் இருக்கும் பொன்னம்பலத்தின் படம் எமது மனங்களில் எப்போதுமே பதிந்திருக்கும். ஆனால் நாம் அறிந்துள்ள குமார் பொன்னம்பலமோ எமது அலுவலகங்களில் பிரவேசித்து அனைவருடனும் ஏன் ஒவ்வொருவருடனும் கூட சிநேகபூர்வமாக அளவளாவும் குமார் பொன்னம்பலமாகத் தானிருப்பார்.தீங்கே தராத, அன்பு நிறைந்த, இரக்கம் நிறைந்த மனிதர் ஒருவரின் சோகமான முடிவு அது.
அவர் கொல்லப்படவேண்டுமென விரும்பிய அவருக்கிருந்த இந்தக் கசப்பான எதிரி யார்? அதை எமக்கு நினைத்துப் பார்க்கவே இயலாதுள்ளது.செய்தியாளர்களுக்குக் குமார் பொன்னம்பலம் ஒரு இரட்சகர். ஏனெனில் எவருக்கும் செய்திப் பஞ்சம் ஏற்படுவதுண்டு. ஆனால் குமாருடன் ஏற்படுத்தும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவர் கவலையெல்லாம் ஒழிந்துவிடும். பல விடயங்களில், குறிப்பாகச் சிறுபான்மையினர் விடயங்களில் குமாரின் கண்ணோட்டங்கள் மிக ஆழமானதாகவும் இருந்தன. ஆனால் வனப்பு மிக்க அவரது ஆளுமையிலிருந்து வெளிப்படும் மேற்கோள் ஒன்றின் காரணமாகச் செய்தியின் பிரதி எப்போதும் மகிழ்விப்பதாகவே இருக்கும்.
மனித முகங்களை மறக்காதவர் குமார். அவர்களிடமிருந்து செய்தியொன்றைப் பெற்றுக்கொண்ட புதிதாய் நியமனம் பெற்ற, அனுபவமில்லாத ஒரு செய்தியாளர் கூட அடுத்த தடவை குமாரைச் சந்திக்கும் போது அடையாளம் காணப்பட்டதன் அறிகுறியாக இலேசான ஒரு புன்முறுவலை நிச்சயமாக அவரிடம் காணலாம். உறவு வளர்ந்து வருகையில் குமாரே பல செய்திகளுடன் பெரும்பாலும் புத்தகங்கள் பற்றிய விளம்பரச் செய்திகளுடன் தொலைபேசியில் அழைப்பார். அவர் கூறும் விடயங்கள், செய்தியாளர் விவேகமானவராயிருந்தால் நன்கு பயன்படும்.1980களின் பிற்பகுதியில் குமார் தனது இறுதிக்காலத்தில் காணப்பட்டதை விட வேறுபட்ட ஒரு நபராகக் காணப்பட்டார். இறுதிச் சில வருடங்களின் போது நிச்சயமாக இரு தரப்புகளிடமிருந்தும் அங்கீகாரம் மறுக்கப்பட்ட அவரெடுத்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து தோன்றிய வெறுப்புணர்வொன்று அவரிடம் காணப்பட்டது. 1980களின் பிற்பகுதியில் அரசியல் முன்னேற்றம் கருதி அவர் எடுத்த முயற்சிகள் தோல்விகண்ட போது, தான் ஆதரிக்கும் அரசியல் சித்தாந்தம் இறுதியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையோடு அத்தோல்விகளை அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டார்.
நம்பமுடியாத அளவு செல்வம் படைத்தவர் எனக் குமார் அறியப்பட்டிருந்தார். சில மேர்ஸிடஸ் வகைக் கார்களை அவர் சொந்தமாகக் கொண்டிருந்த போதிலும், அவரணிந்த தங்கக் கைச்சங்கிலியைத் தவிர, அவரது ஆடையணிகள் கிட்டத்தட்ட அக்கறை எடுத்துத் தேர்ந்து அணியப்படாத எளியனவாகவே இருந்தன. முன்னோடி வடிவமைப்புக்கொண்ட ஆடைகளை அணிவதன் மூலமோ அல்லது ஆதரவாளர்கள் புடைசூழ வலம் வருவதன் மூலமோ தன்னை விளம்பரப்படுத்துவதை அவர் ஒருபோதும் நாடவில்லை.தமிழன் என்பதற்கு ஓர் அடையாளமாக விளங்குவதே குமாரின் நோக்கமாக இருந்தது. வேட்டியொன்றை உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறையும் அணிந்து கொள்வார் அவர். இராணி வீதியில் உள்ள தனது வீட்டின் மதிற்சுவர் மீது சுவாமி அறையொன்றை நிருமாணித்திருப்பதோடு தனது கடிதத் தலைப்பிலும் "ஓம்' எனும் அடையாளத்தைப் பொறித்திருந்தார் அவர். ஒரு வகையில் பார்த்தால் தனது தமிழ்த் தன்மையைப் பறைசாற்ற அவர் எடுத்த தளராத முயற்சிக்கே அவர் உயிர் விலையாகிப் போனது.
