Tuesday, June 25, 2013

லெப்.கேணல் ராஜன்


அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான்.

முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும்.

எதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.

திட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது.

திட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன்.

கிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி... கோபி... என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது.

தலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.

என்ன நடந்ததோ? இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ? இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ? வேவு பார்த்தோர் தவறோ? வேறு பிழைகளோ?

கோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி விட்டு... அவன் வரவில்லை.

கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.

ராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம்.

அவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.

ராஜன்-றோமியோ நவம்பர்.

எங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.

அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டு, இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.

அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.

1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். காவல்துறைய நிலைய தங்ககமும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன.

அதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள்

அதில் ஒருவானாய் ராஜன்.

தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியதாக காரிருள்.

பின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும்.

வியர்வைாற் குளிக்கும் தேகம்.

தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய்,

தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம், உறுதி,

இது எம் தாயகம், எங்கள் பூமி.

இங்கு அந்நியனுக்கு என்ன வேலை?

இன்று வெல்வோம்.

அந்நியன் பாடம் படிப்பான்.

அக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென கிட்டண்ணையால் அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.

உள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது...

தனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு.

யாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு.

தன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது பட்டறிவையும் மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.

இந்திய படைக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள்.

இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்தவை. அவன் நின்று பிடித்த வெறும் குருட்டாம்போக்கு மட்டுமல்ல. வீரம், விவேகம், உச்ச வழிப்பு, அன்புக்கினிய எம்மக்களின் அரவணைப்பு இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் - தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள்.

முற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம்.

எத்தகு நெருக்கடிகளிற்கு நடுவிலும், உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.

இந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக எதிரியின் பாதச்சுவடுவகள். பட்டறிவு குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது.

பொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் விழுப்புண் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள்.

“எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.

யாழ்ப்பாணத்தில் எங்கும் படை முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது.

அரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.

“டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா”

“ரங்கன்”

“அண்ணை நான் முழிப்புத்தான்”

“வெளிக்கிடுங்கோ...”

சிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது? ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி.

“சரி வெளிக்கிட்டாச்சு.”

நாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது படையினரின் நகர்வை நிழலாய்க்காட்டும்.

முன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும்.

விரைவாய் சத்தமின்ற  - சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.

ராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.

“கட்டாயம் உடைக்கலாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ”

“டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத”

“ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை”

“தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்”

“அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.”

கொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும்போது, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது,

இரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும்.

கிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே?” என்று கேட்டுக்கொண்டிருப்பான்.

அவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும்.


இன்னொரு காலைவேளையில், படுத்திருந்த வீட்டு ஒழுங்கையால் தெருவுக்கு வர, முன்னால் இந்தியப் படை அணி. மற்றவர்கள் காணமுதல் ராஜன் கண்டுவிட்டான். “இண்டைக்குப் பொழுது சூடாகத்தான் விடிஞ்சிருக்கு. நான் இதில வைச்சுத் தொடங்கிறன். நீங்கள் இரண்டு பேரும்மற்றப் பக்கத்தாலை வாங்கோ”. இராணுவம் நிற்கும் செய்தியை அலாதியாய்ச் சொல்வதுடன், அந்தக் கணத்திலேயே திட்டமும் தாக்குதலும். எத்தகையை சூழ்நிலையிலும் ஆபத்தை எதிர்கொள்ள கொஞ்சமும் தயங்காத நெஞ்சுறுதி. பல கட்டங்களில் ராஜன் சாவின் விளிம்பில் ஏறி நடந்து வந்துள்ளான்.

எமது மண்ணில் அந்நியன் இயல்பாய்த் திரிவதா? அமைதியாய் வாழ்வதா? என்று குமுறுவான். அவன் அடிக்கடி கூறும் வார்த்தைகள். “மச்சான் உவங்களை இப்படியே விடக்கூடாது. இண்டைக்கு ரெண்டு ஆமி எண்டாலும் கொல்லவேணும்.”

ஒரு நாள் பண்டத்தரிப்பு முகாம். “என்ன வெடிச்சத்தம்?” என இந்தியப்படையினர் மக்களை விசாரித்துக் கொண்டிருக்கையில் ராஜனும் தும்பனும் தங்கள் பிஸ்டலை இடுப்பில் வைத்த பின்னர், இறந்த படையினரின் துப்பாக்கிகளை ஆளுக்கொன்றாய் எடுத்தபடி சைக்கிளில்...

சுழிபுரம் சந்தி முகாம் அருகே, இந்திய படையினர் ஜீப் ஊர்தியுடன் செத்தபடி கிடக்க....

எம் போராளி காசிமை இழந்த பின்னர், நடு நெஞ்சில் துப்பாக்கி ரவை துளைத்த ராஜனைத் தூக்கிக்கொண்டு வந்தனர் தும்பனுடன் நகுலனும், நித்தியும்.

இந்திய அடிவருடிகள் முகாமிட்டிருந்த சுன்னாகம். இருபுறமும் படைக் காவல். அதனுள்ளே கும்மாளமிட்டனர் எம்மினத்தின் அவமானச் சின்னங்கள். திட்டமிட்ட பெரிய தாக்குதல். அதிக ஆட்கள். முதல்நாள் சாலையைக்கடக்க முடியாமல் ஒத்திவைத்த தாக்குதல். அடுத்த நாள் முயற்சி செய்தபோது,

இரவு சுற்றுக்காவல் படையினரை எதிர்கொள்ள, எல்லாமே பாழ்.

ராஜனை இருட்டுக்குள்ளால் இழுத்தவந்து குப்பியைக் கழட்ட, வந்தது நூல்மட்டுமே.

“மச்சான் சுபாஸ் பிறண் அடி கொளுவியிட்டுது.” எனக்கு பெரிய காயம்... இந்தமுறை சரிவராது... எல்லோரும் சாகாமல் இவர்கள் இரண்டு பேரையும் கொண்டுபோங்கோ.

சொன்னவர் பின்னர் கரைச்சல் தாங்காமல் மயங்கிப்போனார்.

“ஐயோ ராஜண்ணை...” என்று சூட்டும் ரங்கனுமாய் வாய்க்குள் விரலைவிட்டுத் தோண்டி,

தேங்காய் எண்ணை பருக்கு, தேங்காய் உடைத்து பால் பிழிந்து பருக்கி, காரில் வைத்து, ஸ்ராட் ஆகவில்லை என்று கத்தி, பிறகு வேலிவெட்டி பாதை செய்து, தள்ளு தள்ளு என்று, தள்ளிக்கொண்டு போய். உள் ஒழுங்கை வீட்டில் வைத்து, நீர்வேலிச் சனத்தை காவலுக்கு விட்டு,

அந்தநாள் விட்டு அடுத்த நாள், வாதரவத்தைக்குப் போய்ச்சேர, ராஜனும், முரளியும் மயக்கம் தெளிய, லோலோ மயங்கிப்போய், பின்னர் போய்விட்டான். எம்மைவிட்டு போயேவிட்டான்...

அவனது தோழர்களின் இழப்புக்கள் ஒன்வொன்றின் போதும் அவன் அமைதியாய்க் குமுறுவான். கண்கள் வெறிக்க அவன் பாறையாய் இறுகுவான்.

ராஜனது இளமைக்கால நண்பன் தெய்வா, பள்ளிக் காலத்திலிருந்து ஒன்றாய்க் கடலுக்குத் தொழிலுக்குப் போய்வந்து..., படித்து பந்து விளையாடி..., இயக்கத்திற்கு வந்து..., ஒரே படகில் இந்தியா போய்..., கூமாட்டி பயிற்சி முகாமில் ஒன்றாய் இருந்து..., மலைக்கு மூட்டை சுமந்து..., கழுதை கலைத்தது..., பணிஸ்மன்ற் வாங்கி...., பயிற்சி முடித்து..., கரைக்கு வந்து..., எல்லாம்வரை ஒன்றாய் இருந்த தெய்வா பிரிந்துவிட்டான். கடலில் ஓட்டியாய்ப் போனவன் வரவில்லை. அவன் வரவில்லை என்று மாதகல் அழுதது. ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.

ராஜனும் தும்பனும் பிரிந்தது கிடையாது. ராஜன் என்றால் தும்பன். தும்பன் என்றால் ராஜன். துப்பாக்கிகள் பங்கிடும்போது “தும்பனுக்கு கையேலாது எம்-16 தான் வேணுமம்மான்.” ராஜன் சொல்ல சூடுபட்டு உடைந்து வளைந்த கையை தும்பன் மேலும் வளைத்து வந்து வாங்கிவிட்டு மறைவாய் போய் பெரிதாய்ச் சிரித்தார்கள்.

ஒன்றாய்ச் சாப்பிட்டு, அடிபட்டு, கலைபட்டு ராஜனின் உயிருடன் இணைந்த நட்பு. சுன்னாகத்தில் காலில் இரண்டு வெடிபட்டு காயம் மாறி இந்தியாவில் இருந்து வந்தபோது, தும்பன் இல்லை என்ற செய்தி அவனுக்குத் தெரிந்துதானிருந்தது.

இந்தியப் படையினரின் சூடுதானா? விபத்தா என எல்லோரையும் ஓடிஓடிக்கேட்டு ஓய்ந்திருந்தவேளையில், தும்பன் இல்லாத ஏழாலைக் கிணற்றுக்கட்டு, வாழைத்தோட்டங்கள், பனங்கூடல்கள், கலைபட்டு பாய்ந்தவேலிகள், துரையண்ணை வீட்டு ஊஞ்சல்கள் என்று எல்லாமே வெறுமையாய்த் தெரிய ரங்கன் அழுவான். ராஜன் அழமாட்டான். அந்தப் பாறை இறுகியது.

ரங்கன் சைக்கிள் உழக்க “பாரில்” ராஜன். சுட்டுவிரல் விசைவில்லையொட்டியபடி, கொஞ்சம் அழுத்தினால் ரவைபாயும், எங்கும் போகும் சைக்கிள். சடசட என்று வெடிகேட்கும், சைக்கிள் ஒன்றுடன் கொஞ்ச ரவையும் செலவாகும்.

“தப்பியது ரங்கனால்” என்பான் ராஜன். “ராஜண்ணை இல்லையென்றால் நானில்லை” என்பான் ரங்கன்.

மாவிட்டபுரத்தில் வைத்து வரிசையாய் வந்த மொட்டை ஜீப்புக்கு அடிக்க நல்லாய் நடந்த சண்டை நெடுமாறன் வீரச்சாவடைய, ரங்கன் காயம்பட திசைமாறியது.

திருச்சியில், “ராஜண்ணை... ராஜண்ணை” என்று ரங்கன் உரத்துக்கூவி அழுது துடித்து மௌனித்தபோதும் யாழ்ப்பாணத்தில் நின்ற ராஜன் அழவில்லை. பாறை இறுகியது.

மாதகலில் தன்னுடன் நின்ற ஏழுபேரை வைத்து பெருங்கூட்டமாய் வந்த இந்தியப் படையினரை அடித்துக்கொன்று, கலைத்து, பெருந்தொகையாய் ஆயுதங்கள் அள்ளிவந்தபோது, எல்லா நாளும் ராஜனுடன் திரிந்த வெற்றி திரும்பிவரவில்லை.

ஆயுதங்கள் எல்லாம் அப்படியே குவிந்து கிடக்க, காயப்பட்ட தம்பியையும், வெற்றியின் உடலையும் குப்பிளானில் பின்ற கிளியிடம் அனுப்பிவிட்டு, ஆயுதங்களிற்கு காவலாய் நின்றபோது ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.

இந்தியா போனது. தமிழீழ வீடெங்கும் மகிழ்ச்சிக் குரல்கள், தெருவெங்கும் புலிவீரர். மிச்சமாயிருந்தன இந்திய எச்சங்கள். புலனாய்வுப் பணியில் ராஜன்.

அவனது மனம் விடுதலைப் போரையும், அதனுடன் இணைந்தவற்றையும் தவிர வேறொன்றைப் பற்றியும் எண்ணியதே கிடையாது. இப்படித்தான் ஒரு நாள் பள்ளியில் அவனுடன் படித்தவள். இயக்கத் தொடர்பில் அறிமுகமாகி பழகிக் கடிதமொன்றில் என்னவோ எழுதி அவனிடம் அனுப்பிவிட்டு காந்திருந்தாள் பாவம்.

கடிதத்தைப் படித்தவன் பக்கத்தில் நின்றவனுடன் நேரே போய்க் கடிதத்தைக் கிழித்துக் கொடுத்துவிட்டு “போராட்டம் தவிர வேறொன்றும் நான் நினையேன்” என்றான்.

தன் ஆசைமகன் போகும் ஊர்தியையென்றாலும் பார்போமென்று தாய்க்கிழவி றோட்டில் கால்கடுக்க காந்து நிற்க, இவன் மாதகலில் தான் போன வேலையை முடித்து திரும்பி வருவான்.

சிறிலங்காவுடன் சண்டை தொடங்கியது. ராஜன் ஒய்வின்றிச் சுழன்றான். அடிக்கடி அண்ணைச் சந்தித்தான். எல்லா இடமும் திரிந்தான். ஒவ்வொரு பங்கருக்கும் ஒவ்வொரு மண்மூட்டைக்கும் இடம் சொன்னான்.

மயிலிட்டியில் பெருஞ்சமர். ராஜன் ஊண் உறக்கமின்று நின்று வழிநடத்தினான். மழையாய்ப் பொழியும் செல்கள் - ரவைகள். மயிலிட்டிச் சண்டையில் மட்டும் இரண்டு தடவைகள் குண்டுச்சிதறல்கள் அவனைத் துளைத்துச் சென்றன. ஓய்வில்லை - அங்கு நடந்து கொண்டிருந்த சண்டையில் இருந்து அவனால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.

