Thursday, April 23, 2009

முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள்

முல்லைக் கடற்பரப்பில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் போது டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் நிற்கும் நிழற்படங்களை ஈழநாதம் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது. இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன்

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன்

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்

Nov 24, 2008

கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி


நேரம் நண்பகல் 12.00 மணியை கடந்திருந்தது. பக்கத்து தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது.''மகள் கதைக்கட்டாம்... "அப்பா தொலைபேசி எடுக்க ஓடோடிப் போனார். அப்பாவுக்காகவே காத்திருந்தவள் போல, அப்பா எடுத்ததும் அவள் கதைத்தாள்.

''வழமையான நலஉசாவல்..." தம்பி, தங்கச்சியின் படிப்பு பற்றிய கேள்விகள்...." எல்லாம் முடிய, ''நான் வேற இடம் போறனப்பா....அதுதான் எடுத்தனான்....,இனி எடுத்தால் தான் தொடர்பு....நீங்கள் எடுக்காதீங்கோ....சரி வைக்கிறன் அப்பா...."மகளோடு பேசிய நிறைவோடு அப்பா வந்தார். அம்மா இல்லாமல் போனதிலிருந்து அவளுக்கு எல்லாமே அப்பாதான்.

ஒரு முறை அவள் வீட்டுக்கு வந்து போனபோது அவளது உடமைப்பையிலிருந்த கடிதமும், படமும் அவள் யார் என்பதைப் பெற்றவரும் உடன் பிறப்புகளும் அறிந்து கொண்டார்கள். ''அவளது உணர்வுகள் மதிப்பளிக்க வேண்டும்" அப்பா உடன் பிறந்தோரை மதிப்பளிக்க வேண்டும்" அப்பா உடன் பிறந்தோரை அமைதிப்படுத்தினார். அதன் பின் நிறையக் களங்களில் பங்கெடுத்திருக்கிறாள்.

கடமை அழைக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் அவள் போய் வந்தாள். ஆனால், எங்கு நிற்கின்றாளோ அங்கிருந்து எப்படியாவது வீட்டோடு தொடர்பை ஏற்படுத்திவிடுவாள். இது அவளின் அன்பின் வெளிப்பாடு. அதே போல்தான், இன்றும் தான் வேறிடம் செல்வவதாக குறிப்பிட்டிருந்தாள். அப்பா, அதை பெரிதாக எடுக்கவில்லை.

மீண்டும் மகள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அன்று மாலை இரு போராளிகள் அப்பாவைத் தேடி வந்தார்கள். அப்பாவிடம் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். அப்பா நம்ப மறுத்தார். ''இன்று நண்பகல் நான் பிள்ளையோடு கதைத்தேன்... அவள் வேறிடம் போவதாக சொன்னாள்..." ஓமய்யா.... கதைத்திருப்பா... ஏனெண்டா மாலைல 3.30 ற்குத்தான் திருகோணமலைக் கடற்பரப்பில் அந்தக் கரும்புலித்தாக்குதல் நடந்தது..." ''தாக்குதலுக்கு அணியப்படுத்தி படகுகள் எல்லாம் கடலுக்கு இறங்கின பிறகுதான் உங்களோட மகள் கதைச்சிருக்கிறா..."வந்தவர்கள் சொன்னார்கள்அப்போதுதான் அப்பாவுக்கு ஓர் உண்மை புரிந்தது. ''தன் குடும்பத்தை காதலிப்பவளால்தான, தாய் தேசத்தின் மீது அன்பு வைக்க முடியும்"

முற்றும்....

Sep 13, 2008

கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்


2004ம் ஆண்டு 26 ஆம் நாள். ஆழிப்பேரலை அனர்த்தம் நம் மண்ணிலும் பல உயிர்களைக் காவு கொண்டதோடு, பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த அழிவுக்குள் மட்டக்களப்பு கதிரவெளியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த கடற் கரும்புலி கண்ணாளனின் குடும்பமும் சிக்கிவிட்டது. நிலைமையை அறிந்து அவனை அவனது ஊரிற்கு விடுமுறையில் அனுப்பியாயிற்று.

அங்கு அவனுக்காக பணிகள் நிறையவே இருந்தது. குடும்பத்தை நிமிர்த்தி, எஞ்சியவர்களுக்கான இருப்பிடம், உணவு, உடை, என அத்தியாவசியமான தேவைகளைக் கவனிப்பதில் இருந்து எல்லமே அவன்தான். வீட்டின் இல்லாமை போhக்க அவன் உழைக்க வேண்டியதாயிற்று…

ஆனால், முதன்மையான தாக்குதல் ஒன்றிக்காக பயிற்சித் திட்டங்கள் எல்லாம் நிறைவு செய்த நிலையில் அவன்… ஓர் அளவுகோலில் ‘’பாசம்’’இ ‘‘கடமை’’ என்றை இரண்டையும் நிறுவை செய்தான். அவனது மனச்சாட்சி முன் ‘‘கடமை’’ என்ற பக்கம் தாண்டு கொண்டது. அவன் முடிவெடுத்தான். தன் நிலைமையை அந்தத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பானவரிடம் சென்று கதைத்தான்.



‘‘நான் அந்த நடவடிக்கையைச் செய்யப் போறன்… இனி இந்த நடவடிக்கைக்காகப் புதுசா ஒருவருக்குப் பயிற்சி கொடுத்து வளர்த்தெடுக்க எவ்வளவு காலம் எடுக்கும்… என்னால இந்த நடவடிக்கையில் எந்தவொரு காலதாமதமும் ஏற்படக்கூடாது… ஆனா… என்ற குடும்பத்த நீங்கள் பார்க்க வேண்டும்…

குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டபோதும் அவன் தன் இலக்கிலிருந்து பின்வாங்காது தன் கடமையைச் சரிவரச் செய்தான். அவன் வேறுயாருமல்ல காலிமுகத் துறைமுகத்தில் வரலாறு எழுதிய கடற் கரும்புலிகளில் ஒருவரான கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்…

‘‘ஈன்ற பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’’ என்ற வள்ளுவன் கூற்றுக்கு எடுத்துக்காட்டான பெரு வீரனாய் கண்ணாளன்.

Sep 10, 2008

கடற்கரும்புலி மேஜர் கோபி

கடற்கரும்புலி மேஜர் கணெஸ்



Sep 6, 2008

கடற்கரும்புலிகள் கப்டன் மதன் மேஜர் வரதன்


கடலணையின் புதல்வர்கள் கரும்புலிகள் புவீந்திரன், மணியரசன்




Sep 3, 2008

கடற்கரும்புலி மேஜர் குமாரவேல்

கடற்கரும்புலி மேஜர் குமாரவேலின் உண்மைச் சம்பவத்தின் குறும்படம்

Aug 27, 2008

கடற்கரும்புலி கப்டன் பாலன்.

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.

1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் போராளிகள் சிலர் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். திருகோணமலையை நெருங்கியபோது எப்படியோ எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.

இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.

இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.

மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.

ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.)