தன்னைக் கொலை செய்யக்கூடிய பகைவர்கள் தனக்கில்லையென்றே அவர் நம்பினார். தமது பிரதிநிதியாக இருக்கக் கூடிய அளவுக்கு அவரின் செயற்பாடுகளைப் புலிகள் தமக்குகந்தவையாக ஏற்றிருக்காவிடினும் புலிகளோடு அவர் "நல்லுறவையே பேணிவந்தார். அவரது கருத்துகளுக்காகத் தெற்கு அரசியல்வாதிகள் அவரைக் கொல்லப் போவதில்லையெனத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அவர்களுள் பெரும்பாலானோரைப் போதுமான அளவு நெருக்கத்தோடு அவர் அறிந்திருந்தார். அவரது அபிப்பிராயங்களைவிட்டு அவர்கள் அவரைப் பகிரங்கமாகத் திட்டக் கூடுமேயொழிய நிச்சயமாகக் கொல்ல நினைத்திருக்க மாட்டார்கள்.பணமும் அந்தஸ்தும் இருந்தால்தான் அதிகாரம் வரும் என்று சொல்லக்கூடிய வேறொரு யுகத்தில் அவரது கூர்மதிக்குப் பொருந்திவரும் விதத்தில் அதிகார உயர் வர்க்கக் குழாமில் தனக்கெனத் தனியானதோர் இடத்தை அவர் பிடித்திருக்கக் கூடும். ஆனால் பாராளுமன்ற அரசியலின் இன்றைய முரட்டுத்தன்மை வாய்ந்த குளறுபடியான உலகத்தில் அவருக்கு இடமிருக்கவில்லை.
அவரது கருத்துகள் எதுவாயிருப்பினும், குமார் பொன்னம்பலத்தைப் போன்ற ஓர் அரசியல் வாதி பாராளுமன்றத்திற்கே அழகூட்டுபவராய் இருந்திருப்பார். மக்களின் செல்வாக்குக் கிடையாத விடயங்களுக்கு ஆதரவளிப்பவராக தோல்வியுற்ற விடயங்களுக்கு உயிரூட்டி முன்கொண்டு வருபவராக இருந்திருப்பார். கட்சியின் கைப்பாவையாகத் தரந் தாழ்ந்து போயிருக்கும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போலல்லாது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் உயர்வாய் மதிக்கப்படுகின்ற ஒரு துடிப்பான நிறுவனமாக சட்டசபையை மாற்றியமைக்கும் தனிவழி செல்லும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருந்திருப்பார்.அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை
வ.வ. பாபு, ஒருங்கிணைப்பாளர், அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைமனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்ஈழத்தமிழர் தலை நிமிர்ந்து நிற்க செயல்பட்ட தமிழரே! உம் இழப்பு ஈடு செய்ய இயலாதது! உம்மை அழித்தவர்கள் உம் உடலை மட்டுமே அழித்துள்ளனர். நீங்கள் தமிழ் இனத்திற்கு சிறப்பாக ஈழத்தமிழருக்கு செய்த சிறந்த பணியால் பெற்ற புகழையே அல்லது ஈழத்தமிழரிடையே நீங்கள் ஏற்படுத்திய தன்மான உணர்வை, சுதந்திர உணர்வை அவர்களால் எக்காலத்துக்கும் அழிக்க முடியாது. உங்கள் பெருமையும் புகழும் தமிழீழத்து தமிழர் என்பவரோடு மட்டுமல்லாது, உலக வாழ் தமிழர் மனமெல்லாம் என்றென்றும் எக்காலத்துக்கும் நிலைத்து நின்று வாழும் என்பதில் எந்தவிதமானஐயப்பாடும் இல்லை. அன்னார் திரு. குமார் பொன்னம்பலம் அவர்களது இழப்பு உலகத்தமிழர் இழப்பு!
மறைந்த தமிழ் மகாத்மாவுக்காக முன்னாள் தமிழ் அரசியல் கைதி
செங்கதிர் போல் ஒளி வீசிய செந்தமிழ் செல்வரே. தங்கத் தமிழ் மணியே, தரணியில் உதித்த வெண் நிலவே , தாய்க்கு இன்றும் குமார் பொன்னம்பலம் தமிழுக்கு என்றும் எங்கள் தமிழ் ஞானப்பல(ழ)ம்.
அடிமை விலங்கை உடைத்தெறிந்து என்றென்றும் அகிலம் போற்றும் சட்டத்தரணியாக நின்ற எங்கள் அன்பே உருவான இன்பத் தமிழ் தியாகியே! நீங்கள் ஆயுதம் ஏந்தாமல் படையின்றி தனியொரு மரமாய் அநீதிக்கெதிராக அசைந்தாடும் நாவால் சொல் அம்புகளால் அஹிம்சா வழியில் போர் தொடுத்த அற்புத தீரரே.தமிழ் மக்களின் வாழ்வு ஓங்கவே என்றும் ஈடில்லா உங்கள் உடல் , ஆவி, பொருள் எந்தனை உயர்வாக உன்னத தமிழுக்கு கொடுத்து உரிமைக்குரல் விடுத்த உத்தம சீலரே! தமிழர்களின் தன்மானம் காத்த தகையே!
நீண்டதொரு தசாப்தமாக தமிழ் மக்களுக்கெல்லாம் நிழல்கொடுத்து நிமிர்ந்து நின்ற எங்கள் ஆலமரத்தை நிர்மூலப்படுத்தி விட்டனரே இனவாத நீசர்கள்.பாடுபட்டு உழுதாலும் பார்தனில் இனி எங்களால் ஈடு செய்ய முடியாது உங்கள் புனித இடத்தை. இடுக்கண் வந்த போதும் இடராமல் தரணியெங்கும் மிடுக்கோடு நடைபோட்ட அஞ்சனா மைந்தரே. நாடு கேட்டீர்கள் தமிழ் மக்களுக்கு சரி சமத்துவமாக கோடு போட்டு வந்தீர்கள் பைந்தமிழ் உரிமைக்காக.