கோட்டை முற்றுகை இறுக இறுக எங்கள் தளபதிகளின் தூக்கமற்ற இரவுகள் பெருகிக்கொண்டிருந்தன. மணியந்தோட்டத்திலிருந்து பொன்னாலைவரை நின்ற இளம் போராளிகள் ராஜனைக் கண்டு சிரிப்பர். இரவில்லை, பகலில்லை, ஓய்வில்லை, உணவில்லை, தன்னைப் பிழிந்து முற்றுகைக்கு உரம் கொடுத்தான். பாணுவின் உற்ற துணையாய் முற்றுகைக்குத் துணை நின்றான்.

எம்மால் உள்ளிறங்க முடியாமல்போய்விட்ட, இரண்டாவது கோட்டை உட்புகல் நடவடிக்கை முடிந்து விடிந்தபோது, “றோமியோ நவம்பர்” என்று பாணுவின் “வோக்கி” கூப்பிட்டபோதும் பதிலில்லை.

மானிப்பாய் மருத்துவமனையில் பேச்சு மூச்சின்றி கிளி, ஜவான் ஆகியோருக்கு இடையில் கந்தல் துணிபோற் சுருண்டு கிடந்தான்.

காயம் மாறி கொஞ்சம் தேறி எழும்பி வந்தவன். இப்போது சாள்ஸ் அன்ரனி சிறிப்புப் படையணியில்.

இந்தக் காலம் ராஜனை ஒரு சிறந்த நிர்வாகியாக உருவாக்கியது. பால்ராஜின் துணைவனாய் நின்று படைப்பிரிவை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினான். சகல போராளிகளுடனும் அன்புடன், கண்டிப்புடன் நடைபெற்ற கடுமையான பயிற்சிக் காலம்.

தமிழீழத்தின் எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள்.

குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்களிற்கு தாயாக, தந்தையாக, நண்பனாக ஆசானாக.

தமிழேந்தி அண்ணனிடம் காசுவாங்கி, இல்லையென்றால் ஊரில் கடன்வாங்கி, அதுவும் முடியாவிட்டால் வீட்டுக்குப் போய் பொருட்களைத் தூக்கி, அண்ணன் வணிகத்திற்கும் வைத்திருக்கும் பொருட்களை அள்ளி ஊர்தியில் ஏற்றி...

எப்படியோ போராளிகளைத் தனது பிள்ளைகளாய் உயிராய் பார்த்தான். கவனித்தான்.

வன்னி போர்க் களம். எங்கள் வன்னிக் காடுகளை எதிரியின் பல்லாயிரம் படைகள் ஊடறுத்துவர முற்பட்ட “வன்னிவிக்கிரம” பெரும் படைகொண்டு ராஜன் மோத எதிரிப்படை திணறியது. சுட்டுவீழ்த்தப்பட்ட ஹெலிகப்டர் துண்டுகளை அள்ளி எடுத்து அனுப்பிய பின்னரும் தொடர்ந்தது சண்டை.

எல்லாப் பக்கங்களாலும், பூவரசங்குளம் சந்திக்கு வந்து ஏறிய எதிரிகளை எதிர்கொண்டனர் எம்வீரர்கள். கடும் சண்டை.
வானை நோக்கி நின்றவைகளும் நிலம் நோக்க,  அனைத்து ஆயுதங்களையும் ஏந்திய கரங்களும் உறுதியாய் நிற்க, ஓடினான் எதிரி.

கொஞ்ச நாள் இடைவெளியில் எதிரியின் இன்னொரு முயற்சி. வவுனியாவல் நகர்ந்து தோற்ற எதிரி, இம்முறை மன்னார் பக்கமாய்...

இம்முறை சண்டை கொஞ்சம் கடுமையாய்.. எமது வீரர்களை இருபுறமும் சூழ்ந்தபடி எதிரி. ராஜனை உணர்ச்சிவசப்பட வைக்கும் சண்டை.

எதைப்பற்றியும் யோசிக்காது எதிரியின் முகம் தெரியும் தூரத்தில் நின்று மோதிய, ராஜனின் விரல் இல்லாத உள்ளங்கையை உடைத்தபடி ஒரு ரவை, இன்னொரு ரவை அதே கையில் நடுவில்.

மிக அருகில் எதிரியின் துப்பாக்கிகள் சடசடக்க உறுதியாய் எதிர்த்து நின்றனர் தோழர்கள்.

உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொண்டுபோய், அடிஅடி என்று அடித்து ஆமியைக் கலைத்துவிட்டு, மயங்கிக்கிடந்தவனை, இழுந்து வந்து சேர்த்தான் ரூபராஜ்.

அன்று ராஜன் திரும்பி வந்தது, நம்பமுடியாத அதிசயம். அவன் மயங்கி வீழ்ந்து கிடந்தபோது, எதிரி மிக அருகில். மிக அருகிலேயே நின்றிருந்தான்.

ஆனையிறவு பெரும் போர்க்களம். ஒன்வின்றிப் பம்பரமாய் ராஜன்.

சென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையற் கொட்டிலில், சந்தியில் இருந்த மெடிக்ஸ் வீட்டில், எங்கும் நின்றான். எல்லா நேரமும் நின்றான்.

கட்டைக்காட்டில் ஆமியின் கவச ஊர்தி தகர்ந்தாலும், ஆர்.பி.ஜிக்கு ரோமியோ நவம்பர்.

புல்லாவெளியில் ஆட்டிலறி செல்விழுந்து இரண்டுபேர் செத்து ஐந்து பேர் காயமென்றால் மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர்.

மெடிக்ஸ் வானை போகவிடாமல் கெலி நின்றால் கலிபர் அனுப்பவும் றோமியோ நவம்பர்.

குணாவின் குறூப்பிற்கு அனுப்பிய காக்குகளுக்கு சாக்குஊசி வேணுமெண்டால் றோமியோ நவம்பர்.

வீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும்வேளையில் தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்நது எதிரியைத் தடுக்கும்வேலைக்கும் றோமியோ நவம்பர்.

எல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப் பாரத்தையும் தானாய்ச் சுமந்தான்.

எப்படிப்பட்டவனை நாம் இழந்துவிட்டோம்.

பட்டறிவு மிக்க போர்த்தளபதியாய் ராஜன் நின்றபோதும் அவன் போர்க் களத்திலிருந்து தள்ளியே வைக்கப்பட்டிருந்தான். எங்கள் தலைவரின் பெருங்கனவுகளின் உறைவிடமாக ராஜன் இருந்தான். யாழ்ப்பாணச் சண்டையில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு உணவு வழங்கல் செய்யும் வேலையை அவனிடம் வலிந்து கொடுத்திருந்ததன் காரணம் அவனை யுத்த களத்திற்கு முன்முனையிலிருந்து எட்ட நிற்க வைப்பதற்கன்றி, வேறில்லை.

பட்டறிவு மிக்க வீரன்.

அவனது பட்டறிவுகள் மெய்சிலிர்க்கும் கதைகள்.

ஓய்வில்லாக் கடும் உழைப்பாளி.

அவன் மறையும்போது தலைவரின் பெரும் கனவில் உருவான மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளன். சிறந்த போர் பட்டறிவுகளை முன்னரே பெற்றிருந்த அவன். இங்கு எல்லா இடமும் இருந்து பொறுக்கி எடுத்த வீரர்களைப் பயிற்றுவித்தான். தன் அனுபவங்களை பிழிந்தெடுத்துக் கொடுத்தான். போர்க்கலை நுட்பங்களைக் கற்றான், கற்பித்தான். நேர்த்தியான வேலைத்திட்ட ஒழுங்கமைப்பை, கண்டிப்பை, அன்பை, கடும்பயிற்சியை,

வியூகங்கள், வழங்கல்கள், வரைபடம்... என்று எல்லாவறறையும் கற்றான். கற்பித்தான்.

ராஜன் அமைதியானவன். தன் செயல்களினால் மட்டும் தன்னை அடையாளம் காட்டியவன். ஆம் செயல்களினால் மட்டும்.

எந்த வேலையாக இருந்தாலும் ராஜன் அதிகம் பேசுபவனல்ல. ஏதாவது படையத் திட்டம் தீட்டப்படும் வேளைகளில், பேசாது பார்த்தடி, கேட்டபடி இருக்கும் ராஜன் , திட்டம் தீட்டப்படுவது நிறைவுறுவதற்கு முன்னால் உள்ள இடைவெளியில் பேசுவான். குறிப்பிட்ட திட்டம் செயல் வடிவம் பெறும்போது அவனது யுக்தியின் பெறுமதி தெரியும்.

தனது கடமையைச் முழுமைமாகச் செய்வதில் தன்னை வெளிப்படுத்துவான். எந்தச் வேளையிலும் மற்றைய ஒருவரைக் குறை செல்வதைக் காண்பதரிது. “கடமையைச் செய், பயனை எதிர்பாராதே” என்பதற்கு எடுத்துக்காட்டாய் கர்ம வீரனாய் விளங்கினான்.

அவனது வரலாறு முழுமையாக எழுதப்பட்டால், அது பெரும் காவியமாகும். படைய வல்லுநர்களால் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களாலும் நம்பமுடியாத அதிசயமாய் அவன் வரலாறு திகழும்.

எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணற்ற தோழர்கள், அவன் செய்தவைகள், அவன் பெற்ற பட்டறிவுகள் எண்ணி முடியாதவை. எழுத்தில் அடங்காதவை.

ச.பொட்டு (பொட்டம்மான்)புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொழில்நுட்பத் தந்தை - கேணல் ராயு -2012


கேணல் ராயு

 அம்பலவாணன் நேமிநாதன்
யாழ்-மாவட்டம் சுன்னாகம்

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் மாபெரும் தொழில்நுட்ப வளரச்சிக்கு வித்திட்ட கேணல் ராயு அவர்களின் 10 ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். .மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி, விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு போரியல் ஆற்றலாளன், ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும் போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன், கேணல் ராயு என்கிற அம்பலவாணன் நேமிநாதன். இவர் யாழ்-மாவட்டம் சுன்னாகம் பகுதியில் திரு. திருமதி. அம்பலவாணன் தம்பதியினருக்கு மகனாய்ப்பிறந்தார்.

தமிழீழ மக்கள் சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை வேட்கையும் கொண்ட கேணல் ராயு அவர்கள் தன்னை தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்டார். போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களிலெல்லாம் தேசியத் தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலைப்போரில தன்னை முழுமையாக அர்ப்பணித்துக கொண்டவர்.

விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார்.

போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன. விடுதலை இயக்கத்தின் இராணுவ அறிவியல் ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இயல்பாகவே இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டு, விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான பல புதிய உருவாக்கங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்து பல களங்களில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்து வழிநடத்திய இவர் 25ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2002ம் ஆண்டு மனித இனத்தின் கொடிய எதிரியான புற்றுநோய் காரணமாக வித்தாகிப்போனார். புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது விடுதலைப் புலிகளுக்கு இராணுவ அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார். இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார். அதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் -2012

அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீது “எல்லாளன்” என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் மேலும் பல வானூர்திகள் சேதமாக்கப்பட்டன.

பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.


அவர்களின் விபரம் வருமாறு:


லெப்.கேணல் வீமன் 
(கோபாலபிள்ளை பிரதீபன் - திருகோணமலை)

லெப். கேணல் இளங்கோ 
(இராசதுரை பகீரதன் - யாழ்ப்பாணம்)

லெப். கேணல் மதிவதனன் 
(பாலசுப்பிரமணியம் தயாசீலன் - யாழ்ப்பாணம்)

மேஜர் சுபன் 
(கதிரவன் ஜீவகாந்தன் - யாழ்ப்பாணம்)
மேஜர் கனிக்கீதன் 
(இராசன் கந்தசாமி - மட்டக்களப்பு)

மேஜர் இளம்புலி 
(துரைரட்ணம் கலைராஜ் - யாழ்ப்பாணம்)

மேஜர் காவலன் 
(சண்முகம் சத்தியன் - கிளிநொச்சி)
மேஜர் எழிலின்பன் 
(விமலநாதன் பிரபாகரன் - யாழ்ப்பாணம்)
கப்டன் தர்மினி 
(கணேஸ் நிர்மலா - கிளிநொச்சி)

கப்டன் புரட்சி 
(செல்வராசா தனுசன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கருவேந்தன் 
(மயில்வாகனம் சதீஸ்குமார் - கிளிநொச்சி)

கப்டன் புகழ்மணி 
(தர்மலிங்கம் புவனேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் புலிமன்னன 
(கணபதி நந்தகுமார் - யாழ்ப்பாணம்)

கப்டன் அன்புக்கதிர் 
(வில்சன் திலீப்குமார் - முல்லைத்தீவு)

கப்டன் சுபேசன் 
(நாகராசா மகாராஜ் - மன்னார்)

கப்டன் செந்தூரன் 
(கணேசநாதன் தினேஸ் - யாழ்ப்பாணம்)

கப்டன் பஞ்சீலன் 
(சிவானந்தம் கஜேந்திரன - மட்டக்களப்பு)

கப்டன் ஈழப்பிரியா 
(கந்தையா கீதாஞ்சலி - யாழ்ப்பாணம்)

கப்டன் அருள்மலர் 
(சேவியர் உதயா - யாழ்ப்பாணம்)

கப்டன் ஈழத்தேவன் 
(தங்கராசா மோசிகரன் - யாழ்ப்பாணம்)
லெப். அருண் 
(பத்மநாதன் திவாகரன் - யாழ்ப்பாணம்)
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.