கரும்புலிகள் நாளான இன்று நூற்றுக்கணக்கான சரித்தரங்களில் ஒன்றான கரும்புலி கப்டன் பாலனையும் அவனது இந்நெஞ்சையுருக்கும் சம்பவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அதேநேரம் இதுவரை வீரச்சாவடைந்த 332 கரும்புலிகளுக்கும், வெளிவராமல் உறங்கும் ஏனையவர்க்கும் இதய அஞ்சலிகள்.

Aug 25, 2008

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை


நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி காவல் செய்தது. இந்திய இராணுவத்திடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்தஇ படையணியின் மூத்த உறுப்பினர்களும் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.

கனரக ஆயுதங்களின் பலம் இல்லாத காலம் அது. எழுபத்தைந்து பேர் கொண்ட அணி காவல் செய்யும் பகுதியில் ஒரேயொரு பிறண் எல்.எம்.ஜியும் ஒரு ஆர்.பி.ஜியும் நின்ற காலம். எமது படைவலு இலகுரக ஆயுதக்காரர்களது சூட்டு வலுவிலும்இ மனோ வலுவிலும் பேணப்பட்டது. கையில் குண்டுகளுடனோஇ சுடுகலன்களுடனோ ஒருவர்இ இருவராக முன்னே போய் பகைக் காப்பரண்களை நெருங்கித் திடீர்த் தாக்குதல் செய்து எதிரியை நிலைகுலைய வைப்பதுதான் அப்போது எமது முக்கிய வேலை.
நைற்றிங்கேள் இதில் மிகவும் தேர்ந்தவர். எதிரி ஏவும் இருரவைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேறவும் பின்னகரவும் அவரால் முடியும் என்று எங்களில் பலரால் அவரது செயல்கள் சொல்லப் படுவதுண்டு. பலாலியின் செழித்த வாழைமரங்களில் ஒன்றுமட்டும் போதும் எதிரியின் கண்ணில் படாமல் இவருக்குக் காப்பளிக்க. அவ்வளவு மெல்லிய உடல்வாகு. தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத கடும் துணிச்சல். சிறிதும் குறிவழுவாத சூடு.

1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாங்குளத்தில் அமைந்திருந்த சிறிலங்காப் படைத்தளத்தை அழிப்பதற்கான பயிற்சிக்கு திறமையாளர் பலர் தேர்ந்தெடுக்கப் பட்ட போது பட்டியலில் நைற்றிங்கேள் என்ற பெயர் முன்னணியில் இருந்தது. அப்போது அவர் ஏழுபேர் கொண்ட அணியின் பொறுப்பாளர். இவரின் மேலான பொறுப்பாளர் பலாலியிலிருந்து நைற்றிங்கேளைப் போகவிடமாட்டேன் என்று சிறப்புத் தளபதியிடம் ஒற்றைக் காலில் நின்றார். சண்டையொன்றில் தான் விழுந்தால்இ வெற்றிடத்தை நிரப்ப நைற்றிங்கேள் வேண்டும் என்ற அவரின் பிடிவாதமே கடைசியில் வென்றது.

என்னுடைய அணியில் நைற்றிங்கேள் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இவர் ஒருவரிடம் மட்டுமல்லஇ அணித்தலைவிகள் பலரிடமும் இருந்தது. மிகச் சிறந்த சூட்டாளர் என்பதால் இவருக்கு ஆர்.பி.ஜி வழங்கப்பட்டது. ஏவப் படுகின்ற எறிகணைகள் ஒவ்வொன்றும் இலக்கை சரியாகத் தாக்கவேண்டும். “தவறிவிட்டது” என்ற சொல்லுக்கு அகராதியில் இடமில்லை. எனவே ஆர்.பி.ஜியும் நைற்றிங்கேளும் தோள் சேர்ந்தனர்.

விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் புகழ்மிக்கஇ ஆகாய கடல் வெளிச்சமர் பரந்த வெளியில் விரிந்த போது கடலால் தரையிறக்கப் பட்டு இரைந்து வந்த ராங்கிகளிடமிருந்து எமது ஆளணியைப் பாதுகாக்க ஆர்.பி.ஜியின் பலம் தேவைப் பட்டது. எந்த அணியிலும் இல்லாது நைற்றிங்கேள் தனியாக இயங்க விடப் பட்டிருந்தார். “நைற்றிங்கேளை அனுப்பு” என்ற கட்டளை களத்தின் ஒரு முனையிலிருந்தும்இ கேணல் பால்ராஜிடமிருந்தும் வரும். மறுமுனையிலிருந்து கேணல் யாழினியிடமிருந்தும் (விதுஷா)
வரும். எங்கு ராங்க் இரைந்ததோஇ அங்கு அவர் தேவைப் பட்டார். எத்திசையில் அவர் போனாரோஇ அங்கு அதன் பின் ராங்கின் இரைச்சல் கேட்காது.

களத்தின் தேவைக்கேற்ப கடுகதியாக விரையும் நைற்றிங்கேள்இ துளியும் தற்பெருமை இல்லாதஇ எப்போதும் எவரையும் கனம் பண்ணுகின்ற தன் இயல்பில் கடைசிவரை வழுவவில்லை. 1993ஆம் ஆண்டில் பூநகரியிலிருந்த சிறிலங்காப் படைத்தளத்தைத் தாக்குவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். நடவடிக்கையில் இறங்கப் போகும் ஆர்.பி.ஜிக்களின் பொறுப்பாளர் நைற்றிங்கேள்.
பூநகரிப் படைத்தள இராணுவம் அதற்கிடையில் முன்னகரப் போவதற்கான அறிகுறிகள் தென்படஇ மறிப்பதற்கு பூங்கா தலைமையில் பெண் போராளிகளின் அணியொன்று போனது. மறிப்பு வேலியாகக் காப்பரண்களை அமைத்தது. ஆர்.பி.ஜிக்களுக்கான நிலைகள் மிகநேர்த்தியாக நைற்றிங்கேளின் வழிநடத்தலில் அமைக்கப் பட்டுஇ பார்வையை ஈர்த்தன. நிலைகளைப் பார்வையிட வந்தார் கேணல் சொர்ணம். அவரின் கவனத்தையும் அந்நிலைகள் ஈர்த்தன.

“ஆர் உங்கட ஆர்.பி.ஜி பொறுப்பாளர்?”
கேணல் சொர்ணத்தின் முன்இ காற்றிலாடும் கழுகுபோல வந்துநின்ற நைற்றிங்கேளைப் பார்க்க அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“எத்தினை ஷெல் அடிச்சிருக்கிறீங்கள்?”

“இருபத்திமூண்டு”
அதிர்ச்சி தரும் பதில்.

“எங்கெங்கே அடிச்சீங்கள்?”

“ஆனையிறவில பதினெட்டு. அதுக்குப் பிறகு வேற வேற சண்டையளில அஞ்சு”

நைற்றிங்கேளைக் கூர்ந்து பார்த்தவர்இ
“நீங்கள்தான் அந்த நைற்றிங்கேளோ?”
என்றார்.

