Saturday, December 5, 2009

வெற்றிக்கு வித்திட்ட லெப்.கேணல் குணா

இந்திய அடக்குமுறைப் படை தமிழீழப் பிரதேசமெங்கும் ஆக்கிரமிப்புக் கால்களைப் பதித்திருந்த நேரம் ... யாழ் - தென்மராட்சிப் பகுதியில் இந்தியப் படைக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்... எவரையும் கவரக் கூடிய நிமிர்ந்த எடுப்பான தோற்றத்துடன்.... தென்மராட்சித் தளபதியாக மக்களின் அன்புக்கும் மதிப்பிற்குமுரியவராக அந்நாட்களில் மக்களின் ஆதரவுடன் அன்னை மண்ணை ஆளவந்த படையை எதிர்த்து அண்ணன் வழி நின்ற தளபதி.. குணாண்ணை என்று அன்போடும் உரிமையோடும் அழைக்கப்பட்டு வந்த.. லெப். கேணல் குணா.
அன்றைய நாட்களில் தென்மராட்சியில் குணா அவர்களின் பெயரைக் கேட்டாலே இந்திய இராணுவத்திற்கும் அதனுடன் சேர்ந்தியங்கிய துரோக கும்பலிற்கும் கலக்கம் தான். பல நெருக்கடியான இறுக்கமான சந்தர்ப்பங்களிலும் தளராது களம் நின்று எதிரிகளுக்கு இழப்புகளை கொடுத்த தளபதி. அதற்கமைவான ஒரு சம்பவத்தை நினைவு கூரலாம்...

1987 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி மேஐர் நடேசு மற்றும் கப்டன் சிங்கன் (பாபு) ஆகிய இருவரும் சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு குளிப்பதற்கு சென்று குளித்துக் கொண்டு இருந்த பொழுது தீடீரென சுற்றி வளைத்த இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இருவரும் வீரச்சாவடைகின்றனர்.
சம்பவமறிந்து கலங்கிப் போய்விட்டனர் குணாவும் தோழர்களும். இதற்கிடையில் அந்த இரண்டு போராளிகளின் உடல்களையும் இந்திய இராணுவம் சாவகச்சேரியில் தெருத் தெருவாக கட்டி இழுத்து சென்றதை அறிந்த போது கவலையில் இருந்தவர்களை மேலும் ஆத்திரமடையச் செய்தது.
உடனடியாக செயலில் இறங்கிய குணா,பாலன் (பிறிதொரு சண்டையில் மட்டுவில் பகுதியில் 1989 இல வீரச்சாவு) எனும் போராளியிடம் இறந்த போராளிகளின் பெற்றோருக்கு உடலை பெறுப்பேற்றாலும் தகனம் செய்யவேண்டாம் என்றும் தாங்கள் வந்த பின்னரேயே தகனம் செய்ய வேண்டும் எனவும் சொல்லச் சொல்லி அனுப்பிவைத்தார்.
தன்னோடு தினேசண்ணையையும் (பிரிகடியர் தமிழ்ச்செல்வன்) இன்னும் ஐந்தாறு போராளிகளையும் அழைத்துக் கொண்டு சாவகச்சேரி - வேல் திரையரங்கில் நிலை கொண்டிருந்த இந்தியப் படை மீது தாக்குதலைத் தொடுப்பதற்காக விரைகிறார். டச்சு வீதி வழியாக தாக்குதலை எதிர்பார்த்து நின்ற குணா அணியினர் டச்சு வீதியிலிருந்து இந்திய படையும் ஈ.பி ஆர் எல் எவ் துரோக கும்பலும் புறப்பட்டதையறிந்து யாழ் - கண்டி வீதியில் நிலையெடுத்து கொள்கின்றனர் . அடை மழை பெய்து கொண்டிருந்த நேரம். காத்திருந்தது போலவே இந்திய - ஈ.பி ஆர் எல் எவ் துரோக கும்பல்களின் வாகன தொடரணி வரவும் கண்ணிவெடித் தாக்குதலுடன் சண்டை தொடங்கியது. சுமார் 15 நிமிட நேரம் நடைபெற்ற நேரடி மோதலில் 5 இற்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட துரோகக் கும்பலில் 12 பேர் காயமடைய சண்டைய முடித்துக் கொண்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் கல்வயல் - விளைவேலி பகுதிகளுக்கூடாக தினேசண்ணையோட மட்டுவிலுக்கு வந்து மாவீரர் மேஜர் நடேசு கப்டன் சிங்கன் ஆகியோரின் வித்துடல்களின் முன் கைப்பற்றிய ஆயுதங்களை வைத்த பின்பே தகனம் செய்ய உத்தரவிட்ட குணா அண்ணன் களத்தில் சாதித்தவை அநேகம்.

1993-11-11 மீண்டும் பூநகரியில் களம் திறக்கப்படுகிறது. பத்தாம் திகதி இரவிலே தனங்கிளப்பு அறுகுவெளியூடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் நகர்த்தப்படுகின்றன. முதலில் சென்று கொண்டிருந்த அணிகளுக்கு தலைமைதாங்கிச் சென்று கொண்டிருந்த குணா அணியினருக்கு எதிர்பாராத விதமாக சண்டை தொடங்கப்படு முன்னரே எதிரிகளின் கடும் தாக்குதலைச் சந்திக்க நேரிடுகிறது. ஆனாலும் தமது தாக்குதலின் பிரதான இலக்கு எந்த ஒரு காரணத்துக்காகவும் தவறக் கூடாது என்பதற்காக எதிரியின் தாக்குதலைச் சமாளித்தவாறே அணியினரை நகர்த்துகிறார். ஆனாலும் எதிரியின் தாக்குதலில் தன் தாய்மண்ணில் தவளைப் பாய்ச்சல் என்னும் மாபெரும் வெற்றிச் சமரின் முதற்களப் பலியாக தளபதி லெப். கேணல் குணா அவர்கள் வீரச்சாவடைகிறார். அந்நேரத்தில் அவர் இக்கட்டான ஒரு கட்டத்தில் கூறிய "நான் சாகலாம் .. நீ சாகலாம்.. நாங்கள் சாகக் கூடாது" என்ற வார்த்தைகளே அவரின் வடிவமாக நின்றன.. தனது வீர மரணத்தை மாபெரும் வெற்றிச்சமருக்கு அர்ப்பணித்து ஓய்கிறார் பூநகரி நாயகராய்..
இப்படியான ஆயிரம் ஆயிரம் வீரர்களின் அர்ப்பணிப்புகளால் கட்டப்பட்ட எங்கள் தாய்த் தேசம் அந்நியர் பிடியில் மீண்டும்.. தங்கள் சொந்த நலன் கருதாது தம் மண்ணுக்காக இனத்துக்காக தம்மையே அர்ப்பணித்த வீரர்களுக்கு வெறுமனே கண்ணீர் அஞ்சலி மட்டும் செலுத்துவதன்று.. அவர் தம் கனவு ஈடேற நாமும் ஒன்றிணைந்து செயற்பட்டு எமது விடுதலையை வென்றெடுப்பதே அவர்களின் தியாகங்களுக்கு நாம் சூட்டும் மணிமுடியாகும்.

No comments:

Post a Comment