நாகர்கோவிலில் காவியமான மூன்று கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள் -2012

“ஓயாத அலைகள் - 4” நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன், கப்டன் சரத்பாபு ஆகியோரினதும், மட்டக்களப்பில் காவியமான லெப். அருள்மதன் என்ற மாவீரரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

24.10.200 அன்று “ஓயாத அலைகள் - 4” நடவடிக்கைக்கு வலுச்சேர்ப்பதற்காக நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை ஒன்றின்போது


கரும்புலி மேஜர் சோபிதன் 

(துரைச்சாமி ஜீவகணபதி - மூன்றுமுறிப்பு, வவுனியா)

கரும்புலி மேஜர் வர்மன் (மேனவன்) 

(வடிவேல் தங்கத்துரை - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

கரும்புலி கப்டன் சந்திரபாபு
(குமரப்போடி லிங்கராசா - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் மட்டக்களப்பு காமினிபுரம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்

லெப்டினன்ட் அருள்மதன்
(வேலுப்பிள்ளை ஜீவராஜ் - மாணிக்கமடு, அம்பாறை)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கடற்கரும்புலிகள் நளினன் - ஜெயராஜ் -2012

திருகோணமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நளினன், கப்டன் ஜெயராஜ் மற்றும் கடற்புலி 2ம் லெப்.மதன், வவுனியாவில் காவியமான மேஜர் திருமகன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

25.10.1996 அன்று திருகோணமலை துறைமுக நுழைவாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான “டோறா” அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து மூழகடித்து

கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்)
(தெய்வேந்திரன் யோகேஸ்வரன் - மூதூர், திருகோணமலை)

கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி)
(கந்தசாமி கோபாலகிருஸ்ணன் - காரைநகர், யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மதன்
(நாகராசா குகதாசன் - விநாயகபுரம், அம்பாறை)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதே நாள் வவுனியா கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது

மேஜர் திருமகன் (விஜேய்)
(நவரட்ணராஜா நாகராசா - யாழ்ப்பாணம்)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

வவுனியாவில் காவியமான கப்டன் லோறன்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள் -2012

பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தாயகத்திற்கான பயணத்தினை நிறைவு செய்து தமிழகம் திரும்பும்வேளை அவரை மன்னார் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டு தளம் திரும்பும்வேளை வவுனியாவில் இடம்பெற்ற மோதலில் காவியமான நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தளம் திரும்பி வரும் வழியில் வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு:


கப்டன் லோறன்ஸ்
(மருதலிங்கம் சிவலிங்கம் - கொக்குத்தொடுவாய், மணலாறு)

லெப்டினன்ட் சபா
(கந்தையா சிவமூர்த்தி - கொக்குத்தொடுவாய், மணலாறு.)

2ம் லெப்டினன்ட் லலித்
(நடேசு இராஜேந்திரன் - முள்ளியவளை, முல்லைத்தீவு.)

2ம் லெப்டினன்ட் ஜீவன் (குதிரைவீரன்)
(தம்பிஐயா இரத்தினசாமி - முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்)

தமிழீழ தாய் மண்ணின் விடுதலைக்காய் தமது இன்னுயர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் -2012

முல்லைத்தீவில் காவியமான கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி, திருகோணமலையில் காவியமான கப்டன் அகத்தியன், கப்டன் நீலவாணன், 2ம் லெப். பூவிழி ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 26.10.2001 அன்று


கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி
கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி
(சின்னப்பு நந்தினி - செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இதேநாள் திருகோணமலை மாவட்டம் உப்பாறு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை தாக்குதவற்காக வந்த படையினரை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது

கப்டன் அகத்தியன்
(துரைசிங்கம் நகுலேந்திரன் - மல்லிகைத்தீவு, மூதூர், திருகோணமலை)

கப்டன் நீலவாணன்
(சுப்பிரமணியம் ராஜிக்கண்ணன் - இறால்குழி, மூதூர், திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் பூவிழி
(கணபதிப்பிள்ளை றோகினி - கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலை)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதியின் 24ம் ஆண்டு நினைவு நாள் -2012

திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதியின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

10.12.1988 அன்று யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினர் மற்றும் தேசவிரோதிகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது தன்னைத்தானே சுட்டு

யாழ்.மாவட்டத் தளபதி
லெப்.கேணல் மதி
(சுப்பிரமணியம் பாலச்சந்திரன் - மல்லாகம், யாழ்ப்பாணம்)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட 14 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்-2012

பாலத்தோப்பூரில் காவியமான லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனையில் காவியமான 10 மாவீரர்களினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
 
11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது


லெப்.கேணல் மனோஜ்
(பாலசிங்கம் வந்தகுமார் - உவர்மலை. திருகோணமலை)

மேஜர் குமாரவேல்
(செல்வராசா ஆனந்தன் - மாமாங்கம், மட்டக்களப்பு)

லெப். கலைமதி

(செல்வநாயகம் தர்சினி - மூதூர், திருகோணமலை)

2ம் லெப்.தேவன்

(கென்றி செபஸ்ரியான் - மூதூர், திருகோணமலை)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் மட்டக்களப்பு வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படைமுகாம் என்பவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது
 
கப்டன் சற்குணராஜ்
(தம்பிப்பிள்ளை மதியழகன் - மத்தியமுகாம், அம்பாறை)

கப்டன்  பிரதாவரன்
(இராசையா சற்குணம் - மல்வத்தை 2, அம்பாறை)

கப்டன் மணிராஜ்
(சிங்காரவேல் கமலேந்திரராசா - வாகரை, மட்டக்களப்பு)

லெப்.மணியரசன்
(குமாரசூரியம் ரவிச்சந்திரன் - சித்தாண்டி, மட்டக்களப்பு)

லெப். முகுந்தன்
(நடராசா யோகேஸ்வரன் - விநாயகபுரம், அம்பாறை)

2ம் லெப். உமாகரன்
(சிவசம்பு சசிக்குமார் - கரடியனாறு, மட்டக்களப்பு)

2ம் லெப். வினோகரன்
(சதாசிவம் சௌந்தராஜன் - நெடியமடு, மட்டக்களப்பு)

2ம் லெப். மணிகண்ணன்

(கணேஸ் சண்முகநாதன் - சந்திவெளி, மட்டக்களப்பு)

2ம் லெப். முகுந்தனன்

(அழகப்பொடி ஜெயகாந்தன் - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

2ம் லெப். மணிப்பிறை

(மகேந்திரன் மகேஸ்வரன் - கரடியனாறு, மட்டக்களப்பு)
 
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

லெப்.கேணல் மறவனின் 8ம் ஆண்டு நினைவு நாள் -2012

முல்லை மாவட்டத்தில் சாவினை அணைத்துக் கொண்ட கடற்புலிகளின் முதன்மை உறுப்பினரான லெப்.கேணல் மறவன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

11.12.2004 அன்று முல்லை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக


லெப்.கேணல் மறவன்
(எலியாஸ்பிள்ளை ஸ்ரனிலோஸ் - தாழையடி, யாழ்ப்பாணம்)

என்ற போராளி சாவினை அணைத்துக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞசில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் குமணன் உட்பட்ட 10 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்

“ஓயாத அலைகள் - 3” நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் குமணன் உட்பட்ட 10 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

12.12.1999 அன்று ஒயாத அலைகள் - 3 நடவடிக்கையின்போது பூநகரி, இயக்கச்சி, வடமராட்சி ஒல்லன்காடு மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளில் 10 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.


பூநகரிப் பகுதியில்

வீரவேங்கை வர்ணன்

(விக்கினேஸ்வரன் அஜந்தன் - யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு)

என்ற போராளியும்,

இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற சமரில்

லெப்டினன்ட் பாணன் (நாதன்)

(சன்னாசி நாகராசா - வட்டக்கச்சி, கிளிநொச்சி)

என்ற போராளியும்,

வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் இடம்பெற்ற சமரில்

லெப்.கேணல் குமணன் (சாள்ஸ்)

(கந்தையா சிவனேஸ்வரநாதன் - கோவில்புளியங்குளம், வவுனியா)

லெப்டினன்ட் இசையழகன்

(நவரத்தினராசா நவநீதன் - செல்வபுரம், வவுனியா)

வீரவேங்கை இன்பன் (பாரதி)

(குலசேகரம் குகன் - நுணாவில், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புனிதன் (துமிலன்)
(நாகரத்தினம் கஜன் - நீர்வேலி, யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகளும்

மேஜர் மதன் (ரவியப்பா)

(முனியாண்டி மதியழகன் - முள்ளிக்கண்டல்,மன்னார்)

கப்டன் கர்ணன் (திண்ணன்)

(பாலசுப்பிரமணியம் பிரதீபன் - கொல்லங்கலட்டி, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் புதியவள்

(தெய்வேந்திரம் சிவராஜினி - மல்லாகம், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுடர்வள்ளி (நிலாஜினி)

(இராசரத்தினம் சுகந்தினி - கல்வயல்,யாழ்ப்பாணம்)

ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

லெப்.கேணல் சிவமோகன் உட்பட்ட 14 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்

ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் சிவமோகன் உட்பட்ட 14 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
13.12.1999 அன்று ஓயாத அலைகள் 3 தொடர் நடவடிக்கையின் போது யாழ். குடா மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது 14 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
யாழ். மாவட்டம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற சமரில்

லெப்.கேணல் சிவமோகன் (சதாசிவம் கிருபாகரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
கப்டன் ஈழத்தரசன் (முருகையா கேதீஸ்வரன் - பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி)
லெப்டினன்ட் கவிகரன் (குணேஸ் ரவீந்திரன் - பெரியபோரதீவு, மட்டக்களப்பு)
லெபடினன்ட் மலைமகன்/மலைமாறன் (அழகிப்போடி ஜெயா - நாவற்காடு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அகிலநாதன் (வேல்முருகு சுபாநாயகன் - அம்பிலாந்துறை, மட்டக்களப்பு)
ஆகிய போராளிளும்.
வெற்றிக்கேணிப் பகுதியில் நடைபெற்ற சமரில்
கப்டன் பாவண்ணன் (கதிரவேற்பிள்ளை ஜெயகாந்தன் - வேலணை, யாழ்ப்பாணம்)
கப்டன் ஞானமதி (சரணானந்தம் கௌசிகா - கொக்குவில், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மாதவி (ஐயம்பிள்ளை விஜயராணி - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)
ஆகிய போராளிளும்.
தாளையடிப் பகுதியில் நடைபெற்ற சமரில்
கப்டன் ஆராதனா (பாலசுப்பிரமணியம் சந்திரவதனி - பூநகரி, கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் குமணன் (சதாசிவம் மகா - மன்னம்பிட்டி, மட்டக்களப்பு)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் பெரியதம்பி (தங்கராசா தவராசா - மணலாறு)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சந்திரன் (பிள்ளையான் சந்திரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
ஆகியோரும்
கொம்படிப்பகுதியில் நடைபெற்ற சமரில்
கப்டன் காஞ்சினி (சுப்பிரமணியம் அன்னலட்சுமி - கிரான், மட்டக்களப்பு)
ஒல்லன்காடு பகுதியில் நடைபெற்ற சமரில்
2ம் லெப்டினன்ட் நல்லமுதன் (அந்தோனி செல்வமாணிக்கம் - பரந்தன், கிளிநொச்சி)
மண்டலாய்ப் பகுதியில் நடைபெற்ற சமரில்
லெப்டினன்ட் கோலமகன் (இராமச்சந்திரன் சசிக்குமார் - மதியாமடு, வவனியா)
ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்

கிருமிச்சையில் காவியமான லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது

லெப்.கேணல் முரளி
(நல்லரட்ணம் சுவீந்திரராசா - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

மேஜர் சோழவளவன் (சோழன்)
(சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை - மண்டூர், மட்டக்களப்பு)

மேஜர் நிர்மல்
(முருகேஸ் ராதா - வைக்கலை, மட்டக்களப்பு)

மேஜர் தர்மினி
(சுந்தரலிங்கம் ராஜினி - தும்பங்கேணி, மட்டக்களப்பு)

கப்டன் காந்தகுமாரன்
(சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி - அக்கரைப்பற்று, அம்பாறை)

லெப்டினன்ட் மனோச்சந்திரன் (மனோச்சாந்தன்)

(கோபாலன் கிருஸ்ணகுமார் - ஆரையம்பதி, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் நளினன்
(மகேந்திரன் கிருபாசங்கர் - கல்லடி, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் கண்ணிதன்

(யோகராசா தயானந்தன் - கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

வீரவேங்கை ஜீவேந்தன்
(அழகுரத்தினம் பகீரதன் - தேத்தாத்தீவு, மட்டக்களப்பு)

வீரவேங்கை அஜிதரன்
(ஜீவா தர்சன் - கரடியானாறு, மட்டக்களப்பு)

வீரவேங்கை கௌரிகரன்
(வெற்றிவேல் மகேந்திரன் - கரடியானாறு, மட்டக்களப்பு)

வீரவேங்கை தருமராஜ்

(அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன் - நேரியகுளம், வவுனியா)

வீரவேங்கை ராமன்
(சுந்தரலிங்கம் கிருஸ்ணன் - வெல்லாவெளி, மட்டக்களப்பு)

வீரவேங்கை அம்பிகா
(செல்லையா மகேஸ்வரி - இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதேநாள் ஓயாத அலைகள் - 3 தொடர் நடவடிக்கையின்போது
முல்லை மாவட்டம் வன்னிவிளாங்குளம் பகுதியில்

வீரவேங்கை காந்தரூபன்

 (கந்தசாமி சதீஸ்குமார் - ஏறாவூர், மட்டக்களப்பு)
என்ற போராளியும்
மணலாறு கொட்டைக்காடு பகுதியில்

மேஜர் காதாம்பரி
(விக்ரர் அற்புதநாயகி - மாதகல், யாழ்ப்பாணம்)
என்ற போராளியும்
யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில்
 
2ம் லெப் பொதிகைமகன்
(சிவம் சசிதரன் - அச்சுவேலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புலிமகன்
(அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன் - வேலணை, யாழ்ப்பாணம் )
ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கப்டன் பண்டிதர் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்!

09.01.1985 அன்று யாழ். ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகைக்கு எதிராக தீரமுடன் களமாடி வரலாறாகிய கப்டன் பண்டிதர்(இளங்கே) உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
 
நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினருடன் தீரமுடன் களமாடி தமது தோழர்கள் தப்பிச்செல்ல வழியேற்படுத்திக்கொடுத்து
 
கப்டன் பண்டிதர்/இளங்கோ (சின்னத்துரை ரவீந்திரன்  - கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
 
வீரவேங்கை நேரு (செல்லையா தில்லைச்சந்திரன் - கச்சேரி,  யாழ்ப்பாணம்.)
 