இதுபோதும். இதற்குமேல் நைற்றிங்கேளைப் பற்றி நாம் வேறெதுவும் பேசத் தேவையில்லை. போன சண்டைகள் எதிலுமே அவர் காயப்பட்டதில்லை. தனது இலக்கைத் தாக்கி விட்டுஇ சிறு கீறல் கூட இல்லாமல் திரும்பி வந்த ஒவ்வொரு முறையும்இ “ஏதோ ஒரு சண்டையில் நான் முழுசாப் போறதுக்குத்தான் இப்படிக் காயங்களேயில்லாமல் வாறன்” என்றவர் பூநகரி சிங்களக் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் காலில்லாமல் வந்தபோதுஇ சற்று நிம்மதியடைந்தோம். ஆள் போவதைவிடக் கால்போனது பரவாயில்லையென்று. ஒற்றைக் காலோடு தன் வாழ்வின் அடுத்த கட்டம் இதுதான் என்பதை அவர் முடிவெடுத்த போது நாம் கவலை அடையவில்லை. கடலிலும் அவரின் வேகம் தணியவில்லை எனப் பெருமைப்பட்டோம்.

-மலைமகள் -

கடற்கரும்புலி மேஜர் நித்தியா

சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா.
எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான சிரிப்பு. சளைக்காமல்இ களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான்.

பயிற்சி செய்வார். களம் செல்வார்.
காயத்தோடு வந்து ஓய்வெடுப்பார்.

மறுபடி பயிற்சிஇ சண்டைஇ காயம்இ.......இ .......இ என்று ஒரு தொடர் சங்கிலி.
அமைதியான இயல்பைக் கொண்ட அவர் கண்டிப்பான அணி முதல்வியாக அல்லாமல்இ அன்பான அணி முதல்வியாகவே தனது முதற் களமான 1992ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றிலிருந்து ஒட்டகப்புலம் வரையான நூற்றைம்பது காப்பரண்கள் மீதான தாக்குதலில் தொடங்கிஇ 1997இல் ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கை வரை எம்மோடிருந்தார்.
பயிற்சி செய்தால்இ தூரம் நடந்தால் கால் வீங்கும் என்று தெரிந்து கொண்டே சளைக்காமல் எல்லாவற்றிலும் ஈடுபட்ட நித்தியாவினுள் கரும்புலிக் கனவு மொட்டவிழ்ந்து வாசம் வீசியபோதுஇ எங்களுக்குத் தெரிந்துவிடஇ “என்ன நித்தியாஇ கரும்புலிப் பயிற்சி செய்யிற நிலைமையிலா நீ இருக்கிறாய்” என்ற நண்பிகளின் அக்கறையான கேள்விக்கும் சிரிப்பையே பதிலாகத் தந்துவிட்டுஇ அவர் போய்விட்டார்.

-மலைமகள் -

Aug 16, 2008

கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி




தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

"இந்த வாறன். இந்தா வாறன்" உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, "விடாமல் அடியுங்கோ" என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப்பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.

தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் "பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது" எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.

சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமைமிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், "அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்" என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.

"அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்." கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.

இந்தக் காலம் அமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.

முல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்டும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.

முறியடிப்புத் நடாத்தத் தொடங்கினோம். முறையான போடு, ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.

இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில்க் காட்டியவாறு:

"அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்." அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.


முல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டு, பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூட, போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.

அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடாநாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர 'பிறைற் ஓவ் சவுத்' என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டார்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.

அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.

நாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து 'பிறைற் ஒவ் சவுத்' என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்மை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.

சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.

'பிறைற் ஒவ் சவுத்' மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுதத சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார்படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.

கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், "அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால், அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப்பெடுத்து திறமையாகச் செய்வார்."

எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.

வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை...

கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு வழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணத்தவாறு.

பொருது களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்... பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்ட அசைய மறுக்க, படகை; கைவிட வேண்டிய நிலை.

எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப்பேச்சின்றி எமை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களத படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.

மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர உதிரிப்படகு வந்து அந்தப் படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.

ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்த வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.

அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். "படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ...? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ...?" இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.

மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.

அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப்; படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது. அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய், ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்...

கரும்புலி மேஜர் சிறிவாணி



அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால், அவளது அழுகைக்கான காரணம் சிலருக்குத்தான் தெரிந்திருந்தது.

அந்த அழுகையில் ஏதோ ஒரு வேண்டுதல் இருந்தது. அவள் கலங்கும் விழிகளில் என்னவோ எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.

அவளது வேண்டுதல்களும் எதிர்பார்ப்புகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தாக்குதலுக்குப் புறப்படுகின்ற அணிகளோடு தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்த அழுகை. இதைவிட அவள் எதற்காகவும் கண் கலங்குவதில்லையே.

அவள் தன்னுடன் நிற்கின்ற அணிகள் செல்லும் சண்டைகள் அனைத்திற்கும் தானும் சென்றுவரவேண்டும், தன்னால் அதியுச்சமாய் தேசத்திற்கு எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவிட வேண்டும் என்ற ஆவலும் தான் நிறைந்திருந்தது.

அந்த ஆவலும் சுறுசுறுப்பும் அவள் இயக்கத்தில் இணைந்த நாளிலிருந்து என்றும் குறைந்ததே இல்லை. அணிகள் வேவிற்காகவோ அல்லது தாக்குதலுக்காகவே புறப்படுகிறது என்றால் அவள் ஆவல் மேலெழ தானும் அந்தக் களங்களிற்குச் செல்லவேண்டுனெத் துடித்துக் கொண்டிருப்பாள். அவளின் இடைவெளியில்லாத வேண்டுதலினால் பொறுப்பாளர் அவளிற்கு அந்த தாக்குதலில் சந்தர்ப்பம் கொடுத்தால் அவளது முகம் அடுத்த கணமே எண்ணற்ற மகிழ்ச்சியால் மலரும். புன்னகை தவழும் முகத்தோடு மற்றவர்களிற்கும் சிரிப்பூட்டிக் கொண்டு தானும் சிரித்து கலகலப்பாக இருப்பாள். இப்படி சண்டை ஒன்றிற்குச் செல்வதற்காய் சண்டை செய்பவள்தான் ஸ்ரீவாணி.

அவள் அதிக உயரம் இல்லாத தோற்றம், சிரித்து எல்லோரோடும் பழகுகின்ற சுபாவம். மற்றவர்களைப் புரிந்து கொண்டு அன்பாய்ச் சண்டை செய்வது, அவர்களைக் கோபப்படுத்தி பின்பு அன்பு வார்த்தைகளால் நெகிழச்செய்து, தாயாய் அரவணைக்கும் இயல்பு, அடிக்கடி மகிழ்வாய்க் குறும்பு சொல்லி எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்கவேண்டும் என்ற துடிப்பு எல்லாம் அவளிற்கு உரிய பண்புகள்.

சிரித்து கலகலப்பாய் அவள் திரிகின்ற போது மனதில் சிறுதுளிக் கவலையும் இல்லாதவளைப் போல் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும் அவளிற்கு மட்டுமே அடையாளம் தெரியும் சோகங்கள் எத்தனையோ..?!