பொன்னாடை விரும்பாத கண்ணான எம் தமிழ் மன்னா, கண்ணோரம் நீர் திரள நெஞ்சு கனம் தாங்காது விண்ணுலகம் மேவிய உங்கள் முன் விம்மலுடன் விதைப்பது. அச்சமில்லை அச்சமில்லை ஆயிரமாயிரம் அடி விழுந்தாலும் அண்ணலே தங்கள் பாதச் சுவடுகளில் பயணித்திடுவோமென அணையா எங்கள் கண்ணீர் அஞ்சலியை கவியில் வடித்து அரைக் காலம் கடந்து காணிக்கையாக்குகின்றோம் இன்று.- தொகுப்பு கே.எம்.ரி.
Nov 24, 2008
Sep 10, 2008
மாமனிதர் ஞானரதன்
தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளரும், ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளியும், சிறந்த ஒரு அரசியல் சிந்தனையாளரும் சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தியவருமான மறைந்த ஞானரதனுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மாமனிதர் விருது வழங்கி கெளரவித்தள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கை:
தமிழீழ தேசத்தின் விடிவிற்காகவும், விடுதலைக்காகவும், அயராது பாடுபட்ட ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்து விட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலில் மூழ்கிப் போய்க்கிடக்கிறது.
ஞானதரன் அண்ணன் என அனைவரும் அன்போடு அழைக்கும் திரு.வை.சச்சிதானந்தசிவம் ஒரு நல்ல மனிதர். நெஞ்சத்தில் நேர்மையும் உள்ளத்தில் உயர்ந்த எண்ணமும் கொண்டவர். எளிமை அவரோடு கூடப்பிறந்தது. அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்வார். அனைவரையும் கவர்ந்து கொண்ட உயரிய பண்பாளர்.
இவர் ஒருதேச பக்தர் எமது மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்தார். எமக்கு ஒரு நாடு வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழவேண்டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என துடியாய்த் துடித்தார். தேசப்பற்று அவரை போராட்டத்தோடு இறுகப் பிணைத்தது. மக்களோடும், போராளிகளோடு இணைந்து நின்று தாய விடுதலைப் போரில் பெரும் பழுக்களைத் தாமும் சுமந்து கொண்டார்.
நீண்டகாலமாக எமது விடுதலை இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பெரும் பொறுப்புக்களில் சுமந்து தனது முமைக் காலத்திலும் உறுதியோடு உழைத்தார் தனது அறிவாற்றலினாலும், கடும் உழைப்பாலும், தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றியபணி என்றுமே பாராட்டுக்குரியது.
இவர் தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளர், ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளி, சிறந்த ஒரு அரசியல் சிந்தனையாளர், சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தினார்.
பத்திரிகைகளிலும், சஞ்சிகைளிலும் ஓய்வில்லாது எழுதினார். எமது மக்களிடத்தில் விடுதலை உணர்வையும், தேசப்பற்றையும் தட்டி எழுப்பினார். சிங்கள இனவாத அரசின் பொய்யான பரப்புரைக்கு சாட்டையடி கொடுத்து எமது தேசத்தில் உண்மை நிலையை உலகுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினார்
எல்லாவற்றுக்கும் மேலாக இவர் எமது விடுதலை இயக்கம் ஒளிப்படத்துறையில் இன்று நிகழ்த்தியுள்ள பெரும் பாய்ச்சலுக்கு நடு நாயமாக நின்று செயற்பட்டார். நிதர்சன நிறுவனம் தோன்றிய காலம் முதல் இற்றைவரை அதன் வேராகவும், விழுதாகவும் அதனைத் தாங்கி நின்று செயற்பட்டார்.
எமது விடுதலைப் போராளிகளை ஒளிப்படத்துறையில் பயிற்றுவித்து அவர்களைச் சிறப்பாக வழிப்படுத்தி நெறிப்படுத்தி, ஒரு தேசிய தொலைக் காட்சியை உலகம் பூராகவும் ஒளிபரப்புகின்ற அளவுக்கு வளர்த்தெடுப்பதில் அச்சாணியாக இருந்து செயற்பட்டார்.
சிறிய குறும்படம் முதல் முழுநீளத் திரைப்படம் வரை பல்வேறு ஒளிப்பேழைகளை ஞானதரன் என்ற பேரில் தயாரித்து நெறிப்படுத்தினார். இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து எமது விடுதலை இயக்கம் களத்திலே படைத்த சாதனைகளையும், குவித்த வெற்றிகளையும் ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகைகளாகவும், விபரணங்களாகவும், தயாரித்து அவற்றை உலகின் கண்களுக்கு காட்சிப்படுத்த உதவினார். இவர் ஆரவாரம் இன்றி அமைதியாக ஆற்றிய விடுதலைப்பணி அளப்பெரியது.
வை.சச்சிதானந்தசிவம் (ஞானதரன்) அவர்களின் இனப்பற்றுக்கும், விடுதலை பற்றிக்கும் மதிப்பளித்து அவரது நற்பணிகளை கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன்.
சுய வாழ்வின் சுகபோகங்களைத் துறந்து தேச விடுதலை என்னும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை அவர்கள் எமது தேசத்தின் ஆன்மாவில் நீங்காத நினைவுகளாக காலமெல்லம் நிலைத்திருப்பார்கள்.