வீரவேங்கை கராட்டி ரவி/ராஜீவ் (சோமசுந்தரம் பிரதாபன் - நல்லூர், யாழ்ப்பாணம்.)
 
வீரவேங்கை சாமி (ஆறுமுகம் தவரத்தினம் - ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்.)
 
வீரவேங்கை தவம் (நடேசு தவராசா - அச்சுவெலி தெற்கு, ஆவரங்கால், யாழ்ப்பாணம்.)
 
வீரவேங்கை சிவா (சிவகுரு சிவேந்திரன் - அச்சுவெலி தெற்கு, ஆவரங்கால், யாழ்ப்பாணம்.)
 
ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
 
தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

மேஜர் சோதியா 23ம் அண்டு நினைவு – விடியலின் சோதி

 
சுகயீனமாக இருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளை
1985இல் இந்தியாவில ஒரு பயிற்சிப் பாசறையில்… அம்மாவைப் பிரிந்து வந்த சில நாட்கள். கடல் பயணத்தால் உண்டான பதற்றம்.

பயிற்...சி எடுப்பதற்காக நாம் அனுப்பப்பட்ட மலைப்பிரதேசம். இந்த மூன்றையுமே நான் இதற்கு முன்னர சந்தித்திருக்கவில்லை. இந்தத் தாக்கத்தின் விளைவாக எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது.

எமது பயிற்சிப் பாசறையில் அமைக்கப்பட்டடிருந்த கொட்டிலினுள் கம்பளிப் போர்வையால் போர்த்தபடி “அம்மா, அம்மா “ என முனகியவாறு படுத்திருந்தேன். மெவாக ஒரு கை என் போர்வையை விலக்கி, உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதற்காக என் கழுத்தில் பதித்தது. கண்களை திறந்து பார்த்தேன். ஒர் அக்கா என் முன் நின்றார்.

“என்னம்மா செய்யுது என்ன, சாப்பிட்டீங்களம்மா காய்ச்சல் தானே. இப்ப மருந்து
தாறன். காய்ச்சல் உடனேபறந்து பொடும்” என்றார்.

அன்பான அம்மாவாகவும், கனிவான வைத்தியராகவும், நான் அன்று (மகளிர் படையணியின் முதலாவது தளபதியான)மேஜர் சோதியாக்காவைச் சந்தித்தேன்.

பயிற்சிப் பாசறையில இருந்தோரில், நான்உட்பட பெரும்பாலானோர் வயதில் சிறியவர்களாக இருந்தோம். அந்தச் சிறியவர்களுக்கு சோதியாக்கா அம்மாவாக விளங்கினார். நாம் எப்போதும் சோதியாக்காவைச் சுற்றி நின்று அவருக்கு கரைச்சல் கொடுத்துக் கொண்டு நிற்போம். அவரின் மடியில் கூட படுத்திருப்போம். ஒரு நாள்கூட சோதியாக்கா எங்கள் மேல் சினந்து வீழ்ந்தது கிடையாது.

பயிற்சிப் பாசறையில் எமக்கு நீண்ட நேரம பயிற்சிகள் நடக்கும். ஓடுவதில் இருந்து கயிறு ஏறுதல், மலை ஏறுதல் என்றெல்லாம் பயிற்சி நடக்கும். பயிற்சிகள் முடிந்ததும் எங்களது கொட்டில்கள் நோக்கி ஓடிவருவோம். கடுமையான பயிற்சி காரணமாக உடம்பெல்லாம் நோகும். வந்ததும்வராததுமாக கொட்டில்களுக்கு முன்னால் உள்ள ;மரங்களின் கீழ் வீழ்ந்து படுத்துவிடுவோம். சிலர் கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தில் நித்திரையாகி விடுவார்கள். இவ்வளவு பயிற்சிகளையும் எங்களுடன் சேர்ந்து எடுத்த சோதியாக்கா படுப்பாரா? இல்லை. அவருக்கு படுப்பதற்கோ, களைப்பாறுவதற்கோ நேரமே கிடையாது. எங்கள் பயிற்சியாளர்களில் காய்ச்சல், கால்நோ, கைநோ, வயிற்றுக்குத்து என்றும், கழுத்து, கால், கை உளுக்கி விட்டது என்றும் படுத்திருப்பவர்களுக்கு ஓடி ஓடி வைத்தியம் செய்வார். நோ உளுக்கு என்றவர்களுக்கு நோ எண்ணெய் போட்டுத் தேய்ப்பார். அதே நேரம் அவரின் நெற்றியால் வியர்வை சிந்தும். தனது கையால் அந்த வியர்வையை வீசி எறிந்துவிட்டு தனது கடமையைத் தொடருவார். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கொட்டில் கொட்டிலாகச் சென்று, முதல் வருத்தமென்ற படுத்திருக்கின்ற தோழிகளுக்கு உணவு கொடுத்து, மருந்து கொடுத்து விட்டு விரைந்து வருவார். சோதியாக்காவின் நடை மிகவும் வேகமானது. ஆள் நல்ல உயரம் கால்களும் ;நீளமானவை. கால்களை எப்போதும் எட்டி எட்டி வைத்து வேகமாகத்தான் நடப்பார்.

நான் சோதியாக்காவின் வேகத்தையும் அவர் வியர்வை சிந்திச்சிந்தி தோளில் பயிற்சிக்குரிய மரத்துப்பாக்கியுடன் சக தோழிகளுக்கு செய்யும் சேவையையும் ;பார்த்துவிட்டு எனது தோழி கப்டன் ரஜனியிடம் கூறுவேன். “பாவமடி சோதியாக்கா…” அவளும் “ஓமடி” என்பார்.

உடனடியாக செய்யவேண்டிய முதலுதவிச சிகிச்சைகள் முடிந்ததும் சோதியாக்கா மருத்துவதுக்காக ஒதுக்கப்பட்ட கொட்டிலுக்குள் போவார். அங்கே மருந்து எடுப்பதற்கு வரிசையில் நிற்பார்கள். நாங்கள் எல்லோரும் போய்சாப்பிட்டுவிட்டு வருவோம். மருத்துவக் கொட்டிலுக்குள் போய் எட்டிப் பார்ப்போம். சோதியாக்கா மருந்து கொடுத்துக் கொண்டிருப்பார். “அக்கா வகுப்;பு தொடங்கப் போகுது. நீங்கள் சாப்பிடவில்லையா? போய் சாப்பிடுங்கோ அக்கா” என்போம். “இஞ்சை நிற்கிற இவ்வளவு பேருக்கும் மருந்து குடுத்து விட்டு போறேன்” என்பார். “அப்பா நாங்கள் சாப்பாடு எடுத்து வரவா அக்கா” என்றால் “அடி வாங்காமல் போங்கோ பார்ப்பம்” என்பார். எப்போதுமே சோதியாக்கா தனக்குரிய பணிகளை மற்றவர்களைக் கொண்டு ஒருபோதும் செய்விக்க மாட்டார். நாங்கள் சேதியாக்கா சொன்னதையம் மீறி சாப்பாடு எடுத்து வந்து கொடுப்போம். அந்தச் சாப்பாட்டை சாப்பிட நேரமில்லாது வைத்து மூடிவிட்டு வருவார். சில வேளை நின்றநிலையில் சாப்பிட்டுவிட்டு, வகுப்புக்கு வருவார். எப்போதும் சோதியாக்கா கடைசியாக வகுப்புக்கு வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டு, வகுப்பறையில் இருப்பார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது கூட ஆசிரியரிடம் சொல்லிவிட்டு கொட்டில்களில் வருத்தமாக படுத்திருப்பவர்களைச் சென்ற பார்த்துவிட்டு வருவார்.

சோதியாக்கா எங்களுடன் தான் பயிற்சி எடுத்தார். எங்கள் அனைவருக்கும் இருந்த அதேகளை, உடல் அலுப்பு அனைத்தும் அவருக்கும் இருந்ததுதான்.

அப்போதெல்லாம் நாங்கள் சோதியாக்காவைப் பார்த்து “பாவமடி சோதியாக்கா” என்று கதைப்போம். அவ்வளவு தான். அதற்கு மேல் யோசித்துப் பார்க்க எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. சிந்தித்துப் பார்க்கவும் முடியவில்லை. இப்போது அந்த சோதி வடிவமான சோதியாக்காவையும் ஓய்வு உறக்கமின்றி அவர் செய்த வேலைகளையும் சேவைகளையும் நினைக்கின்றபோது உண்மையிலே என் கண்கள் தானாகவே நீரைச் சொரிகின்றன. எப்படி சோதயாக்காவால் தன்னை வருத்தி இப்படியெல்லாம் செய்ய முடிந்தது. ஒரு உண்மையான விடுதலை வீரராங்கனை தன்னலமற்றவள் என்பதை எங்கள் சோதியாக்கா தன் வாழ்க்கை மூலம் மெய்ப்பித்துக்காட்டிவிட்டார்.

நாங்கள் தமிழீழத்திற்கு வந்த பின்னர் வன்னிப் பிராந்தியத்தில் ஒரு அடர்ந்த காட்டின் நடுவிலே தளம் அமைத்திருந்தோம். அங்கே எமக்கு ஒரு கிணறு தேவைப்பட்டது. நாங்களே கிணற்றை வெட்டினோம். அந்த நேரம் எமக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. கஞ்சியையும், ரொட்டியையம் சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கிணறு வெட்டினோம். தண்ணீரோ வருவதாகத் தெரியவில்லை. இதனால் மிகவும் சோர்வடைந்து போன நாங்கள் அந்த கடினமான சூழலில் தொடர்ந்து நின்று பிடிக்கும் வலுவை இழக்கத் தொடங்கினோம். அதன் விளைவாக தெளிவில்லாத கதைகளை கதைத்தோம். இதை அவதானித்த சோதியக்கா, கதைத்த எங்கள்அனைவரையும் கூப்பிட்டு, எங்களின் மனம் தெளிகின்ற அளவுக்கு போராட்டத்தைப் பற்றிய விளக்கம் தந்தார். நாங்கள் Nசுhதியக்காவின் விளக்கத்தினால் புது வேகம் பெற்று புத்துணர்ச்சியோடு மீண்டும் சோதியக்காவோடு சேர்ந்து நின்று கிணற்றைத் தோண்டி தண்ணீரையும் கண்டோம். துள்ளி எழுந்து சோதியக்காவின் தோளில் தொங்கிக்கொண்டு நின்று கூக்குரலிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து குதூகலித்தோம்.

காட்டில் இருக்கும் காலத்தில் எங்களுக்குரிய உணவுகளை நீண்ட தூரத்தில் இருந்து மூட்டைகளாக தலையிலும், தோளிலும் சுமந்து கொண்டு வந்து தளத்தில் சேர்த்தோம். மூட்டைகளை சுமந்து வர எல்லோருமே செல்வோம். சோதியக்காவும் எங்களுடன் வருவார். அரிசி, மா, சீனி என்றும் உப்பு, புளி, பருப்பு என்று மூட்டை மூட்டையாகச் சுமந்து வந்தோம். சோதியக்கா எல்லோருடைய தலைகளிலும் பாரங் குறைந்த மூடைகளைத் தூக்கி வைத்துவிடுவார். சோதியக்கா மிகவும் உயரம் என்றதால் எல்லோரும் பொதிகளைத் தூக்கி தலையில் வைக்கச் சோதியக்காவையே அழைப்போம். மிகவும் களைத்தால் வரும் வழியில் மூடைகளை கீழே போட்டுவிட்டு இளைப்பாறுவோம். சோதியக்கா வந்து மீண்டும் தூக்கி விடுவார். தளத்துக்கு வந்ததும் மூட்டைகளை போட்டுவிட்டு ‘கழுத்துக்கை பிடிக்குது, தோள் நோகுது” என்றபடி மரங்களின் கீழ் அமர்ந்து இரண்டு மூன்று பேராக கதைப்போம். சோதியக்கா ஒரு கூழா மரத்தின் கீழ் இருப்பார். சோதியக்காவுக்கு அந்த மரத்தின் அமைதி சரியான விருப்பம். அதனால் அந்த மரத்தின் கீழே தான் வழமையாக இருப்பார்.

ஒருநாள் நானும் கப்டன் ரஜனியும் உப்பு மூடைகள் தூக்கி வந்தோம். இரண்டு பேருக்கும் கழுத்துக்குள் உளுக்கிவிட்டது. விக்கி விக்கி அழத்தொடங்கினோம். எங்களுக்கு எப்போதாவது ஏதாவது துன்பம் என்றால் சோதியக்காவுக்கு அருகில்தான் இருப்போம். அன்றும் அதே மாதிரித்தான் கப்டன் ரஜனி சொன்னார் ‘நாங்கள் துவக்கு எடுத்து ஆமியோடை சண்டை பிடிக்க மட்டும் தான் வந்தனாங்கள், இப்படி மூட்டை தூக்க வேணும், கிணறு வெட்டவேணும் எண்டு தெரிந்திருந்தா வந்திருக்கமாட்டோம்” என்றார். அதற்கு நானும் ‘ஓமடி நானும் அப்படி நினைச்சுத்தான் வந்தனான்” என்றேன். எங்களின் இந்த உரையாடலை மேலே தொடரவிடாமல் இடை நிறத்தினார் சோதியக்கா. ‘இஞ்ச, நீங்க இரண்டு பேரும் ஆகச் சின்னப் பிள்ளைகள் மாதிரிக் கதைக்காதையுங்கோ. போராட்டம் எண்டா கஸ்ரம்தான். முள்ளும், கல்லும் நிறைஞ்ச பாதையில போய்த்தான் நாங்க தமிழீழம் பிடிக்க வேணும்” என்றார். நான் உடனே சொன்னேன் “ஓமக்கா நீங்க சொல்லுறது சரிதான். நாங்க மூடை தூக்கப் போற ஒற்றையடிப் பாதையில காலில குத்துற முள்ளும் கல்லும் எங்களோடையே சேர்ந்து வருது. அதோட பெரிய முள்ளெல்லாம் எங்களை பாவம் பார்த்து போகவேண்டாமெண்டு பிடிச்சு பிடிச்சு இழுக்குதுகள்” என்றேன். உடனே சோதியக்காவுக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ‘நான் சீரியசாக கதைக்கிறன். நீ பகிடி விடுகிறாய் போ. எனக்கு முன்னால் நிற்காதே” என்றார். ‘இல்லையக்கா இனிமேல் நான் இப்படிப் பகிடிவிடமாட்டேன்” எனக் கெஞ்சிய போது தொடர்ந்து எங்களுக்கு போராட்டத்தைப்பற்றி விளக்கமளித்தார்.