அவள் ஊரை விட்டு இயக்கத்திற்குப் புறப்பட்டு பத்து வருடங்கள் ஆகப்போகின்றன. இந்த நீண்ட கால இடைவெளியில் மீண்டும் ஒரு தடவை அவள் நேசித்த ஊரையோ வீட்டார்களையோ பார்க்க முடியவில்லை. இந்த ஏக்கம்தான் மழை விட்ட பின்னும் சூழ்ந்திருக்கும் கருமேகமாய் நினைவில் எங்கும் படர்ந்திருந்தது. என்ன செய்வது? இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அவளின் ஊரும் உறவுகளும். விடுமுறையில் சென்றாலும் அவள் எப்படி அவளின் 'கழுதாவளை' கிராமத்தைச் சென்று பார்ப்பாள்? அங்கிருக்கும் உறவுகளோடு எப்படிக் கதைப்பாள்? அதுதானே பகலில் போராளிகள் நடமாட முடியாத இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமாயிருக்கிறதே.

அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும்... அவர்களோடு பேச வேண்டும் என்ற மனக் குமுறலோடு, அவள் சிறு பிள்ளையாய் தூக்கி விளையாடி பாசம் கொட்டி வளர்த்த ஆசைத் தம்பியைப் பார்த்துவிட வேண்டும் என்ற நினைவுகளும் நெஞ்சில் பலமாக அடித்துக் கொண்டிருந்தன.

மனம் விம்மி வேதனையில் தவிக்கின்ற போது அவளுக்குள் எழுகின்ற எண்ணங்களை கடிதமாக்கி அப்பா அம்மாவிற்கு அனுப்புவதற்குக் கூட முடியாது. அவள் அனுப்புகிற கடிதங்கள் இராணுவத்திடமோ அல்லது தேசத் துரோகிகளிடமோ அகப்பட்டு விட்டால் வீடு எதிர்நோக்கும் அவல நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் மனச்சுமையை தனக்குள்ளேயே சுமந்தபடி மற்றவர்களிற்காகச் சிரித்தபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

இராணுவங்கள் செய்யும் அநீதிகளுக்குப் பயந்து இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என்று நொந்து போகாமல், வேதனையத் தந்தவர்களையே வேக வைத்துவிட துடித்துக் கொண்டிருந்தாள் அந்த உன்னதமான போராளி.

"வண்டு" அவளை இப்படித்தான் செல்லமாக எல்லோரும் அழைத்துக் கொள்வார்கள். அது அவளுக்கு பொருத்தமாக வைக்கப்பட்ட காரணப் பெயர். சின்ன உருவம், திருதிருவென விழித்தபடியும், சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டும் துடியாட்டமாய் திரிகின்ற அந்த குறுப்புக்காரியின் செல்லப் பெயராக அது நிலைத்துவிட்டது. இப்போதெல்லாம் அவள் 'வண்டக்கா' என்றுதான் எல்லோருக்கும் அறிமுகம்.

எல்லாப் போராளிகளையும் தன் சொந்தங்கள் என நினைத்துக் கொள்ளும் அவள் சண்டையில் அல்லது மற்ற எந்தச் சூழ்நிலை என்றாலும் ஒவ்வொரு போராளிகளையும் அவதானமாகவும், அன்பாகவும் பார்த்துக் கொள்வாள். அவளின் வாழ்க்கையே அதிகம் வேவு நடவடிக்கைகளிலேயே கழிந்தது. வேவு எடுக்கின்ற நாட்களிலும் அவளின் துடியாட்டத்திற்கும், கலகலப்பிற்கும் குறைவே இல்லை.

இரவு வேவிற்காய்ச் செல்வதற்கு முன் ஓய்வாக கிடைக்கின்ற சிறு நேரத்திற்குள்ளும், எதிரியின் பிரதேசத்திற்குள்ளும் அருகில் இருக்கின்ற குளம் ஒன்றிற்குச் சென்று தாமரைக் கிழங்கு தோண்டிக் கொண்டு வந்து அதைச் சுட்டு எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட்டு மகிழ்வதில் அவளுக்கோர் திருப்தி. தாமரைக் கிழங்கிற்காகச் சென்றால் இராணுவத்தின் பாதுங்கித் தாக்கும் அணியோ, அல்லது வேவு அணியோ அவர்களைக் கண்டு தாக்குதம் சந்தர்பங்கள் இருந்தாலும் அதை முறியடித்து அந்தக் கிழங்குகளை எடுத்து வந்து சாப்பிடுவது அவளிற்கு ஒரு சவாலைப் போல விளையாட்டாகவே நினைத்து தோழிகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அதையே செய்தாள்.

இருளே இல்லாத நிலவு நாட்களில் கூட வேவிற்காக அவள் சென்று வந்திருக்கிறாள். வேவு பார்ப்பது, பாதை எடுப்பது இப்படி எதுவென்றாலும் அவளும் அந்தப் பணிகளில் ஒருத்தியாக முன்னிற்பாள். சரியான துணிச்சல்க்காரி. எல்லாவற்றையும் விட அவளுக்குள்ளேயே குமுறுகின்ற தேசப்பற்று, அதை விரைவாக வென்றுவிட வேண்டும் என்கின்ற ஆர்வம், நினைத்ததை உறுதியாக செயற்படுத்தி விட வெண்டும் என்கிற தீவிர எண்ணம் எல்லாம்தான் அவளை அவளின் பக்கத்தில் வேகமாகிக் கொண்டிருக்கிறது.

மட்டக்களப்பிலிருந்து தாக்குதல் அணிகள் யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்தப்பட்டபோது இவள் வேவு அணியோடு இணைந்தே வந்திருந்தாள். மட்டக்களப்பின் காட்டுப்பாதைகள் வழி எம் - 70 துப்பாக்கியைத் தோளிலே சுமந்தபடி அலைந்து திரிந்த அவளது பாதங்கள் பல களத்தில் கலந்து கொண்ட அவளின் கால்கள் யாழ். களமுனைகளிலும் நடந்தன. யாழ்ப்பாணத்தை வந்து சேர்ந்த ஆரம்ப நாட்களிலேயேதான் அவள் கரும்புலியாக வேண்டு என்ற விருப்பத்தை தலைவருக்குத் தெரிவித்தாள்.

ஒருநாள்.....

இவள் நிற்கின்ற முகாமிலே அணிகள் ஒன்றானபோது சிறு பிரிவாய் இன்னுமொரு அணியும் ஒன்றாகி இருந்தது. "வண்டு" அருகில் நிற்பவர்களிடம் இரகசியமாக கேட்டு அவர்கள் எந்த அணியினரென தெரிந்து கொண்டாள். அவர்கள்தான் கரும்புலி அணிக்குத் தெரிவாகி இருப்பவர்கள் என்று அறிந்ததும் உடனேயே அந்த அணியோடு தானும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சிற்குள் நெடுநாளாய்ப் பூட்டி வைத்திருக்கும் இலட்சியம் அதுதானே... ஆனால், அவளது வேண்டுதல்களை அப்போது யாரும் ஆதரிக்கவில்லை. மிகச் சிறிய தோற்றம். சண்டைகளில் முதிர்ச்சி பெறாத நிலை இப்படி எவ்வளவோ காரணங்களைக் கூறினாலும் அவள் கேட்பதாக இல்லை.

"கரும்புலியாய்ப் போய் நிறையச் சாதனைகள் செய்யவேணும்" இந்த உறுதியில் சிறிதும் குறையாது இருந்தாள். அன்றில் இருந்து தலைவரின் அனுமதியைப் பெற்று ஆரம்பமான அவளின் கரும்புலியான பணிகள் பல களங்களிலும் தொடர்ந்தன.