-----------------------
இவரிற்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கலாகீர்த்தி என்ற விருதினை வழங்க அழைத்தபோது திரு. ஞானரதன் அவர்கள் அதனை வாங்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
Sep 6, 2008
Aug 27, 2008
மாமனிதர் ஜெயக்குமார்
இவரைப்பற்றி அதிகம்பேர் அறிந்திருக்க மாட்டீர்கள். சாவுச் செய்தியையும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளையும் தவிர்த்து இவர் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

தனது இருபதுகளில் இங்கிலாந்து சென்று பொறியியற்றுறை உட்பட்ட பட்டப்படிப்புக்களை நிறைவுசெய்து தாயகம் திரும்பினார். பின் 1982 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார். அதன்பின் நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் தங்கிவிட்டார். 1984 இல் திருமணம் முடித்தார். மகனொருவர் இருக்கிறார்.
அவுஸ்திரேலியாவிலிருந்த ஈழத்தமிழர்களை ஒருங்கிணைப்பதிலும், ஈழப்போராட்டத்தோடு மக்களை ஒன்றிக்க வைப்பதிலும் அயராது உழைத்து உறுதியான கட்டமைப்பொன்றை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தினார். எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி, ஏற்கனவே இருந்த அமைப்புக்களை ஒருகுடையின்கீழ் ஒருங்கமைத்து, சாகும்வரை அயராது உழைத்தவர் இவர். அவுஸ்திரேலியா மட்டுமன்றி நியூசிலாந்து உட்பட்ட தென்துருவ நாடுகள் அனைத்திலும் தமிழர் அமைப்புக்களின் உருவாக்கத்துக்கும் அவற்றின் ஈழப்போராட்டச் செயற்பாட்டுக்கும் அடித்தளமிட்டவர் இவரே. இன்று தென்துருவப் பகுதியில் ஈழத்தவரின் அரசியல் அமைப்புக்கள் வலுவாகவும் செயற்றிறன் மிக்கனவாகவும் இருக்கிறதென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களின் அயராத உழைப்பிலும் வழிகாட்டலிலும் வந்த வளர்ச்சியே.
மற்றநாடுகளின் புலம்பெயர்ந்தவர்களோடு ஒப்பிடும்போது தென்துருவ ஈழத்தவர்களின் புலப்பெயர்வு வித்தியாசமானது. தொடக்கத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் இருக்கவில்லை. படித்த, மேல்தட்டு வர்க்க யாழ்ப்பாணத்தவர்களே பெரும்பாலானவர்கள். அதுவும் இனப்பிரச்சினை கூர்மையடைய முன்பே புலம்பெயர்ந்தவர்கள் பலர். பின்னர்தான் படிப்படியாக - அதுவும் மற்றநாடுகளோடு ஒப்பீட்டளவில் மிகக்குறைவாக ஈழஅகதிகள் தென்துருவத்துக்குப் புலம்பெயர்ந்தனர். எண்பதுகளின் தொடக்கத்தில் இப்பகுதியில் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதில் இருந்திருக்கக்கூடிய சிக்கலை, கடினத்தன்மையை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். அந்தநேரத்திலும் சரி இப்போதும் சரி அவுஸ்திரேலியாவில் சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளநிலையில், அதுவும் ஜே.வி.பியின் தீவிர ஆதரவுத்தளமாக இருக்கும் நிலையில், அரசியல் மட்டத்தில் மிகநெருக்கமான தொடர்புகளையும் பரப்புரைகளையும் சிங்களவர் பேணிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவை மிகப்பெரிய சிக்கலுக்குரிய விடயம்தான். ஆனாலும் திரு. ஜெயக்குமார் அவர்கள் திறமையாக அதைச்செய்தார். கல்விச் சமூகத்தை ஈழப்போராட்டத்துக்கு உறுதுணையாக்கினார்.
பல்கலைக்கழகமொன்றில் முழுநேர விரிவுரையாளராகத் தொழில்புரிந்தார். அதைவிட ஈழப்போராட்டத்துக்கான தனக்குரிய பணியை மேலதிகமாகச் செயதார். அவுஸ்திரேலியா என்று எடுத்துக்கொண்டாலே ஒவ்வொரு மாநிலத்துக்குமான பயணத்தூரம் மிகமிக அதிகம். அதைவிட நியூசிலாந்து, பீஜி, மொறீசியஸ, மலேசியா என்று தனது பணிக்குரிய இடங்கள் அனைத்துக்கும் இடைவிடாது பயணம்செய்து தன்பணியைச் சிறப்புற ஆற்றினார். பயண அலைச்சல்களிலேயே அவர் பலநாட்களைக் கழித்தார்.
2004 ஆம் ஆண்டு ஆசியாவைத் தாக்கிய ஆழிப்பேரலையில் தமிழீழமும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டது. உலகத்தின் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட பகுதியாக அது இருந்தது. சரியான முறையில் உலக உதவிகள் சென்று சேரவில்லை. தமிழீழம், ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து மீண்டது அதன் தளத்திலும் புலத்திலிருமிருந்த தமிழர்களால்தான். அந்த அனர்த்த நிவாரணப்பணியில் முக்கிய பாத்திரம் திரு. ஜெயக்குமார் அவர்களுக்குமுண்டு.
ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்தபோது திரு ஜெயக்குமார் அவர்கள் தாயகத்தில்தான் நின்றார். உடனடியாகவே களத்திலிருந்து துரிதமாகச் செயற்பட்டார். துருவப் பகுதியிலிருந்து மருத்துவ உதவி, தொண்டர் சேவை, பொருளுதவி என்பவற்றைத் திரட்டி தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்தார். அனைவரையும் ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தி உதவிகளை உரியமுறையில் விரைவாகக் கிடைக்கும்டி நடவடிக்கையெடுத்தார். அவரின் வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிகளின் ஒருபகுதி சிறப்பாக நடைபெற்றது.
யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பலர் தாயகப்பகுதியில் தமது புலமையைப் பகிர்ந்திருந்தனர். நுட்பியல் கற்கை நெறிகளில் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்த புலமையாளர்கள் கலந்துகொண்டு கற்பித்தார்கள். அவ்வகையில் தென்துருவ நாடுகளில் இருந்தும் கணிசமான பங்களிப்பு வழங்கப்பட்டது. திரு. ஜெயக்குமார் அவர்கள் இவற்றை ஒருங்கிணைத்துச் சரிவரச் செய்திருந்தார். பலநவீன நுட்பங்களைத் தாயகத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் பெரும்பங்காற்றினார். (காகம் இருக்கப் பனங்காய் விழுந்த கதையாக, இவர்தான் புலிகளுக்கு விமானத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தார் என்று ஏசியா ரிபியூன் உட்பட்ட புலியெதிர்த்தரப்பு இப்போது புலம்பிக்கொண்டிருப்பது வேறுகதை)
தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இவர்மேல் எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார் எனபதை இவரின் இறப்பின் பின்னான கதைகளில் இருந்து அறிந்துகொள்ள முடியும். இவரது இறுதி வணக்க நிகழ்வில் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் வன்னியிலிருந்து வழங்கிய இரங்கலுரையை ஒளிபரப்பினார்கள். அவற்றில் திரு ஜெயக்குமார் அவர்களின் இழப்பு அவர்களிடத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளை உணரமுடிந்தது.
_____________________________________
திரு. ஜெயக்குமார் அவர்கள் ஓர் இசைக்கலைஞனும்கூட. எண்பதுகளின் தொடக்கத்தில் "மெல்பேண் மெல்லிசைக்குழு" என்ற பேரில் ஈழத்து இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய இசைக்குழுவில் திரு. ஜெயக்குமார் அவர்கள் கிட்டார் வாத்தியக்கலைஞராகப் பங்காற்றினார். (ஆட்கள் மாறிவந்தாலும் இக்குழு இப்போதும் செயற்றிறனுடனுள்ளது).
திரு. ஜெயக்குமார் அவர்களின் வாழ்வில் சகமனிதர்களுக்கு இணையாக நீங்கா இடம்பெற்றவை மீன்கள்.
மீன்வளர்ப்புப் பைத்தியம் என்றே சொல்வார்கள். தனது நாலாவது வயதில் ஹோர்லிக்ஸ் போத்தலொன்றில் மீன் வளர்த்தது தொடக்கம் இறக்கும்வரை மீன்கள்! மீன்கள்! மீன்கள்! என்றே வாழ்ந்தார்.
இவருக்கு நெருங்கியவர்களின் கூற்றுப்படி யாழ்ப்பாணத்தில் தனது பாடசாலைக் காலத்தில் ஐந்து மீன்தொட்டிகள் வைத்திருந்தவர், இங்கிலாந்தில் பொறியியற்றுறையில் பட்டப்படிப்பு முடித்துத் தாயகம் திரும்பும்போது முப்பது மீன்தொட்டிகளில் பல அபூர்வ வகை மீன்களை வளர்த்துவந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மெல்பேணில் அவரது இறுதிக்காலம்வரை மீன்கள் வளர்த்து வந்தார்.
சிறந்த நிர்வாகி. அதிர்ந்து பேசாதவர். எந்நேரமும் ஒரு புன்சிரிப்போடுதான் அவரைப்பார்க்கலாம். பிரச்சினைகளை, கவலைகளை, அழுத்தங்களை வேறுயாருக்கும் காட்டிக்கொண்டதில்லை. ஈழப்போராட்ட அரசியலில் இயல்பாகவே எதிர்த்தரப்பினரிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்கள், கேலிகள், ஆத்திரமூட்டும் செயற்பாடுகள், விமர்சனங்கள் என்பவற்றைப் பொறுமையாகவே எதிர்கொண்டார். எச்சந்தர்ப்பத்திலும் ஆத்திரப்பட்டோ நிதானமிழந்தோ செயற்பட்டதில்லை.
மிகநேர்மையான நல்லமனிதனை, சிறந்த நிர்வாகியை, கடுமையான உழைப்பாளியை, தென்துருவத்தில் ஈழப்போராட்ட அரசியற் செயற்பாட்டுக்கு அத்திவாரமிட்டவரை, அதைத் திறமையாகக் கட்டியெழுப்பியவரை இன்று ஈழத்தமிழினம் இழந்துநிற்கிறது. ஈழப்போராட்டத்தின் புலம்பெயர்தமிழர் செயற்பாட்டுக்கான அத்தியாயத்தில் மாமனிதர் திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு என்றுமே நீங்கா இடமுண்டு.