‘உதாரணமாக நாங்கள் வீட்டில் இருக்கிற நேரம் பள்ளிக்கூடத்தில முதலாம் வகுப்பு படிச்சுப் போட்டு திடீரென்று பத்தாம் வகுப்புக்கு போறதில்லை. படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாப் படிச்சு முன்னேறிப் போவம். அதேமாதிரித்தான் எங்கட போராட்டமும். இப்ப நடந்து போய் தலையில மூடை தூக்கிறம். கொஞ்சக் காலத்தில டிராக்டரில கொண்டு வருவம். இப்படியே நாங்கள் வளர்ச்சி அடைஞ்சு எங்கடை தமிழீழத்தை அடைவம். அதற்கிடையில நீங்க குழப்பமான கதைகளை கதைச்சு உங்களை நீங்களே குழப்பாதேங்கோ என்று தொடங்கி ஒரு நீண்ட விளக்கத்தை எனக்கும் ரஜனிக்கும் சோதியக்கா கூறினார். சோதியக்காவின் விளக்கத்தால் நாங்கள் மிகவும் தெளிவடைந்தோம். பின் நானும் ரஜனியும் உணவு மூடைகளை சுமப்பதிலும் கிணறு வெட்டுவதிலும் முன்னுக்கு நின்றோம். இதற்கு முழுக் காரணமாக இருந்தவர் சோதியக்காதான்.

முகாமில் இருக்கும்போது, காடுகளில் பாசறை அமைத்து வாழ்ந்தபோது நாங்கள் எங்களுக்குள் ஒருவருடன் ஒருவர் நன்றாகச் சண்டை பிடிப்போம். சண்டை பிடித்தபின் மூன்று நான்கு நாட்களுக்கு கதைக்காமல் ஒருவரை ஒருவர் கண்டால் முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்போம். இயக்கத்தில் இணைந்து அப்போது கொஞ்சக் காலந்தான். வீட்டுப் பழக்கங்கள் பெரும்பாலும் அப்படியேதான் இருந்தன. வீட்டில் தம்பி, தங்கையுடன் குத்துப்பட்டு, கூத்தாடி, சண்டை பிடித்துச் சண்டை பிடித்துப் பழகிப் போனது தானே. இயக்கத்தில் வந்தும் ஒரு கூட்டு வாழ்க்கையைச் சந்திப்போம். இந்த வாழ்க்கையை இதற்கு முன் எப்போதுமே சந்தித்திருக்கவில்லைதானே. வீட்டில் ஐந்து ஆறு பேருடன் இருக்கும்போதே குத்துப்பட்டு சண்டைபிடித்த நாங்கள், நூற்றுக்கணக்கானவர்களுடன் ஒன்றாக இருந்தால் எப்படி இருப்போம்?

சண்டை பிடிப்பவர்களையும், ஒருவரோடொருவர் கதைக்காமல் இருப்பவர்களையம் சோதியக்கா கூப்பிட்டு அறிவுரைகள் கூறிக் கண்டிப்பார். ‘இஞ்ச வாங்கோ இரண்டு பேரும். ஏன் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்காமல் இருக்கிறியள் இந்தப் பழக்கம் எல்லாத்தையும் வீட்டில விட்டுட்டு வந்திட்டம். ஒரு இலட்சியத்துக்காகத் தான் எல்லாரும் சேர்ந்திருக்கிறம். இஞ்ச அம்மா, அப்பா பந்த பாசங்கள் எல்லாமே ஒருத்தருக்கு ஒருத்தர் நாங்க தான். ஒருத்தரை ஒருத்தர் தெரியாத நாங்க ஏன் ஒண்டாயிருக்கிறம். எங்கட மண்ணில் இருந்து அன்னியனை துரத்தியடிச்சு எங்கட மண்ணை மீட்டெடுக்கத்தானே” இப்படி தெளிவான விளக்கம் மணிக்கணக்கில் சோதியக்கா தருவார்.

சோதியக்காவின் விளக்கத்தால் தெளிவடையும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமான சிhப்பொன்றை சிரித்துவிட்டு ‘இனிச் சண்டை பிடிக்கமாட்டோம்” எனச் சோதியக்காவிடம் சொல்லிவிட்டு தெளிந்த மனத்துடன் எழுந்து செல்வோம். அந்த மூன்று வருட காலத்தில் நான் சோதியக்காவிடம் நிறையப் படித்துக் கொண்டேன். எங்களுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார். ஷகுழப்படிகள்| என்று கொஞ்சப்பேர் இருந்தோம். இவர்களில் கப்டன் ரஜனி, கப்டன் தமயந்தி, கப்டன் ஆசா, மேஜர் தாரணி, 2ம் லெப் மாலதி என்று பலர் அடங்குவர். இந்தக் குழப்படிகளைத் தனது அன்பான கண்டிப்புக்களாலும் அறிவரைகளாலும் மேஜராக, கப்டனாக, லெப்டினன்டாக வளர்த்து விட்டவரும் வளர்வதற்குக் காரணமாக இருந்தவரும் மேஜர் சோதியக்காதான்.

எங்களின் தாயாக, தாதியாக, ஆசிரியையாக இவ்வளவுக்கும் அப்போது சோதியக்கா சாதாரண ஒரு போராளியாகத்தான் இருந்தார். வழமையாக எங்களுக்கென பொறுப்பாக விடப்படும் போராளிதான் எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுவார். ஆனால்….. எங்களின் சோதியக்கா வித்தியாசமானவர்….

- ரதி

கேணல் கிட்டு: அழகான ஆளுமை – ச.ச.முத்து

“ஒரு சுதந்திரவீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன” “அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான். போராடினான்” “போர்க்களத்தில் வீரனாகவும், பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது”
“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.” “நீண்ட ஓய்வில்லாதபுயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு அவன்”
“நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக நான் அவனை நேசித்தேன்.”
“எனது சுமைகளை தாங்கும் இலட்சியதோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாற்பட்டது”
 “அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஒரு உணர்வுப்பூகம்பத்தை மனிதமொழியில் விபரிக்கமுடியாது”
“அவனது மறைவு எனது ஆன்மாவை பிழிந்தஒரு சோகநிகழ்வு. அதனை சொற்களால் வார்த்துவிட முடியாது”
1993ம் ஆண்டு ஜனவரி 16ம்நாள் வங்கக்கடலில் கிட்டு வீரகாவியமானபோது தேசியதலைவரால் விடுக்கப்பட்ட செய்தியில் இருந்த மிகமுக்கியமான வாக்கியங்கள்தான் மேலே உள்ளவை. தேசியதலைவர் சொல்லி இருப்பதுபோல கிட்டுவின் வரலாறு என்பது சொற்களால் வார்த்து முழுமையாக வெளிக்காட்டிவிட கூடியது அல்ல.
தமிழீழத்தினது மட்டும் அல்லாமல் முழு உலக தமிழினத்தின் ஆன்மாவாக தேசியதலைவரே விளங்குகிறார். அவரது ஆன்மாவையே பிழிந்ததாக கிட்டுவின் இழப்பு இருந்திருக்கிறது என்றால் அவருக்குள் எவ்வளவு தூரம் ஆழமாக அவன் பதியம் போட்டு இருந்திருக்கிறான். மனிதமொழியில் கூறப்பட்டிருந்த உறவுமுறைக்கெல்லாம் அப்பாற்பட்டதான அந்த உறவு எப்படி பிணைந்தது…? இன்றும்கூட தாண்டிசெல்லவும், இட்டு நிரப்பவும் முடியாத பெரும் இடைவெளியாகவே அவனின் இடம் இருக்கின்றது.
ஒரு இனத்தின் விடுதலைக்கான களப்பயணத்தில் அவன் வகித்த காலத்தின் பதிவு பாத்திரம் எத்தகையது என்று பார்க்கும்போதுதான் கிட்டுவின் வரலாறு வியப்புடன் விரிகிறது.அவனது வரலாறுமுழுதும் ஆளுமையின்வீச்சும்,அற்புதமான அறிவுத்தேடலும்,மண்டியிடாத வீரமும்,கட்டுக்குலையாத உறுதியும் நிறைந்தே இருக்கின்றது.
போராட்டத்துக்காக அவன் வந்தபோது இத்தனை ஆளுமை நிறைந்தவனாகவோ இத்தனை அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியவனாக இருந்தான் என்று எந்த தேவதையும் அசரீரி ஒலிக்கவில்லை அவன் போராட்டத்தின் ஊடாகவே கற்றான். போராட்டத்தை அவன் செதுக்கிபோது தானும் சேர்ந்தே சுயமாக செதுக்கப்பட்டான். அதுவே அவனை வரலாற்றின் உச்சமாக கொண்டும் சென்றது. அவன் அதுவரை வாழ்ந்திருந்த வாழ்வுக்கும் அவன் விடுதலைப்போராட்டத்துக்கு என்று புறப்பட்டு அண்ணையிடம் வந்த பின்னர் வாழ்ந்த வாழ்வுக்கும் உள்ள வித்தியாசம் மிகமிக பெரியது.
நடுத்தர குடும்பங்களைவிட வசதியான வாழ்வு, எந்நேரமும் இவனில் செல்லம்கொஞ்சும் பாசமுள்ள அம்மா, அன்பான மூத்த சகோதரன் என்றிருந்த குடும்பம் அவனது. சாப்பாடு கொஞ்சம் நேரம் பிந்தியதற்கே தாயுடன் கோபித்து கொள்ளும் இவனே பயிற்சிகளத்தில் 10,20 பேருக்கு சமைத்து உணவு பரிமாறுபவனாக தானாக ஏற்று வேலை செய்யும்போதுதான் இவனின் விடுதலைக்காக எதையும் எந்த வேலையையும் செய்ய தயங்காத குணம் தெரிந்தது.
விடுதலைப்புலிகளின் முதலாவது ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சிமுகாம் 1979ல் மாங்குளம் பண்ணையில் தலைவரின் நேரடி கண்காணிப்பில் ஆரம்பமானபோது யார் சமையல் என்ற தலைவரின் கேள்விக்கு பதிலாக தானே முன்வந்து அந்த வேலையை செய்ய ஆரம்பித்தில் இருந்து இறுதி நேரத்தில் வங்ககடலில் நின்றதுவரை அவன் எந்த வேலையையும் விடுதலைக்காக செய்வதில் பின்னின்றது இல்லை. 79ல் மட்டும் அல்லாமல் 1983லும் இவனே பயிற்சிமுகாம் சமையல். 83ல் கிட்டு அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினன். தலைவருக்கு அடுத்த வரிசையில் ஐந்து பேரில் ஒருவனாக இருந்தவன்.
அப்படி இருந்தும் 1983ல் புதியவர்களான பொட்டு, விக்ரர், லிங்கம் போன்றவர்களுக்கான பயிற்சி முகாமில் யார் சமைப்பது என்ற கேள்விக்கும் தானே முன்வந்து சமையல்பகுதியின் பொறுப்பை ஏற்கிறான். பயிற்சிக்கு வந்த புதிய உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது அங்கு கிட்டு சமையல் வேலையில் நின்றதை பார்க்க. அவர்கள் அந்த பயிற்சியில் கற்ற எல்லாவற்றையும்விட கிட்டுவை பார்த்து கற்றுக்கொண்டது ‘விடுதலைக்காக என்ன வேலை என்றாலும் அதை முழுமனதுடன் செய்யவேண்டும்’ என்பதாகும்.
விடுதலைக்கான களத்தில், சுதந்திரபோராட்ட அமைப்பில் என்ன வேலை என்றாலும் அது விடுதலைக்கானதுதான் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். விடுதலைக்கான களவேலையில் இன்ன வேலைதான் செய்வேன் என்று முடிவெடுத்து வருபவன் போராளி அல்ல என்பது இவனின் கருத்தாக இருந்தது. அதற்காக எல்லா வேலைகளையும் செய்தான் முழுமனதுடன்.
விடுதலைக்காக என்னவெல்லாம் செய்யமுடிமோ அவ்வளவற்றையும் தனது வாழ்நாள் முழுதும் தேடிதேடி கொண்டே இருந்தவன் கிட்டு. 81, 82களில் தலைவருடன்போய் தமிழகத்தில் நிற்கவேண்டிய ஒரு தேவை ஒன்று ஏற்பட்டபோது அதற்கும் போனான். அங்கும்போய் சும்மா நிற்காமல் அந்த நாட்களையும் விடுதலைக்கான ஏதாவது ஒன்றுக்கு பயன்செய்ய விரும்பினான். என்றாவது ஒருநாள் விடுதலைப் போராட்டம் வளர்ச்சி அடையும்போது அதற்கு தேவையான புகைப்பட நுணுக்கங்களையும், புதிய வர்ண அச்சு முறையாக அப்போது இருந்த லித்தோ அச்சுமுறையையும் தலைவரின் அனுமதியுடன் மதுரையில் படித்தான். அடுத்தவேளை சாப்பாட்டிற்கே சிரமமான அந்த மதுரை நாட்களில் இதனை படிக்கவேண்டும் என்றும் அதனை விடுதலைப்போராட்டத்துக்கு என்றாவது ஒருநாள் பாவிக்க முடியும் என்றும் இவன் சிந்தித்தது இன்றும் அதிசமாகவே இருக்கிறது.
இந்த தேடலும், தமிழீழ விடுதலையை பெற்றுவிடுவதற்கு தேவையான அனைத்தையும் தேடி தேடி எமது இனத்துக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற துடிப்பும்தான் கிட்டுவின் மிகப்பெரிய வேலையாக காலகாலமாக இருந்திருக்கிறது. இந்த தேடலானது அவன் அமைப்பில் இணைந்த 1979ல் மாங்குளம் பண்ணையில் பழைய .38 ரவைகளுக்கு மீள்பாவிப்புக்கு மருந்திடும் நுணுக்கம் கற்றுக்கொண்டது முதல் அவனின் இறுதி நாட்களில் 90களின் ஆரம்பத்தில் விடுதலைக்கான அங்கீகாரத்துக்கான ஒரு பெரிய முயற்சியில் தென்அமெரிக்காவின் மெக்ஸிக்கோ நாட்டில் நின்றபோது அந்த ஊன்று கோலுடன் அலைந்து அந்த மக்களின் இசை நுணுக்கமும் சித்திரங்களும் பற்றியும் தேடவைத்தது.
இந்த உணர்வுதான் அவனை எப்போதும் முன்னோக்கி சிந்திக்கவைத்தது. ஒரு விடுதலைப் போராட்டத்தின் மிகமுக்கியமான கட்டமாக நிலமீட்பு அமைகிறது. அந்த வகையில் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பின்னர் தமிழர்களின் நிலப்பகுதி ஒன்று எந்தவித இடையீடம் இன்றி தமிழர்களால் ஆளுப்படும் நிலையை ஏற்படுத்தியவன் அவன். 1985 ஏப்ரல்மாதம் யாழ் காவல்நிலையம் மீதான தாக்குதலை கிட்டு தலையேற்று நடாத்தி முடித்த கையோடு அதன்பின் வந்த நாட்களில் யாழ் மண்ணில் சிங்களபடைகளின் குறுக்கும் நெடுக்குமான ரோந்துகள் இல்லாமல் போகிறது. ராணுவம் முகாம்களுக்குள் முடங்கிபோனது. மீட்கப்பட்ட முதல் தமிழ் மண்ணை கிட்டு தமிழர் வரலாற்றில் காட்டுகிறான்.
இந்த நிகழ்வானது மிகவும் பாரிய அளவில் விடுதலைப்போராளிகளுக்கு மன உறுதியையும் தமிழ் மக்களுக்கு விடுதலைப்போராட்டத்தின்மீது உரம்மிக்க நம்பிக்கையையும் கொடுக்கிறது. மிகமிக குறைந்த அளவிலான போராளிகளையும் குறைந்த சூட்டுதிறன்கொண்ட ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு இதனை சாதித்ததில் கிட்டு என்ற தளபதியின் பங்கு பாரியது. யாழ்மாவட்டத்தில் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்து தினமும் வெளியேற முயற்சித்த படையினரை மறித்து திரும்ப அனுப்பும் களத்தில் எங்கெங்கும் கிட்டு நின்றதானது போராளிகளுக்கு பலமடங்கு வீரியத்தை தந்தது.
யாழ்மண் விடுதலைப்போராளிகள் வசம் வந்துவிட்டதுடன் கிட்டு திருப்தி கொள்ளவில்லை. எந்த ராணு வெற்றியையும் அரசியல்ஆக்குவதன் முலமே எமது மக்களுக்கான விழிப்புணர்வை கொண்டுவரலாம் என்பதால் ராணுவ ரோந்துகள் இல்லாத யாழ்மண்ணில் மக்கள் நீதி மன்றங்களையும், இணக்கசபைகளையும், சுயதொழில் ஊக்குவிப்புகளையும் இன்னும் பல கட்டமைப்புகளை நிறுவினான்.
அரசியல் வகுப்புகளையும், தெருநாடகங்களையும் நடாத்தி எமது மக்களுக்குள் விடுதலை கனலை ஏற்றுவதில் உழைத்தவன் அவன். யாழ் மாவட்டத்தில் முகாம்களுக்குள் ராணுவம் அடைபட்டதை வைத்தே ஒரு பெரிய ராசதந்திர நகர்வையும் விடுதலைப் போராட்டம் பற்றிய ஒரு பெருமிதமான பார்வையையும் கொடுப்பதற்காக அருணாவையும் காமினியையும் மீட்டு சிங்களதேசத்துடன் ஒரு கைதிகள் பரிமாற்றத்தை அழகாக செய்துகாட்டிய ராசதந்திரமேதை அவன்.
எல்லா ஆளுமைகளும் அவனுக்குள் ஒரு இரவில் வந்து குடியேறியவை அல்ல. அவன் அதற்காக நடாத்திய தேடல்கள் மிக அதிகம். அதனால்தான் ஒரு ஆற்றல்மிக்க போர்வீரனாக இருந்த அவனால் ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய தளபதியாகவும் மாற முடிந்தது.அதனால்தான் அவனால் ஒரு சிறந்த ஓவியனாகவும்,மிகச்சிறந்த புகைப்படம் பிடிப்பவனாகவும், ஊடகங்களை நடாத்தும் தனித்திறமை மிக்கவனாகவும், மிகமிக இலகுவாக பயிற்சிகளில் விளக்கம் தரக்கூடிய பயிற்சியாளனாக என்று அத்தனை ஆளுமைகளையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
அவன் விடுதலைக்காகவே இவை அனைத்தையும் செய்தான். ஒரு இரவில் அவன் வீட்டை விட்டு வெளியேறிய 1978ல் இருந்து அவன் வீரச்சாவடைந்த 1993வரை தாயகத்தின்பரப்பு எங்கும், அதன் பின்னர் தமிழகத்திலும், இந்தியாவிலும், அதற்கு பின்னர் இங்கிலாந்திலும் அங்கிருந்து புறப்பட்டு ஐரோப்பிய நாடெங்கும் திரிந்த போதிலும் ஒரு பொழுதில் விடுதலைக்காக உலகின் இன்னொரு முனையில் மெக்சிகோவில் போய்நின்றபோதிலும் அவன் விடுதலைக்காகவே வாழ்ந்தான் - போரிட்டான் - அலைந்தான் - கற்றான் - பயிற்றுவித்தான் எல்லாமே.
இறுதியில் விடுதலையின்மீது கொண்ட அதி உச்சமான விருப்பை வெளிக்காட்டவும் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் விடுதலைமீதான இலட்சிய உறுதியை சொல்லவும் தன்னை தீக்குள் ஜோதி ஆக்கினான். அவனதும் அவனுடன் வங்ககடலில் ஆகுதி ஆகிய ஒன்பது மாவீரர்களின் நினைவு என்றென்றும் அந்த அலையின் மீது மிதந்தபடியே இருக்கும். எங்கள் கரையையும் அவை வந்துவந்து தொட்டுபோகும் எங்கள் நினைவுகளை போலவே...