அனைத்து ஆயுதங்களையும் சிறப்பான முறையில் கையாளக் கூடியவளும் சிறந்த நீச்சல்காரியாகவும் திகழ்ந்த ஸ்ரீவாணி அதிகமான களங்களிற்கு 'லோ' வுடனேயே சென்று வந்தாள்.

"நான் எல்லாப் பொசிசனில் இருந்தும் 'லோ' வால அடிச்சிட்டன்" இப்படிக் கூறினாலும் அவளும் அந்த ஆயுதமும் நிறைய தேசத்திற்கு செய்து காட்டவேண்டும் என்ற இலட்சிய வேட்கை அவள் வார்ததைகளில் யாருக்கும் தெரியாமல் மெல்லியதாய் இழையோடும்.

கரும்புலியாய் இணைந்து இலக்குத் தேடி அலைந்த நாட்களில் ஆனையிறவு தளத்தினுள் இலக்கிற்காக வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாள்.

மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் வெற்றிலைக்கேணி இராணுவ முன்னரங்க நிலைகளை ஊடுருவி மணல் பிரதேசத்திலும் கால்தடம் படாது நடந்து சென்று, சின்னச் சின்ன நாவல் மரங்களையும் கன்னாப் பற்றைகளையும் மறைப்பாக்கி மணல் திட்டுக்களில் மறைவாகத் தங்கியிருந்து, கொண்டு சென்ற சிறிதளவு தண்ணீரையே கொஞ்சம் கொஞ்சமாய்க் குடித்து, நாக்கு நனைத்து உலர் உணவுப் பைகளோடே ஐந்தாறு நாட்களின் பசிப் பொழுதுகளைப் போக்கி, இராணுவ முகாமிற்குள்ளேயே இநருந்து வேவுத் தகவல்களைத் திரட்டி மீளுகின்ற சிரமமான பணியது.

ஸ்ரீவாணிக்கு அந்தப் பணியே நன்கு பிடித்திருந்தது. மண்ணிற்காகச் சுமந்து கொள்கின்ற ஒவ்வொரு துன்பங்களும் இன்பமானவைகள் தானே... சுமைகளைச் சுகமாக நிதை;த பின் சுமப்பது அவளிற்கு சிரமமானதாக இருக்கவில்லை.

அந்த ஆனையிறவின் வேவிற்காக அலைந்த நாட்களில் ஒரு நாள் முன்னரங்குகளால் ஊடுருவி உள்நுளைந்த போது எதிரி விழிப்படைந்து விட்டான்.

அவர்கள் முன்னணி நிலைகளிலிருந்து, சில காலடி து}ரம் நடந்திருப்பார்கள் காவலரண்களில் இருந்து செறிவான சூடுகள் அவர்களை நோக்கி வந்தன. நிதானித்து எதிர்ச் சூடுகளை வழங்கி நிலைமைக்கு ஏற்றவாறு நிலையெடுத்துக் கொள்ள நேர அவகாசம் இருக்கவில்லை. எதிர்பாராத இந்தக் தாக்குதலினால் அணி நிலை குலைந்து போயிருந்தது.

தாக்குதலின் எதிர்ச் சூடுகளை வழங்கிய படி இவளும் இன்னும் இரு போராளிகளும் சற்றத் து}ரம் தள்ளி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒரு தோழிக்கு காலில் ரவை பட்டிருந்தது. அவளால் காலை எடுத்து வைக்கவோ அசைக்கவே முடியாது இருந்தது. பல தடவை முயற்சி செய்து பார்த்தாள். அதுவும் பலனளிக்கவில்லை.

இந்தக் களச் சூழலில் அணியின் மற்றவர்களைத் தேடுவதற்கும் எதிரியின் நிலைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கண்டறிவதற்கும் ஸ்ரீவாணி தனித்து ஒருத்தியாகவே செயற்படவேண்டியிருந்தது. எந்தவித தயக்கமும் இல்லாது கடும் சிக்கல் நிறைந்த இராணுவப் பிரதேசத்தினுள் தன் தேடுதலை நடாத்தி இன்னுமொரு போராளியையும் கண்டு கொண்டாள்.

அதன் பின்னும், அங்கே நிற்பவர்கள் ஒவ்வொருவரினதும் செயற்பாடும் மிக முக்கியமானதாய் இருந்தது. இராணுவப் பிரதேசத்தைக் கடந்து விழுப்புண் பட்ட போராளியை கவனமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

ரவை பட்ட காலில் பெரிதான சிதைவை ஏற்படுத்தி இருந்தது. எலும்பை உடைத்து தசைகள் வெளியே தெரிய இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் அந்தப் புண்ணுடன் எழுந்து நடக்க முடியாது தவழ்ந்து செல்வதென்றாலும் தவழ்கின்ற போது காயப்பட்ட இந்தக் காலை வெப்பில் கொடிகள் பிய்த்திழுக்கும். தடிக்குச்சிகளும் மண்ணும் காயத்தோடு உரசி வேதனையை இன்னும் அதிகமாக்கும். ஒவ்வொரு தடவையும் காயம் பட்ட அந்தப் போராளி தவழ்கின்ற போதும் அவளுடன் வர மறுக்கின்ற காலை கையால் இழுத்தபடி நகரும் அந்தப் போராளியின் நிலை வேதனையாய் இருந்தது.

ஸ்ரீவாணி அந்தப் போராளிக்காக தானும் அந்தப் போராளியைப் போலவே தவழ்ந்து வந்தாள். தோழியின் கால் சிக்குப்படுகின்ற நேரங்களில் அவற்றில் நோவேற்படாது பக்குவமாய்த் து}க்கி விட்டபடி தொடர்ந்தாள். காயப்பட்ட போராளியின் ஆயுதமும் வேறு பொருட்களும் சேர்த்து ஸ்ரீவாணிக்கு பாரம் அதிகமானாலும் அவள் மற்றவர்களுக்காக உதவுகின்ற செய்கையிலிருந்து தளரவில்லை. அந்த மணற் பிரதேசத்தில் அவ்வளவு அவ்வளவு பொருட்களோடும் காயபட்ட தோழிக்காகத் தவழ்ந்து வருவது சுலபமானதாக இருக்கவில்லை.

பெருங்கடலில் இறங்கி நடக்கத் தொடங்கிய போது இவளின் குறைந்த உயரம் இடையிடையே தண்ணீரில் மூழ்கி எழத்தான் செய்தது.

இரவிரவாக தண்ணீருக்குள்ளால் நகர்ந்து கரையை வந்தடைந்த போது காயப்பட்ட போராளி நினைவிழந்து இருந்தாள்.

எல்லோரதும் விறைத்த உடல்கள் குளிர் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தன. இன்னும் அவர்கள் போய்ச்சேர வேண்டிய தூரமோ அதிகமாய் இருந்தது. காயப்பட்ட போராளிக்கு முதலுதவி செய்ய வேண்டும். நிலைமையை உடன் கட்டளை மையத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். தொலைத் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைத் தொடர்பு சாதனம் தண்ணீர் பட்டதால் செயலற்றுப் போயிருந்தது. ஆனால் இன்னும் சில மணித்துளிகளில் விரைவாகச் செயற்படாவிட்டால் சக தோழியின் நிலை ஆபத்தாகிவிடும் என்பதை அந்தச் சூழல் தெளிவு படுத்திக் கொண்டிருந்தது.