Aug 20, 2008
மாமனிதர் குமார் பொன்னம்பலம்
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள் நினைவுமலர்கள் தமிழிலும் வெளிநாடுகளில் ஆங்கிலத்திலும் வெளியாகியிருப்பதை பலர் அறிவார்கள். ஆனால், ஆங்கில நினைவு மலர்களில் வெளியானவற்றை பலர் அறியாமல் இருப்பார்களென நினைத்து சிலவற்றை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.குமார் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மாபெரும் குரல் மௌனிக்கச் செய்யப்பட்டது. (கரென் பார்கர் - பிரதம ஐ.நா. பேராளர் சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேய சட்டக் கருத்திட்டம்)
சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேயச் சட்டக் கருத்திட்டம் எனும் எமது அமைப்பானது 18 வருடங்களாக இலங்கையில் நிலவிவரும் மோதலில் மனித நேயச்சட்ட நியதிகள் பிரயோகம் செய்யப்பட வேண்டுமென்பதற்காகப் பணியாற்றியுள்ளது.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையிட்டு ஒரு மதிக்கத்தக்க பேச்சாளராக விளங்கினார். அவர் எங்கள் அமைப்பினால் மட்டுமல்ல, உலகெங்குமுள்ள இதுபோன்ற அநேக மனித உரிமைகள் அமைப்பினாலும் மதிக்கப்பட்டார்.
சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள உலகளாவிய கிறிஸ்தவ பேரவையில் அவரைக் கௌரவிக்கும் வகையில் எமது இணை அனுசரணையுடன் ஒரு ஞாபகார்த்த வழிபாட்டை நடாத்துகின்றோம். இதில் மாபெரும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து கொள்கின்றன. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் நடுநிலையம் அமர்வு கொண்டிருக்கும் ஜெனீவாவில் இது நிகழ்த்தப்படுவதும் மிகப் பொருத்தமானதே.இங்கு இடம்பெறும் ஐ.நா. அமர்வுகளில் மனித உரிமைகளுக்கான ஒரு மாபெரும் வழக்கறிஞராக அவர் திகழ்ந்தார். அநேக தடவைகளில் எமது அமைப்பினைப் பிரதிநிதித்துவம் செய்த அவர் நடைமுறையில் உள்ள மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்ட நியதிகளின் ஒளியில் இலங்கைத்
தீவில் தமிழர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சொற்திறன் மிக்க ஒரு பேச்சாளராக விளங்கினார். தெளிவான பேச்சுத்திறனுடன் எப்போதும் மனித உரிமைகளின் காப்பாளராக விளங்கிய குமார் இலங்கையில் நிலவும் முரண்பாட்டிற்குத் தீர்வுகாணுமுகமாக மிதவாதத்தினதும் நியாயத்தன்மையினதும் குரலாகத் தனித்தே செயற்பட்டவராக எம்முன் நிற்கிறார். அவரது நாவன்மையையும், கனவான் பண்பையும் இன்மகிழ் நோக்கையும் அர்ப்பண சிந்தையையும் நாம் என்றும் மறவோம்.
தமிழ், சிங்களம் ஆகிய தன் தேசிய அடையாளம் இரண்டையும் வெளிப்படுத்துவதற்கான தனது போராட்டத்தில் இலங்கையானது ஒரு பிரதான பங்கேற்பாளரை இழந்துள்ளது. உடன்பாடொன்று எட்டப்படக் கூடியதாயிருந்த சமயத்தில் சிங்களத் தீவிரவாதப் போக்குடையோர் அவரைப் படுகொலை செய்வதையே தமது தெரிவாகக் கண்டிருப்பது எத்துணை கவலையளிப்பதாக உள்ளது. இலங்கையில் தமிழர்களின் நிலை எத்தகையது என்பதை உலகமாவது அறிந்துள்ளது எனவும் அந்த வகையில் குமாரின் வாழ்வு வீணாகிப் போய்விடவில்லையெனவும் நாம் நம்புகிறோம்.
தனது மனித மற்றும் மனிதநேயச் சட்ட உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் எனக் கோருவதில் சர்வதேச சமூகம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், இனப்பிரச்சினையில் குமார் பொன்னம்பலத்தின் மாபெரும் பங்களிப்பை எவரும் மறந்து விடக்கூடாது.
2000 ஆம் ஆண்டில் இலங்கைத்தீவின் சமாதானத்தை நாடும் உங்கள்,கரென் பார்க்கர் பிரதம ஐ.நா. பேராளர் சர்வதேசக் கல்வி அபிவிருத்தி / மனிதநேயச் சட்டக் கருத்திட்டம் ஐக்கிய நாடுகளால் (செயலாளர் நாயகத்தின் பட்டியலில் இடம்பெற்றது. நம்பிக்கைச் சான்றளிக்கப்பட்ட ஓர் அமைப்பு).
நீதிபதியினதும் வழக்கறிஞர்களினதும் சுதந்திரத்திற்கான நடுநிலையம், ஜெனீவா (சுவிற்சர்லாந்து)
இலங்கை: வழக்குரைஞர் குமார் பொன்னம்பலத்தின் கொலை குறித்துப் பூரண விசாரணையொன்றை நடாத்துமாறு சட்ட வல்லுநர்கள் அரசாங்கத்தைக் கோருகின்றனர்.
2000 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்து ஜெனீவாவில் உள்ள நீதிபதிகளினதும் வழக்குரைஞர்களினதும் சுதந்திரத்திற்கான நடுநிலையம் (CIJL) இலங்கை அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. பொன்னம்பலம் அவர்கள் ஐந்து தடவைகள் சுடப்பட்டுள்ளாரெனப் பிரேத பரிசோதனையறிக்கை தெளிவாகத் தெரிவித்தது.