லெப். கேணல் கலையழகன் அண்ணாவின் 6 ம் ஆண்டு நினைவு நாள் -2013

கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும்எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும்.


தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது.

நான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப்பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் “திறவோர்“ எனும் பட்ட வழங்கி மதிப்பளிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான்.
 


கல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன தொலைத்தொடர்பாளனாக செயற்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வரிய வாய்ப்பினை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது தொடக்க கால நிகழ்வுகளை தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் தொடக்க காலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், “விடுதலைப் பேரொளி” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன.

செஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப்புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் முயற்சியெடுத்தான். ஏராளமானோரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை – காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டமை அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது.

எமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிடமெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை

2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும், ஆளுமையும், விடயங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை.

இவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது.

அவன் அழகானவன், பண்பானவன், பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம்.

பிரிகேடியர் சொர்ணம் வாழ்வு ஓர் வரலாறு

பிரிகேடியர் சொர்ணம்.


தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் விதையாகி வெடித்து வெளிவந்த வேங்கை.
எங்கள் விலங்குகளைச் சிதறடிக்க விடுதலைப் புலியாகியவன். எங்கள் அன்னை பூமிக்காக அனைத்தையும் துறந்தவன். நெஞ்சில் விடுதலையெனும் நெருப்பேந்தியவன். அவன் வாழ்வில் அவன் உதடுகள் அண்ணன் என்ற சொல்லைத்தான் அதிகபங்கு உச்சரித்தது. தலைவனைத் தன் கண்ணுள் வைத்ததால் அவன் தலைவனின் கண்ணாகியவன். தானைத் தலைவனின் எண்ணக் கருவுக்கு உருவமைத்தவன்.
அவன்தான் புலிகளின் மூத்த தளபதி புகழ் பூத்த தளபதி சொர்ணம்.
தம்பியை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர்தான் தயாளன். தந்தை யோசப் தாய் திரேசம்மா (பரிபூரணம்) என்ன தவம் செய்தனரோ? ஒரு உலகம் போற்றும் மாவீரனை மகனாகப் பெற. தாய் திரேசம்மாவின் மடி அது ஓர் புலியுறங்கிய குகை.
திருகோணமலை அது எப்பொழுதும் அலையெழுந்து ஆர்ப்பரிக்கும் ஓர் அழகிய நகரம். கடல் ©த்த ©மி. எங்கள் தமிழீழத்தின் தலைநகர் எனும் சிறப்பைப் பெற்றது. அந்தத் தலைநகர் தன் பங்கிற்காக தானைத் தளபதியைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உவந்தளித்தது. திருகோணமலை அரசடி அது அன்று திருமலை வாழ் சிங்களவரின் வயிற்றில் புளியைக் கரைக்குமிடம். சிங்களவரைப் பயத்தில் சிறுநீர் போகவைக்குமிடம். திருமலை அரசடி வாழைத்தோட்டம் அதுதான் தயாளனைப் பச்சிளம் குழந்தையாக பாலருந்தும் பாலகனாக பள்ளிச் சிறுவனாக பாடசாலை மாணவனாக தன் மடியில் சுமந்த மண். மலையென எழும் கடலலைகளை அன்றாடம் எதிர்த்து வாழ்ந்த குடும்பத்தில் பிறந்ததால் அலையையும் புயலையும் எதிர்த்து வளர்ந்தது அவர் வீரம்.
சிறுவயதிலேயே அவன் குறும்புகளுக்குக் குறைவில்லை. அது மட்டுமன்றி உடற்பயிற்சியிலும் தற்காப்புக் கலைகளிலும் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். அவர் நண்பர்கள் கூட்டத்தில் என்றும் அவர் தலை உயர்ந்து நிற்கும் கலகங்கள் வந்துவிட்டாலோ அவர் கரம் ஓங்கிநிற்கும்.
திருகோணமலை மாவட்டம் அன்று 80வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த மண். அதைச் சிங்கள பூமியாக்க சிங்களவர் மும்மரமாகச் செயற்பட்டகாலம். தயாளன் சிறுவயதிலேயே துவேசம் கொண்ட சிங்களவர் முப்படைகள் பொலீசாலும் தமிழ் மக்கள் படும் வேதனைகளையும் கொடுமைகளையும் கொலைகளையும் கண்டு கொதித்தெழும்பியவன். இதனால் வெறிகொண்ட சிங்களத்தின் கண்கள் தயாளனைக் குறிவைக்கத் தொடங்கியது.
உண்மையாகவே எங்கள் தமிழ் மண்ணை எங்கள் தமிழீழ எல்லைகளைக் காக்கவேண்டுமென்றால் அது எங்கள் தலைவனால் அமைக்கப்பட்ட புலிகள் அமைப்பில்தான் இணையவேண்டும் என்பதை தம்பி தயாளன் தூரநோக்கோடு நன்கு அறிந்துகொண்டார். அவர் தன் விடுதலை வேட்கையை வீச்சாக்க திருகோணமலை அர்ச் சூசையப்பர் கல்லூரியில் பயின்ற உயர்தரக் கல்வியை இடைநிறுத்திக்கொண்டு 12.09.1983ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார்.
தானைத் தலைவனின் வழிநடத்தலில் புடம்போட்ட தங்கமாகப் புதுப் பொலிவு பெற்று புதுப் புலியாகி எங்கள் தேசத்தின் எல்லைகளுக்கு தன்னுயிரை வேலியாக்கினான். அவன் கரங்களில் சுமந்த கருவிகள் பகைவனின் பகைமுறித்தது. அவன் மனங்களில் தோன்றிய பேராற்றல் பகைவனின் சதிமுறித்தது. தலைவன் கூறும் தத்துவங்களை எல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத் தளபதி. கயமைத்தனங்களைக் கட்டவிழ்த்துவிட்ட சிங்கள இராணுவத்திற்கோர் சிம்மசொற்பனம்.
களத்திலே இவன் இறங்கிவிட்டால் இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தாலும் எதிர்கொள்ளும் எதிரிகள் தலைதெறிக்க விழுந்தடித்து ஓடுவர். இவன் தலைவன் காட்டிய நெறியில் தவறியதில்லை இவன் வைத்த குறியும் தப்பியதில்லை.
அழகிய புன்முறவலும் அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன் . பட்டத்து யானைபோன்று நெடிய கம்பீரத் தோற்றம். புது யுகத்தின் அத்தியாயத்தை எழுதத் துடித்துநின்ற தானைத் தளபதி.
தமிழனின் விடிவிற்காய் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆக்ரோசமான போர் வியூகங்களைக் கண்டு அகமகிழ்ந்த அன்னைத் தமிழும் அரியணை ஏற ஆயத்தமானாள். ஆனாலும் உலகத்தின் துரோகக் கரம்ஒன்று பின்னால் தொடர்ந்ததை யாரறிவார்?. இருபதற்கும் மேற்பட்ட உலகில் சக்திவாய்ந்த நாடுகள் முண்டுகொடுக்க இனவெறிகொண்ட சிங்களம் கூன் நிமிர்ந்து எமது சொந்தங்களை வெறித்தனமாய் வேட்டையாடி எங்கள் தேசத்தைச் சுடுகாடாக்கியது.
அன்று உன்னதமான தமிழீழத் தலைமைத் தளபதி வீழ்ந்துவிட்டான். ஆம் வீழ்ந்துவிட்டான். ஆளரவமற்ற இருட்புலத்திலே புதைக்கப்பட்டான். அவனுக்காக யாரும் கண்ணீர் சிந்தினார்களா?
தெரியவில்லை. யாரோ அவனைக் கல்லறைக்கு எடுத்துச் சென்றனரே. அவனின் புகழ்வாய்ந்த பெயர் கூறிட அங்கே சிலுவையோ சமாதியோ மண்டபமோ ஏது மில்லையே. அங்கு தலை சாய்ந்திருந்த புல்லிதழ்கள் அவனின் மரணத்தை அறிந்திருக்கும். முள்ளிவாய்க்கால் கரையை மோதிச் சீறியடிக்கும் அலைகளே அவன் மரணத்திற்குச் சாட்சி.
வல்லமை வாய்ந்த அவ் அலைகளால் கூட தொலை தூரத்திற்கு அந்தச் செய்தியை எம்மிடம் கொண்டுவர முடியாமற் போய்விட்டதே. இன்று ஆண்டு ஒன்று ஆனபின்பும் நீ இறுமாப்போடு எழுந்து வருவாயென்று நான் எதிர்பார்த்தேனே. என் கனவுகள் பொடியானதே.
புறநானூற்றின் வீரத்தை புதிதாகப் பிறப்பித்த மாவீரன் விடுதலை தேடி வேகத்தோடு உயர்ந்து வீசியடித்த பேரலை இருபத்தாறு வருடங்களாக ஓயாது சுழன்றடித்த சூறாவளி ஓய்ந்துபோனது. மரணித்துவிட்ட எங்கள் விடியலே பலவீனமான எம் இனத்தின் பலமான உயிராயுதமே எமது திமிரின் அடையாளமே எங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட் டாயோ?
யேர்மன் திருமலைச்செல்வன்.

பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர்..4ம் ஆண்டு வீரவணக்க நாள் 15-05-2013

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது.தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள் , தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள்.பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில் , பல வழிகளை தன வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட்டு தலைமையிடம் சமர்பிக்கும் நேர்த்தியான தேசத்தின் மீது கொண்ட உயிரோட்டத்தால் தேசியத்தலைவரிடம் மதிப்பும் – நமிபிகையும் கொண்டு விளங்கினார் பிரிகேடியர் சரிக்குமார் அவர்கள்.

போராளிகள் மத்தியில் பிரிகேடியர் ” சரிக்குமார் மாஸ்ரர் ” என அன்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வேவுத்திட்டமிடல்கள் மூலம் பல தாக்குதல் வேவுத் திட்டமிடளாலும் பெரும் பதிப்புடன் நாளும் போராளிகள் மனதில் இடம் பிடித்தார். ஆயினும் மக்கள் மத்தியில் அறிந்திருந்தும் இப்படியான் ஓர் தளபதி உள்ளார் என்றும் ஆயினும் வெளியில் தெரியா வெளிட்சமாக நாளும் தொடர்ந்தார் தேசபணிகள் …ஆயினும் தன வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்பணித்த பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் – அவர் வழிகாட்டலில் சிறப்புத் தளபதியாக இருந்த வரைபடைத்துறை – வேவுப்புலிகள் பிரிவின் ஈகத்தை தியாக உணர்வை அவர்கள் தாய்நாட்டிற்காக அர்பணித்த பெரும் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை ஆயினும் விடுதலை சுவடுகள் உங்கள் மனதை தாய்மண்ணின் நினைவுடன் ஆளட்டும் என்றுமே , பிரிகேடியர் சரிக்குமார் மாஸ்ரர் விடுதலை பயணத்தில் அவரின் கடமை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் வேவுப்புலிகளின் ஈகத்தையும் ஓர் கனம் உணர்ந்து பாருங்கள் !தமிழீழ மண்ணில் பல சிங்களப் படைமுகாம் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் , எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து தாக்குதல்களையும் பின்னூட்டத்தில் வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி யாவும் என்பதை யாவரும் மடந்த்தில்லை ஆயினும் வெளிட்சத்திற்கு இந்த விடுதலை உரங்கள் தெரிவதில்லை என்பதே உண்மை …

எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான் மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது.பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது ; அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி !தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு , மேன்மை மிக்கது ; உன்னதமானது !

தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல் ; தளர்ச்சியற்ற பிணைப்பு !அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும் , எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும் , அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான்.

எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும் , மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரனுக்குள் வுவுப்புளி வீரர்களின் தடம் பதிந்துள்ளது.பன்னாட்டு சக்திகளும் – சிறீலங்கா அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய இனவெறியர்களுக்கு எதிராக விடுதலை தாகத்துடன் பல போராரிகளுடன் இணைந்து களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் வைகாசி 15ம் நாள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தார்.

இன்றும் தமிழீழ தேசம் மாபெரும் தளபதியை இழந்து தகிக்கும் தகிப்பை உணர்ந்து நாளை ஆயிரம் ஆயிரம் சசிக்குமார்கள் உருவாக்கி அவரின் விட்டுசென்ற பணியை ஏற்று தமிழீழம் மலர வைப்போம்.

தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பால்ராஜ் அவர்கள் - விஸ்வா

இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.

1997ம் ஆண்டு இதே மேமாதம் 13ம் திகதியன்று புத்த பிக்குகளால் நாள் நேரம் பார்த்து பிரித் ஓதி கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஜெயசிக்குறு நடிவடிக்கையாகும். இந்த இராணுவ நடவடிக்கையினால் தமிழ் மக்கள் பல கொடுமைகளை எதிர்கொண்டார்கள், இந்த இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைக்கும் நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டதாகும். ஆகக்கூடியது 4 மாதங்களே இப்போர், இது நீண்டநாள் நீடிக்காது என்பது சிங்களத்தின் கணிப்பாக இருந்தது.
ஆனால் இந்த இராணுவ நடவடிக்கை பல மாதங்களுக்கு நீடித்துக்கொண்டே சென்றது. விடுதலைப்புலிகள் செப்ரம்பர் 98 "ஓயாத அலைகள் 2" நடவடிக்கையின் மூலமாக கிளிநொச்சி நகரத்தை முற்றுமுழுதாகத் தங்களின் வசம் கொண்டுவந்து இராணுவத்தினரை வீழ்ந்தினார்கள், ஆயிரத்துக்குமதிகமான படையினர் இதனால் கொல்லப்பட்டனர். இந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலமாக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை ஐந்து நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதனைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையின் ஊடாக புலிகளால் மீட்கப்பட்டன. புலிகளின் ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த மகா வெற்றியை நிகழ்த்துவதற்கு மிகமுக்கியமானவராக இருந்தவர் மாவீரன் பால்ராஜ் அவர்களே. இப்போர் வெற்றிகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரமிக்கத்தக்க வளர்ச்சிகளை அடைந்தார்கள். ஜெயசிக்குறு தந்த பாடத்தின் ஊடாக. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறையாக இந்த ஜெயசிக்குறுச் சமர்தான் இருந்தது.

2002 இல் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழத் தேசித்தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானதாக எதனை நீங்கள் கருதுகிறீர்கள்"?

பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.

ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு இப்போர் வெற்றியைத் தலைவரும் ஆழமாக நேசித்தார். அதனைப் போன்றே தலைவரும் இவ்வெற்றிக்கு வழிவகுத்த பால்ராஜ் அவர்களையும் ஆழமாக நேசித்தார்.

1983 - 1984 க்கும் இடைப்பட்ட காலம். புலிகள் இயக்கம் வேர்விடத் தொடங்கியிருந்த வேளையது. பிரிகேடியர் பால்ராஜ் அதிகம் அறியப்படாத ஒரு இளைஞனாக இருந்த நாட்கள். அக்கால கட்டத்தில் அவர் தன்னை முழுமையாக் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளாத காலம். ஆதரவாளனாகவும் பகுதி நேரப் போராளியாக மட்டும் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். ஒருநாள் நடைபெற்ற சம்பவம் அவரைப் போராட்ட வாழ்க்கைக்காக முழுமையானவராக மாற்றியது.

இயக்க வேலையாக தண்ணீரூற்று முள்ளியவளையென அலைந்து திரிந்து விட்டு மிதிவண்டியில் முல்லைத்தீவு நகர் வழியாக பயணித்துக்கொண்டிருக்க முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் இளைஞனாக இருந்த பால்ராஜ் அவர்களை இடைமறித்து அவரைச் சிங்களப் படைகள் கைது செய்து முல்லைத்தீவு முகாமில் மூன்று நாட்கள் சிறை வைத்தார்கள்.

அவர் அங்கிருந்த அந்த மூன்று நாட்களும் சிறிலங்காப் படையினர் அவரை மிரட்டியும், துன்புறுத்தியும் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருத்துக்களை விதைக்க விளைந்தனர். ஆனால் பால்ராஜ் அவர்களை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர் என்றோ, அல்லது பகுதிநேரப் போராளியென்றோ அடையாளம் காணாத சிங்களப்படைகள் சிறுவன் தேவையற்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது எனக் கூறி விடுவித்தனர். ஆனால் அதன்பின்னர் "வலியைத் தந்தவனிடமே திருப்பிக் கொடு என்ற தேசியத் தலைவரின் வாக்கின் அடிப்படையாக கொண்டு தன்னை முற்றுமுழுமையாக போராளியாக மாற்றிக்கொண்டு அதன்பின்னர் தளபதியாகி உயர்ந்தார் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள், தான் சிறைவைக்கப்பட்ட இராணுவ முகாமை பின்னாளில் தாக்கியழித்து வரலாற்றில் பதிவாகினார் மாவீரன் பால்ராஜ் அவர்கள். என்னால் அவரை எழுத முடியாது என்று புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறுவார். அவரின் வீரத்திறமைகள் அளப்பெரியவை. அவற்றை எழுத்தினுள் அடக்கிவிட முடியாது.

வன்னிப் போர்க் களத்தில் சுமார் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரை புறமுதுகு காட்டவைத்து பல மைல்களுக்குத் தப்பி ஓடவைத்த மகாவீரன் பால்ராஜ், போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளைக் கொண்ட சிங்களப் படை உயிர் தப்பினால் போதும் என்று கதிகலங்கி ஒடிய வரலாற்றைச் சிங்களம் மறந்துவிடாது. தப்பி ஓடிய சிங்களப்படை விட்டுச் சென்ற போர்த் தளபாடங்களைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் மூலமாகவும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியடைந்தார்கள். அன்று பால்ராஜ் உயிருடன் இருக்கும்வரை வன்னியை நம்மால் பிடித்துவிட முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் சிங்களம் இருந்தது.

குடாநாட்டைப் பற்றிய நிலப்படமில்லாமலே (Map) முற்றுமுழுதாக அதனை துள்ளியமாக அறிந்து வைத்துக்கொண்ட பால்ராஜ் அவர்கள் போரின் போது இராணுவம் வன்னியில் உள்ளே நுழைந்தால் அதனை வழிமறித்து போரிடும் உபாயங்களையும், உள்ளே சிங்கள இராணுவத்தை வரவைத்து தங்களின் பொறிக்குள் இராணுவத்தைச் சிக்க வைத்த பின்னர் சுற்றி வளைத்து தாக்கும் தந்திரங்களையெல்லாம் வெற்றிகரமான முறையில் செயல்படுத்தி போர்களில் பல வெற்றிகளைப் பெற்று வல்லாதிக்க அரசுகளின் இராணுவத் திட்டங்களையும் தகர்த்தெறிந்த மகாவீரன் தான் பால்ராஜ் அவர்கள். சிங்களத்தின் தலையாட்டிப் பொம்மையாகச் செயல்பட்ட வல்லாதிக்க அரசு சிங்களத்தின் மண் ஆக்கிரமீப்புப் போருக்கு உதவிகளை வழங்கி அதன் ஊடாக தமிழீழப் போராட்டத்தை அழித்துவிடலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டன அவற்றைப் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத நிலையில் கொண்டு சென்றார். இதன் காரணமாகவே அன்று வல்லாதிக்க அரசு யுத்தத்தினால் தீர்வு ஏற்பாடாது சமாதானத்தின் மூலமே தீர்வைப் பெறமுடியும் என்ற நிலைக்கு வந்திருந்தன.

கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்போர் மரவுவழிப்படையாக மாற்றியதில் பால்ராஜ் அவர்களுக்கும் பங்குண்டு. ஒருநாள் போரியல் அறிவை வளர்த்தெடுப்பதற்கு இளம்புலி வீரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தலைவர் விரும்பினார். அதற்குத் தகுதியானவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைத் தேர்ந்தெடுத்து அவரை அழைத்தார். பயிற்சிக்கல்லூரியில் கற்கும் போராளிகளுக்குப் பாடம் புகட்டுமாறு பணித்தார். ஆனால் தமிழீழத் தேசித்தலைவர் ஒரு நிபந்தனையும் வைத்தார். அது "நீ வெளிநாட்டுச் சண்டைகளைப் பற்றியொண்டும் அங்கு வகுப்பெடுக்க வேண்டாம் நீ... பிடித்த சண்டைகளைப் பற்றி மட்டும் சொல்லு அதுவே அவர்களுக்குப் மிகப்பெரிய பாடமாக இருக்கும் என்றார்" அந்தளவுக்குச் சண்டை அனுபவங்கள் நிரம்பிய ஒரு போரியல் புத்தகமாக பால்ராஜ் தலைவரின் பார்வையில் மிளிர்ந்தார்.

போர் ராஜதந்திர முன்னெடுப்புகளில் பிரிகேடியர் பால்ராஜ் மேதையாக இருந்தார். தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்தவர் மாவீரன் பால்ராஜ் அவர்கள். தென்னாசியப் பிராந்தியத்திலேயே அவர் பெரும் தளபதியாக மிளிர்ந்தார். போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளுடன் பல மாதங்கள் போராடிக் கைப்பற்றிய நிலங்களை சில நாட்களுக்குள் கைப்பற்றி, முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை ஐந்தாயிரத்திற்கும் குறைவான போராளிகளைப் பயன்படுத்தி அவர்களை எதிர்கொண்டு போரிட்டு துரைத்தியடித்த பிரிகேடியர் பால்ராஜை உலகமகா வீரன் என்று கூறினால் அது மீகையாகாது.