இந்தத் தகவல்களைச் சொல்லி உடனே முதலுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நீண்ட தூ}ரம் பயணிக்க வேண்டியிருந்தது. இத்தனை உடற் சோர்வுகளோடும் ஸ்ரீவாணிதான் அந்த நீண்ட து}ரத்தை விரைவாய் ஓடிச் சென்றடைந்து நிலைமையைச் சொல்லி மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து உரிய நேரத்தில் உதவினாள்.

இப்படி எந்த நேரத்திலும் சோராதவள், எவ்வளவு இறுக்கத்திலும் சளைக்காதவள், தேச விடுதலையென்ற ஒன்றையே மூலதனமாக்கி இயங்கிக் கொண்டிருப்பவள், மற்றவர்களின் துன்பங்களுக்காக வருந்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் காரணங்களைத் தீர்ப்பதற்கு உழைத்துக் கொண்டிருப்பவள், அதனால்தானே தனக்கு எவ்வளவு வேதனைகள் இருந்தாலும் மற்றவர்களின் வேதனைகளை, துன்பங்கைளப் போக்குவதற்கு போரை விரைவாய் முடித்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனையிறவுக் களத்திற்கு அவளோடு களமாடச் சென்றவர்கள் திரும்பவில்லை என்ற ஏக்கம் நெடுநாளாய் நெஞ்சுக்குள் உறங்காமல் இருந்தது.

அவர்களைப் பிரிந்து அவள் சாதனை புரிந்து விட்டு வந்திருந்த நாட்களில் அவளின் முகத்தில் மலர்ச்சியே இருக்கவில்லை. சோகம் சூழ்ந்து வாடிப்பொய் இருக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து பூப்பறித்து வந்து மாலை தொடுத்து அவர்களுக்குச் சூட்டிய பின்னர்தான் வழமையான பயிற்சிப் பணிகளில் ஈடுபடுவாள்.

பலவர்ணப் பூக்களிலும் மாலை மிக அழகாகக் கட்டுவாள், தன் கூடவே இருக்கின்ற போராளிகளுக்கும் மாலை கட்டப் பழக்குவாள். (இப்போது அவள் மாலை கட்டப் பழக்கிய தோழிகள் அவளின் திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டுகின்றனர்.) அந்த தோழிகளின் நினைவினிலேயே மூழ்கியிருப்பவள் நெஞ்சுக்குள் விடுதலைக் கனவின் கனதி இன்னும் அதிகமானது.

அவள் நினைத்து வந்த இலட்சியத்திற்காக உழைக்க வேண்டும். கூடவே அவளோடு களமாடிப் போனவர்களின் விடுதலைக் கனவையும் சுமக்க வேண்டும். அதற்காக தான் ஒவ்வொரு சண்டைகளிலும் தவறாது பங்கெடுத்துவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வாள்.

ஸ்ரீவாணி கரும்புலிகள் அணியில் இணைந்து கொள்வதற்கு முன்னும் கரும்புலிகள் அணியில் இணைந்து செயற்படத் தொடங்கிய நாட்களிலும் அவள் பல சண்டைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியுள்ளாள்.

அவள் கரும்புலியாகக் கலந்து கொண்ட இறுதித் தாக்குதல் பளை ஆட்டிலறித் தளங்கள் மீதான கரும்புலித் தாக்குதலாகும். பதினொரு ஆட்டிலறிகளைத் தகர்த்து புதியதொரு பரிமாணத்தை ஓயாத அலைகள் - 3 காலப்பகுதியில் ஏற்படுத்திய கரும்புலிகள் அணியில் ஸ்ரீவாணியும் ஒருத்தி. அவள் அந்தத் தாக்குதலுக்கு "லோ" வோடுதான் சென்றிருந்தாள்.

அணிகள் வேகமாக அந்தத் தளப்பிரதேசத்திற்குள் நுழைவதற்கு இவளின் இலக்குத் தவறாத சூடு மிக முக்கியமானது. கரும்புலி மேஜர் சுதாஜினி இக் களத்தில் வீரச்சாவடைய அவளது பணியை இவளே ஏற்றுத் தொடர்ந்தாள். முதல் பெண் தரைக் கரும்புலி வீரச்சாவடைந்த தாண்டிக்குளச் சண்டை தொடக்கம் கரும்புலிகள் அணி கலந்து கொண்ட அதிகமான தாக்குதல்களில் இவளும் பங்கெடுத்திருக்கிறாள். ஆனால், இந்தக் களத்தில்;தான் களம் ஏற்படுத்திய வீரவடுவாக வெடியதிர்வுகள் பாரிய உடற்தாக்கத்தை விளைவித்திருந்தது. காதுகளிற்குள்ளிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடல் தனது இயல்பான சமநிலையை இழந்திருந்தது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஸ்ரீவாணி தொடர்ந்தும் தன் பணிகளில் விரைவானபடியே இருந்தாள்.

தனது இருபத்தைந்து வருட வாழ்க்கையில் பத்து வருட வாழ்ககையை போராட்டத்தில் கழித்தவள், அவளிற்கு இந்தக் களச் சூழல் புதிதாக இருக்கவில்லை, களத்தில் ஒவ்வொரு அங்குலத்தையும் நுட்பமாக அறிந்து வைத்திருந்தாள். ஒவ்வொரு களங்களிலும் அவள் சென்று வருகின்ற போது வீரத்தின் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறந்துவிட்டே வந்தாள்.

அவளது வாழ்க்கையில் ஐந்து வருடங்களைக் கரும்புலியாய்க் கடந்தவள், நீண்ட நாட்களாக அவளின் (கரும்புலிக்கான) இலக்கிற்கான காத்திருப்பு, அதற்காக அவள் பெற்றுக் கொண்டிருந்த கடுமையான பயிற்சிகள் எல்லாமே அவளிற்குள் இந்த வைரமான உறுதியை வெளிக்காட்டின.

"நிறையச் செய்ய வேணும், தேசம் எதிர்பார்ப்பது போல சாதிக்க வேணும். அதற்குப் பிறகுதான் கதைக்கவேணும்"

இதுதான் அவள் தனது அடக்கமான வீரத்திற்கு கூறுகின்ற முன்னுரைகள், அவள் தன்னைப்பற்றி தான் சென்ற தாக்குதல்கள் பற்றி யாரோடும் பேசியதில்லை. தன் கூட இந்தவர்களைப் பற்றியே எப்போதும் போசிக் கொள்வாள்.

ஓயாமல் வீசிக் கொண்டிருந்த இந்தப் புயல் ஓய்ந்துவிடப் போகின்றதை யாருமே எதிர்பார்த்திராத அந்த நாள்.

வழமைபோல முகமலர்ச்சியோடு கறுப்பு வரிச் சீருடையோடு எல்லாத் தோழிகளுடனும் சிரித்துக் கலகலத்த படி இருக்கிறாள். 05.07.2000 அன்று கரும்புலிகள் நாளல்லவா...? கூட இருந்தவர்களை நினைத்து அஞ்சலிப்தற்காய் அந்த மைதானத்தில் கூடியிருந்தார்கள். நிகழ்வோடு ஒன்றாய் எல்லோரையும் போலவே அவளும் மெய்சிலிர்த்துப் போயிருந்தாள்.