பொன்னம்பலம் பிரசித்திபெற்ற ஓர் எதிர் வழக்குரைஞராகத் திகழ்ந்தார் என்பதையும் மனித உரிமைகள் சார்ந்த அநேக வழக்குகளில் தம் கட்சிக்காரர்களுக்காக வாதாடியுள்ளார் என்பதையும் CIJL நிறைவு கூர்ந்தது. தமது கட்சிக்காரர்களின் பயனுறுதியான பாதுகாப்புக்காக வாதிட்டார் என்பதற்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டாரெனக் கூறி CIJL வருத்தம் தெரிவிக்கிறது.
பல்வேறு விடயங்களில் பொன்னம்பலம் தன் மனதைத் திறந்து பேசினார். அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசாங்கத்தை எப்போதும் மகிழ்விப்பதாக இருந்ததில்லை. உண்மையில், 1998 நவம்பர் 17 ஆம் திகதி தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கிய நேர் காணலையடுத்து அவரைக் கைதுசெய்வதற்கான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோது 1998 டிசம்பரில் இஐஒஃ அவர் சார்பாகத் தலையிட்டது.
பொன்னம்பலம் அவர்களின் படுகொலை குறித்து முழுமையான விசாரணையொன்றை ஏற்பாடு செய்யுமாறும் குற்றவாளிகளை நீதிக்குமுன் கொண்டுவரப் பயனுறுதியான, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கையின் சட்டமா அதிபரை CIJL வற்புறுத்தியது.
அமெரிக்க ஜுரர்கள் சங்கத்தின் பிரகடனம்
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் ஆலோசகர் அந்தஸ்துடைய அரசசார்பற்ற நிறுவனமான அமெரிக்க ஜுரர்கள் சங்கம் இலங்கையில் கொழும்பு வெள்ளவத்தையில் தை 5 ஆம் திகதி குமார் பொன்னம்பலம் என எல்லோராலும் அறியப்பட்ட திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஜூனியர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டிக்கின்றது. பல ஆண்டுகளாக மனித உரிமைகளின் தீவிர செயற்பாட்டாளராக விளங்கிய திரு பொன்னம்பலம் கொழும்பில் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞராகத் திகழ்ந்தார். பொன்னம்பலம் நீண்டகாலமாகக் கொலை அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தமையும் எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. குமார் பொன்னம்பலம் அவர்களின் மரணமானது இலங்கைக்கும் தமிழ் சமூகத்திற்கும் துயர்தரும் ஓர் இழப்பாகும்.
புகழ்பெற்ற நிபுணத்துவம் வாய்ந்த ஒரு குற்றவியல் வழக்கறிஞர் என்ற வகையில் பொன்னம்பலம் மனித உரிமை மீறல்கள் காரணமாகத் துன்பத்திற்குள்ளான பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக எதிர் வழக்காடினார். மனிதவுரிமை வழக்குகள் சார்ந்த முக்கிய அறிக்கையையும் அவர் பதிவுசெய்து வைத்தார்.
சர்வதேச சமூகத்தின் மனித உரிமைகளுக்காகவும் பொன்னம்பலம் உரத்துக் குரல் கொடுத்தார். 1997 இலும் 1999 இலும் மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவில் இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான சித்திரவதை, தான் தோன்றித்தனமான தடுத்துவைப்பு, காணாமற்போதல்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்பவற்றை எதிர்த்து வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்தார். பல முக்கிய சர்வதேச சபைகள் மத்தியில், பிரசெல்ஸில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் உள்ள அரச நிறுவன உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேரூரையாற்றினார்.
பொன்னம்பலம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் என்பவற்றுக்காகத் துணிச்சலோடு தளராமற் போராடிய ஓர் வெற்றி வீரனாகத் திகழ்ந்தார். மனித உரிமைகள் குறித்து உரத்துப் பேச அவர் அஞ்சியதில்லை. இதற்காகத் தம் உயிரையே அவர் விலையாகக் கொடுக்க நேரிட்டது. இப்படுகொலையானது நீதிக்காவும் மனித உரிமைகளுக்காகவும் போராடும் அனைவருக்கும் துயர் தரும் ஒரு பேரிழப்பாகும்.
இக்காரணங்களின் நிமித்தம் ஈவிரக்கமற்ற, படுபாதகமான இச்செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்குமாறு அனைத்துத் தனிநபர்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், சுதந்திரமான விசாரணையொன்றை மேற்கொண்டு துயர் தரும் இம்மரணத்திற்குப் பொறுப்பாயிருப்பவர்களுக்கெத��
�ராக புறம்பான படுகொலைகள் பற்றிய விசேட புலன் விசாரணையாளரான திருமதி அஸ்மா ஜஹாங்கீர் அவர்களை, இலங்கை அரசாங்கத்தின் உதவியைப் பெற்று இக்குற்றச் செயல்குறித்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதிக்குமுன் நிறுத்துமாறு விதந்துரைக்கின்றோம்.
தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தால் இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கெதிராக குரல் கொடுப்பதற்காகதான் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்று குமார் எப்போதும் எம்மிடம் கூறிவந்த போதிலும், இந்த ஆபத்துக் குறித்து நாம் முனைப்புடன் விழிப்புணர்வு கொண்டிருந்த போதிலும், அவரது படுகொலை எமக்கொரு பேரதிர்ச்சியாகவே இருந்தது. என்னால், அதை நம்ப முடியவில்லை.