அந்தக் கணத்தில்தான் எதிர்பாராத விபத்து அங்கே நிகழ்ந்து விடுகிறது. சாதாரண காயம் என்றுதான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அவளிற்குத் தெரியும்... நெஞ்சில் ஆழமாய் பதிந்து விட்ட காயமென்று. தன் சாவின் விளிம்பைத் தெரிந்து கொண்டும் சாதிக்கத் துடிக்கின்ற கரும்புலியல்லவா அவள். சாவு நெருங்கி விட்டது, அவள் நினைத்தது போல களத்தில் சாதிக்கவில்லையே... களத்திலேயே தன்சாவு வரவில்லையே... என்ற ஏக்கம் முகத்தில் வாட்டமாய் இருந்தது.

விழிகள் எதையோ ஆர்வமாகத் தேடின. அவள் அருகில் நின்ற தோழியிடம் சத்தமற்ற குரலில் "அண்ணாட்டச் சொல்லுங்கோ நான் பொய்சன் எடுத்துக் கிடந்துதான் காயப்பட்டனான் என்று..." அந்த இறுதிக் கணத்திலும் தலைவரிற்கு இறுதியாக இந்தச் செய்தியைத்தான் சொல்லி விட்டாள்.

காயப்பட்டதிலிருந்து அவள் மூச்சு வாழ்ந்த ஒரு சில மணி நேரத்திற்குள் அவள் திரும்பத் திரும்ப உச்சரித்த வார்த்தைகள் இரண்டு, ஒன்று அவள் இதயம் முழுவதும் சுமக்கின்ற தலைவனை, மற்றது அவள் பார்க்கத் துடித்த ஆசைத் தம்பியை.

தேசத்தின் வடிவாய் தலைவனை நினைத்தாள். தலைவனின் முகத்தில் தேசத்தைப் பார்த்தாள்.

கடற்கரும்புலி மேஜர் சந்தனா




அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.

"அடிக்கடி வீட்டை வா மோனை" என்று கூறிய தன் தாயிடம் சொல்கிறாள் "கிட்டடியில வந்திடுவன் அம்மா" அவள் கூறியதன் அர்த்தம் புரியாது கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டு விடைகொடுக்கின்றாள் அந்தத் தாய். இன்னும் சில நாட்களில் நிழற்படமாகத்தான் தன் மகள் தன்னிடம் வரப்போகிறாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை அத்தாயுள்ளம்.

ஒல்லியான தோற்றம், எப்போதும் முகத்தில் இனிய புன்னகை இவள்தான் மேஜர் சந்தனா. தனது இனத்தின் விடுதலை வேண்டிப் போராடப் புறப்பட்ட ஆயிரம் ஆயிரம் வீராங்கனைகளில் இவளும் ஒருத்தி. மகளிர் படையணியில் இருந்து 1995ஆம் ஆண்டு தலைவரின் அனுமதியுடன், கரும்புலிக் கனவுகளுடன் தன்னை கடற்புலிகளின் அணியில் இணைத்துக்கொண்டாள். கரும்புலி அணிகளுக்கான விசேட பயிற்சிகளை முடித்துக் கொண்டு எதிரியின் இலக்குகளைத் தேடத் தொடங்கினாள். எதிரியின் அதிஸ்ரம், அவள் வெடி மருந்து நிரம்பிய படகுடன் கடலில் இறங்கும் போதெல்லாம் அவன் தப்பிப் பிழைத்துச் சென்றுகொண்டிருந்தான். சந்தனா கூட அடிக்கடி கூறுவாள் "என்ர படகு கடலுக்க நிக்குதெண்டு நேவிக்காரனுக்குக்கூடத் தெரியும் அதுதான் உயரவாப் போறான்" என்று.

தன் நகைச்சுவைப் பேச்சால் அனைவரது உள்ளங்களிலும் குடிகொண்டிருந்த சந்தனா, தன் இறுதிக் கணங்கள் வரைகூட எந்தவித மாற்றங்களுமின்றி அதே சிரிப்பு, அதே நகைச்சுவைப் பேச்சு என கலகலப்பாகவே இருந்தாள். அவளது இறுதித் தாக்குதலுக்காக படகை கடலில் இறக்கும் போது தன் சக போராளியிடம் தனது புதிய காலணியை கழற்றிக் கொடுத்து விட்டு "நான் திரும்பி வரமாட்டன்" இதை நீ வைச்சிரு என்று கூறிவிட்டு மறுநிமிடமே தனது குறும்புத் தனத்துடன் சொன்னாள் "திரும்பி வந்தா குறைநினைக்காமல் கழட்டித் தா" என்று. அந்த இறுதிக் கணப்பொழுதிற்கூட மற்றவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்ந்தாள் சந்தனா.


26- 06- 2000 அன்று
யாழ் குடா படைகளுக்குரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்துகொண்டிருந்தது 'உகண' கப்பல். கடற்புலிகளது சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் கடலில் களமிறங்கின. கடற்படையின் இரு பீரங்கிப் படகுகள் மற்றும் 6 டோராப் படகுகள் சகிதம் பாதுகாப்பாக வந்தது 'உகண' கப்பல். பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் வைத்து கடற் புலிகளால் வழிமறிக்கப்பட்டு கடும் சமர் வெடித்தது. சமர் நடுவே லாவகமாக உள் நுழைந்த கரும்புலிப் படகுகள் உகண கப்பலுடன் மோதி வெடிக்க, உகண முற் றாக எரிந்து கடலில் மூழ்கியது. 10 கடற்படையினர் பலியாக கடற்படையினரின் டோராவும் சேதமாகிப்போனது.

மேஜர் சந்தனாவுடன், கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானேந்திரன். மேஜர் ஆரன், மேஜர் நல்லப்பன், கப்டன் இளமதி, கப்டன் பாமினி ஆகிய 5 காவிய நாயகர்களும் கடலில் சங்கமமாகினர்.

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை




நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி காவல் செய்தது. இந்திய இராணுவத்திடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களும் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.

கனரக ஆயுதங்களின் பலம் இல்லாத காலம் அது. எழுபத்தைந்து பேர் கொண்ட அணி காவல் செய்யும் பகுதியில் ஒரேயொரு பிறண் எல்.எம்.ஜியும் ஒரு ஆர்.பி.ஜியும் நின்ற காலம். எமது படைவலு இலகுரக ஆயுதக்காரர்களது சூட்டு வலுவிலும், மனோ வலுவிலும் பேணப்பட்டது. கையில் குண்டுகளுடனோ, சுடுகலன்களுடனோ ஒருவர், இருவராக முன்னே போய் பகைக் காப்பரண்களை நெருங்கித் திடீர்த் தாக்குதல் செய்து எதிரியை நிலைகுலைய வைப்பதுதான் அப்போது எமது முக்கிய வேலை. நைற்றிங்கேள் இதில் மிகவும் தேர்ந்தவர். எதிரி ஏவும் இருரவைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேறவும் பின்னகரவும் அவரால் முடியும் என்று எங்களில் பலரால் அவரது செயல்கள் சொல்லப் படுவதுண்டு. பலாலியின் செழித்த வாழைமரங்களில் ஒன்றுமட்டும் போதும் எதிரியின் கண்ணில் படாமல் இவருக்குக் காப்பளிக்க. அவ்வளவு மெல்லிய உடல்வாகு. தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத கடும் துணிச்சல். சிறிதும் குறிவழுவாத சூடு.

1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாங்குளத்தில் அமைந்திருந்த சிறிலங்காப் படைத்தளத்தை அழிப்பதற்கான பயிற்சிக்கு திறமையாளர் பலர் தேர்ந்தெடுக்கப் பட்ட போது பட்டியலில் நைற்றிங்கேள் என்ற பெயர் முன்னணியில் இருந்தது. அப்போது அவர் ஏழுபேர் கொண்ட அணியின் பொறுப்பாளர். இவரின் மேலான பொறுப்பாளர் பலாலியிலிருந்து நைற்றிங்கேளைப் போகவிடமாட்டேன் என்று சிறப்புத் தளபதியிடம் ஒற்றைக் காலில் நின்றார். சண்டையொன்றில் தான் விழுந்தால், வெற்றிடத்தை நிரப்ப நைற்றிங்கேள் வேண்டும் என்ற அவரின் பிடிவாதமே கடைசியில் வென்றது.

என்னுடைய அணியில் நைற்றிங்கேள் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இவர் ஒருவரிடம் மட்டுமல்ல, அணித்தலைவிகள் பலரிடமும் இருந்தது. மிகச் சிறந்த சூட்டாளர் என்பதால் இவருக்கு ஆர்.பி.ஜி வழங்கப்பட்டது. ஏவப் படுகின்ற எறிகணைகள் ஒவ்வொன்றும் இலக்கை சரியாகத் தாக்கவேண்டும். “தவறிவிட்டது” என்ற சொல்லுக்கு அகராதியில் இடமில்லை. எனவே ஆர்.பி.ஜியும் நைற்றிங்கேளும் தோள் சேர்ந்தனர்.

விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் புகழ்மிக்க, ஆகாய கடல் வெளிச்சமர் பரந்த வெளியில் விரிந்த போது கடலால் தரையிறக்கப் பட்டு இரைந்து வந்த ராங்கிகளிடமிருந்து எமது ஆளணியைப் பாதுகாக்க ஆர்.பி.ஜியின் பலம் தேவைப் பட்டது. எந்த அணியிலும் இல்லாது நைற்றிங்கேள் தனியாக இயங்க விடப் பட்டிருந்தார். “நைற்றிங்கேளை அனுப்பு” என்ற கட்டளை களத்தின் ஒரு முனையிலிருந்தும், கேணல் பால்ராஜிடமிருந்தும் வரும். மறுமுனையிலிருந்து கேணல் யாழினியிடமிருந்தும் (விதுஷா)
வரும். எங்கு ராங்க் இரைந்ததோ, அங்கு அவர் தேவைப் பட்டார். எத்திசையில் அவர் போனாரோ, அங்கு அதன் பின் ராங்கின் இரைச்சல் கேட்காது.

களத்தின் தேவைக்கேற்ப கடுகதியாக விரையும் நைற்றிங்கேள், துளியும் தற்பெருமை இல்லாத, எப்போதும் எவரையும் கனம் பண்ணுகின்ற தன் இயல்பில் கடைசிவரை வழுவவில்லை. 1993ஆம் ஆண்டில் பூநகரியிலிருந்த சிறிலங்காப் படைத்தளத்தைத் தாக்குவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். நடவடிக்கையில் இறங்கப் போகும் ஆர்.பி.ஜிக்களின் பொறுப்பாளர் நைற்றிங்கேள். பூநகரிப் படைத்தள இராணுவம் அதற்கிடையில் முன்னகரப் போவதற்கான அறிகுறிகள் தென்பட, மறிப்பதற்கு பூங்கா தலைமையில் பெண் போராளிகளின் அணியொன்று போனது. மறிப்பு வேலியாகக் காப்பரண்களை அமைத்தது. ஆர்.பி.ஜிக்களுக்கான நிலைகள் மிகநேர்த்தியாக நைற்றிங்கேளின் வழிநடத்தலில் அமைக்கப் பட்டு, பார்வையை ஈர்த்தன. நிலைகளைப் பார்வையிட வந்தார் கேணல் சொர்ணம். அவரின் கவனத்தையும் அந்நிலைகள் ஈர்த்தன.

“ஆர் உங்கட ஆர்.பி.ஜி பொறுப்பாளர்?”
கேணல் சொர்ணத்தின் முன், காற்றிலாடும் கழுகுபோல வந்துநின்ற நைற்றிங்கேளைப் பார்க்க அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“எத்தினை ஷெல் அடிச்சிருக்கிறீங்கள்?”

“இருபத்திமூண்டு”
அதிர்ச்சி தரும் பதில்.

“எங்கெங்கே அடிச்சீங்கள்?”

“ஆனையிறவில பதினெட்டு. அதுக்குப் பிறகு வேற வேற சண்டையளில அஞ்சு”

நைற்றிங்கேளைக் கூர்ந்து பார்த்தவர்,
“நீங்கள்தான் அந்த நைற்றிங்கேளோ?”
என்றார்.

இதுபோதும். இதற்குமேல் நைற்றிங்கேளைப் பற்றி நாம் வேறெதுவும் பேசத் தேவையில்லை. போன சண்டைகள் எதிலுமே அவர் காயப்பட்டதில்லை. தனது இலக்கைத் தாக்கி விட்டு, சிறு கீறல் கூட இல்லாமல் திரும்பி வந்த ஒவ்வொரு முறையும், “ஏதோ ஒரு சண்டையில் நான் முழுசாப் போறதுக்குத்தான் இப்படிக் காயங்களேயில்லாமல் வாறன்” என்றவர் பூநகரி சிங்களக் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் காலில்லாமல் வந்தபோது, சற்று நிம்மதியடைந்தோம். ஆள் போவதைவிடக் கால்போனது பரவாயில்லையென்று. ஒற்றைக் காலோடு தன் வாழ்வின் அடுத்த கட்டம் இதுதான் என்பதை அவர் முடிவெடுத்த போது நாம் கவலை அடையவில்லை. கடலிலும் அவரின் வேகம் தணியவில்லை எனப் பெருமைப்பட்டோம்.

-மலைமகள் -

Aug 15, 2008

முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி



10-05-1973 - 16-08-1994



கடலன்னையின் பெண் குழந்தை

கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கன்னியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.
அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.

"இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்"
அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.

தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.
தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள்.

சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.

கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.

ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.

லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள்.

இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.
'நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா' என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.

'பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை' என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.

கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.


எல்லாம் தயார்.

கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.

இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.

என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.

1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

எல்லோருக்குமே பரபரப்பு.

தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.

ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.

'ரைட், கட்டளைக் கப்பல் அவுட்' என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.
சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள்.

ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி 'எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே' என்ற எண்ணமே மேலோங்கியது.
அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.

ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.

தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.

இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.

No comments:

Post a Comment