முதன்முதல் குமாரை நான் லண்டனில் ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். அதனையடுத்து, ஐரோப்பாவிலும் மேலும் பல கனங்களிலும் பல்வேறு நாடுகளிலும் அநேக மனித உரிமை நிகழ்வுகள், கருத்தமர்வுகள், செயலமர்வுகள் என்பவற்றின் போதும் அவரைச் சந்தித்துள்ளேன். கூட்டங்களில் பங்குபற்றிய, மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசியவாறு எங்கெங்கு குமார் பயணம் செய்தாரோ, அங்கெல்லாம் அவரது சக்தி, அவரது பற்றுறுதி, அவரது துணிவு என்பவற்றால் எழுச்சியூட்டப்பட்ட அவரைச் சுற்றிவர இருப்பவர்களில் ஒரு மேலதிகசக்தியும் தன்னம்பிக்கையும் காணப்பட்டது.
மனிதஉரிமைகள் தொடர்பான பல்வேறு விடயங்களில் குமாருடன் பணியாற்றக்கிடைத்தமையானது ஒரு மாபெரும் வரப்பிரசாதமாகும். அவரது ஆழ்ந்த இறை நம்பிக்கையும் மற்றும் அனைத்தையும் அவர் தம் மனச்சாட்சிப்படியே செய்து வந்தார், என்ற உண்மையும் கருத்தைக் கவர்வதாகவும் உணர்ச்சியூட்டுவதாகவும் இருக்கின்றன. மனித உரிமை தொடர்பிலான தன் நடவடிக்கைகளின் பொருட்டுத் தன் உயிருக்கு உலைவைக்கப்படலாம் என்பதை முழுமையாக அறிந்து கொண்டே அவர் தம் பணியில் ஈடுபட்டார்.
மனச்சான்றின்படி வாழ்வதில் அவர் கொண்டிருந்த இந்த உறுதியான நிலைப்பாடானது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளை மதித்தல், அவர்களது சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி அங்கீகரித்தல், மற்றும் வடக்கு, கிழக்கில் தமது சொந்தத் தாயகத்தில் பாதுகாப்பாக வாழவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ளல் என்பவற்றால் மட்டுமே நாட்டிலுள்ள மோதலுக்கு நிலையான தீர்வு ஒன்றைக்காண முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையையும் மனத்திட்டத்தையும் உள்ளடக்கியிருந்தது.அவரது இழப்பையிட்டு உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெளியிடப்பட்ட துயர் பகிர்வுகளில் எதிரொலிக்கின்ற உணர்வலைகள் காட்டுவதிலிருந்து அவரது படுகொலையே அநேக தமிழர்களை தெளிவான இத்தீர்மானத்திற்கு வரச் செய்துள்ளது தெரிகிறது.
குமாரை நேரடியாகச் சந்தித்த அனைத்து மட்டங்களிலுமான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச சபைகள் என்பவற்றின் ஆர்வலர்கள் அர்ப்பணத்துடனான அவரது பணியை மெச்சுகின்றனர். எப்போதும் அவரது துணைவியார் யோகி சகிதம் வலம்வரும் குமார் மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நீதி என்பவை குறித்தான உணர்ச்சி ததும்பும் தனது தாகத்தினை வெளிப்படுத்திப் பேச ஒருபோதும் தயங்கியதில்லை. சர்ச்சைகளைத் தவிர்த்து வசதியான ஒரு வாழ்வை அவர் வாழ்ந்திருக்கலாம். அவரது மனைவி யோகியும் தனது வாழ்க்கைத் தொழிலைத் தங்குதடையின்றி நடத்தியிருக்கலாம். இருந்தும், பற்பல இடங்களுக்கும் சென்று குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுக்க அவர்கள் ஒரு போதும் தயங்கியதில்லை. தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கம் இழைத்துவரும் அட்டூழியங்கள் தொடர்பில் குமார் நம்பகமான உறுதியான ஒரு வழக்கைச் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவருவார்.
குமார், குடும்பத்தின் மீது பற்றுக் கொண்ட ஒரு மனிதராக விளங்கினார். தனது மகனையும் மகளையும் தொலைபேசியில் அழைத்து அவர்களது வீட்டில் உள்ளோர் அனைவரதும் சுகநலம் குறித்தும் விசாரிக்காமல் ஒருநாள் கூடக் கழித்தது கிடையாது. கடவுளையும் உண்மையையும் நீதியையும் நேசித்த சிறந்த ஒரு பண்பாளராக விளங்கிய அவர் இப்போது இல்லை. அவரை நாம் பெரிதும் இழந்து நிற்கிறோம். அவரது பிரிவு எமக்குப் பேரிழப்பாகும். இவ்விழப்பினால் முடிவில்லாத ஒரு சோகத்தினுள் நாம் தள்ளப்பட்டுள்ளோம். அவரது வாழ்வினால் தொடப்பட்டவர்களான யோகி, கஜேந்திரகுமார் மற்றும் மிருனாளினி, நண்பர்கள் மற்றும் மனித மாண்பு, நேர்மை மற்றும் பெறுமதி ஆகியவற்றின் விழுமியங்களைப் பேணி வளர்க்கத் தள்ளப்படும் உலகின் மூலை முடுக்கெங்கும் வாழும் அவரது பரந்துபட்ட மனித நேயக் குடும்பத்தினர் ஆகியோரின் மனங்களில் அவர் நினைவு என்றென்றும் வாழும்.
தொகுப்பு :கே.எம்.ரி.





No comments:
Post a Comment