விஸ்வா

காற்றோடு காற்றாகக் கலந்த சமுத்திரகுமாரி! - புகழேந்தி தங்கராஜ்

யாழ்ப்பாணம் வேலணை தான் அங்கயற்கண்ணி பிறந்த ஊர். யாழ்ப்பாணமும் அதை ஒட்டியுள்ள சப்த (ஏழு) தீவுகளும் சேர்ந்ததுதான் யாழ் குடா நாடு. அனலைத் தீவு, எழுவைத் தீவு, காரைத் தீவு, நயினாத் தீவு, புங்குடு தீவு, மண்டைத் தீவு, வேலணைத் தீவு - என்று அந்தத் தீவு வரிசையில் ஏழாவதாக வருகிறது வேலணை.
வேலணையில் அங்கயற்கண்ணி குடும்பத்துக்குச் சொந்தமான  காணி இருந்தது. அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு சிங்கள ராணுவத்திடம் இழந்த பிறகு யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலுள்ள கொக்குவில்லுக்குக் குடிபெயர்ந்தது அவளது குடும்பம். கொக்குவில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் சாலையில் உள்ளது. அங்கே குடிபெயர்ந்தபோது அங்கயற்கண்ணிக்கே கூடத் தெரியாது அந்தச் சாலை வழியாக இல்லாமல் கடல்வழியாகத் தான் காங்கேசன் துறை நோக்கிய தனது பயணம் அமையப் போகிறது என்பது.

கடலால் சூழப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தின் கடற்கரைகள் வினோதமானவை. ஒவ்வொரு கரைக்கும் ஒவ்வொரு சுபாவம். பிரபாகரன் பிறந்த வல்வெட்டித் துறை கடற்கரை அலையே இல்லாது ஏறக்குறைய ஒரு கடல் நீரேரி போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் பிரபாகரன் போலவே அமைதியாக இருக்கும். வேலணை அதற்கு நேர்மாறான கடற்கரை. நீண்ட வெண்மணற்பரப்பு உயர உயரமான சீற்றத்துடன் எழுகிற  அலைகள் - என்று வேலணை ஒரு ஆவேசக் கடற்கரை.

கொக்குவில்லுக்கு வரும் முன்பே ஓங்கி அடிக்கிற வேலணையின் கடல் அலைகளைப் போலவே நீச்சல் பயிற்சிக்காக அங்கே அடிக்கடி வந்துசென்ற பெண் கடற்புலிகளாலும் கவரப்பட்டாள் அங்கயற்கண்ணி. அந்தப் போராளிகள் அந்தப் பகுதி மக்களுடன் இயல்பாகப் பழகியதும் அவர்களுக்கு இருக்கிற கஷ்டங்களைக் கேட்டுக் கொண்டதும் அதற்கு என்ன தீர்வு என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதும் அவளை அவர்கள்பால் ஈர்த்தது.

இன்றைக்கு நமது தமிழக மீனவர்களுக்கு இருக்கிற உயிராபத்து அன்றைக்கு வேலணை பகுதி மீனவர்களுக்கும் இருந்தது. மீன் பிடிக்கச் செல்பவர்கள் இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தலாலோ தாக்குதலாலோ பாதி வழியிலேயே எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கண்கலங்கத் திரும்பிவருவது அடிக்கடி நடக்கிற சம்பவமாக இருந்தது. தங்களது வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலையே அந்த மக்கள் அஞ்சி அஞ்சிச் செய்யவேண்டிய அவலநிலை. வயிற்றுப் பிழைப்புக்கான தங்கள் தொழிலை இயல்பாகச் செய்யமுடியாத நிலையில் அந்த மக்கள் கண்ணீரோடும் வறுமையோடும் காலந்தள்ளுவதைப் பார்த்தவள் அங்கயற்கண்ணி.

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் ஆட்டு மந்தையைப் போல் அடைபட்டுக் கிடக்கவில்லை அங்கயற்கண்ணியின் இதயம். அவர்களது கண்ணீர் துடைக்கப்பட வேண்டுமானால் ஆயுதம் ஏதுமில்லாத அப்பாவி மக்கள்மீது ஆயுதப் பிரயோகம் செய்யும் இனவெறி பிடித்த கடற்படைக்குப் பாடம் புகட்டவேண்டும் என்று நினைத்தாள். அதற்கான ஒரே வழி கடற்புலிகள் அமைப்பில் இணைவதுதான் என்று உறுதியாக நம்பினாள். கொக்குவில்லுக்கு வந்தபிறகு அங்கயற்கண்ணி தமிழீழ விடுதலைப் புலிகள்  இயக்கத்தில் இணைந்ததன் பின்னணி இதுதான்.

வேலணையில் தன் குடும்பத்துக் காணியெல்லாம் பறிக்கப்பட்டபோதே திருப்பி அடிக்கவேண்டும் - என்கிற எண்ணம் வேர்விட்டிருக்க வேண்டும் அங்கயற்கண்ணிக்குள்! கடற்புலிகள் அமைப்பில் சேர்ந்தவுடனேயே தான் கரும்புலியாக இருக்க விரும்புவதைத் தெரிவித்தவள் அவள். கொலைவெறி பிடித்த திமிங்கலம் போல் தங்கள் கடல்பகுதியில் நடமாடும் சிங்கள இனவெறி கடற்படையின் கப்பல்களில் ஒன்றையாவது தகர்க்கவேண்டும் - என்பதுதான் அவளது கனவாக இருந்தது.

வேலணையில் இருந்தபோதும் சரி கொக்குவில்லுக்கு வந்த பிறகும் சரி இருட்டியபிறகு வெளியே போவதென்றால் தாயின் துணையின்றிப் போகத் துணியாதவள் கயல். தாயின் அரவணைப்பில் குழந்தையாகவே இருந்தவள். இயக்கத்தில் அவள் சேர்ந்ததை அவளை அறிந்த எவராலும் நம்பமுடியவில்லை.

இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்தே போட்டிகளில் முதலிடம் தொடர்ந்து குழுத் தலைவி - என்று முன்னணியிலேயே இருந்தாள் அங்கயற்கண்ணி. தொடக்கத்தில் லெப்டினென்ட் கேர்னல் பாமாவின் தலைமையில் கடற்கண்காணிப்பில் ஈடுபட்ட குழுவில் அவளும் இடம்பெற்றிருந்தாள். மரபு வழிப் போரில் விடுதலைப் புலிகள் எவ்வளவு திறன் படைத்தவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்திய பூநகரி படைத்தளம் மீதான 'தவளைப் பாய்ச்சல்' தாக்குதலின் போது பாமா அங்கயற்கண்ணியை உள்ளடக்கிய குழு கடற் கண்காணிப்பில் வெற்றிகரமாக ஈடுபட்டது.

அங்கயற்கண்ணியின் ஈடுபாடும் ஆற்றலும் மிக விரைவிலேயே அவளை 'கேப்டன்' நிலைக்கு உயர்த்தின. அங்கயற்கண்ணி கேப்டன் அங்கயற்கண்ணியாக அறிவிக்கப்பட்டாள். கரும்புலிகளுக்கான கடும் பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள். அங்கயற்கண்ணி இயக்கத்தில் சேர்ந்ததுதான் தெரியும் அவள் குடும்பத்துக்கு! விரும்பி கரும்புலியாகி இருக்கிறாள் என்பது தெரியாது எவருக்கும்!

இயக்கம் கொடுக்கும் விடுமுறையில் ஒருமுறை தாயைப் பார்க்க கொக்குவில்லுக்கு வந்தாள் அங்கயற்கண்ணி. நன்றாகப் படிக்கவேண்டும் - என்று தம்பிகளுக்கு அறிவுரை சொன்னாள். தன்னைப் பற்றிக் கவலைப்பட்ட தாயிடம் 'என்னைப் பற்றிக் கவலைப்படாதே! நான் காத்தோடு காத்தா போயிடுவேன் அம்மா' என்று அவள் சொன்னதற்கு எவ்வளவு ஆழமான அர்த்தம் இருக்கிறது என்பதை அப்போது எவரும் உணரவில்லை.

காத்தோடு காத்தாக கேப்டன் அங்கயற்கண்ணி இரண்டறக் கலந்ததுஇ 1994 ஆகஸ்டு மாதத்தில். இந்திய சுதந்திர தினத்தன்று அவளது இறுதிப்பயணம் தொடங்கியதுஇ அன்று நள்ளிரவே  அந்தப் பயணம் முடிவடைந்தது.

அன்று 1994 ஆகஸ்ட் 15ம் நாள். காங்கேசன் துறை துறைமுகத்தில் 45 அடி ஆழ கடல்நீரில் நிறுத்தப்பட்டிருந்த வடபிராந்தியத்துக்கான தலைமைக் கட்டளைக் கப்பலான 'அபித' தான் அவளது இலக்கு. மெலிந்த சரீரம் அவளுக்கு. 60 கிலோ கூட இருக்காது அவளது எடை. அவளது இலக்கோ 6300 டன் எடை கொண்ட ராட்சசக் கப்பல்.

326 அடி நீளமும் 51 அடி அகலமும் கொண்ட அந்தக் கப்பல் வட பிராந்தியத்துக்கான நடமாடும் தலைமையகமாகவே இருந்ததால் மிகவும் சக்தி வாய்ந்த ராடார்கள் அதில் பொருத்தப் பட்டிருந்தன. வலுவான ஆயுதங்களைத் தாங்கியிருந்தது அது.  அப்படியொரு அதி சக்தி வாய்ந்த கப்பலை அழிக்கத் தேவையான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதால் அந்தக் கப்பலைத் தொட்டுப்பார்க்கக்கூட புலிகளால் இயலாது என்று உறுதியாக நம்பியது சிங்களக் கடற்படை. அங்கயற்கண்ணி என்கிற  உயிராயுத வடிவில் ஆழ்கடல் வழியே ஆபத்து  வந்துகொண்டிருப்பதை அவர்கள் அறியவேயில்லை.

தாக்குதலுக்காக அங்கயற்கண்ணி புறப்பட்ட கடற்கரையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் 17 கடல் மைல். (ஏறத்தாழ 35 கிலோமீட்டர்.) சிறிது தூரம் வரை படகில் சென்றாலும் கடற்படை மோப்பம் பிடித்துவிடக்கூடும் என்பதால் மொத்தத் தொலைவையும் நீந்தியே கடப்பது என்று முடிவு செய்திருந்தாள் அங்கயற்கண்ணி. 'கவலையே படாதீங்க... பத்திரமாப் போவேன்.. இலக்கை அடிக்காமத் திரும்பமாட்டேன்' என்று புறப்படும் போது உறுதியுடன் சொன்னாள் தனக்குப் பிரியாவிடை கொடுத்த தோழிகளிடம். அவளது குரலில் ஒலித்த 'ஓர்மம்' (வைராக்கியம்) அவர்களை வியக்கவைத்தது.

சக பெண் கடற்புலிகளில் சிலர் அவளுடன் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நீந்திச் சென்றனர். ஆழ்கடல் வரை சென்று அவளை வழியனுப்பினர். அவளைப் பிரிய மனமின்றி அவள் நீந்திச் செல்வதைக் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவள் தங்கள் பார்வையிலிருந்து மறைந்தபிறகே திரும்பினர் அவர்கள்.

மாலையில் தொடங்கியது அங்கயற்கண்ணியின் கடற்பயணம். கடற்கரையில் அமர்ந்து அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவளது தோழிகள். அத்தனை பேரின் மனத்திலும் அங்கயற்கண்ணி நீந்திச் சென்ற காட்சி மட்டுமே படர்ந்திருக்கவேண்டும். அந்த இரவில் அவர்களுக்கு சற்றுத் தள்ளி கடல் மட்டுமே அலைகள் வழியாகப் பேசிக் கொண்டிருந்தது.

கடலின் இன்னொரு முனையில் காங்கேசன் துறையை சுமார் எட்டரை மணி நேர நீச்சலுக்குப் பின் எட்டியிருந்தாள் அங்கயற்கண்ணி. எட்டரை மணி நேரத்தில் 17 கடல் மைலை நீந்திக் கடக்க வைத்தது அவளது உடல் வலிமையாயிருக்க வாய்ப்பில்லை... அது அவளது மன வலிமை!

ஆகஸ்ட் 16ம் தேதி அதிகாலை 12.35 மணி..... அங்கயற்கண்ணி என்கிற உயிராயுதம் காங்கேசன்துறை துறைமுகத்தில் வெடித்துச் சிதறியது. சுமார் 50 கிலோ எடையே இருந்த அந்த உயிராயுதத்தின் தாக்குதலில் 6300 டன் எடை கொண்ட 'அபித' வெடித்துச் சிதறியது. அதன் பாதுகாப்புக்காக அருகில் நின்றிருந்த பீரங்கிக் கப்பலான டோரா கப்பல் ஒன்றும் உடன்கட்டை ஏறுவதைப் போல் அபிதவுடன் சேர்ந்து சாம்பலானது.

அதிர்ந்து போனது சிங்களக் கடற்படை. எந்தத் தாக்குதலாலும் தகர்க்க முடியாது என்று அவர்கள் நினைத்த கட்டளைக் கப்பல் அவர்கள் கண்ணெதிரிலேயே தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருந்தது. அவர்களது கனவுக் கோட்டைகளில் ஒன்று - அபித. அந்தக் கோட்டை அவர்களது கண் முன்னாலேயே ஜலசமாதி ஆகிக்கொண்டிருந்தது.

காங்கேசன்துறையில் அபித கப்பல் தகர்க்கப்பட்ட வெடிச்சத்தம் பல மைல் தூரத்துக்குக் கேட்டது. கடலின் இன்னொரு முனையில் அங்கயற்கண்ணியை வழியனுப்பிவிட்டுக் காத்திருந்த பெண் போராளிகள் 35 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பெருத்த அதிர்வுடன் ஒலித்த அந்தப் பேரொலியைக் கேட்டவுடன் 'கட்டளைக் கப்பல் அவுட்' என்று உரக்க முழங்கினர். அது ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. அடுத்த நொடியே நினைத்துக்கூட பார்க்கமுடியாத அந்தச் சாதனையை உயிரைக் கொடுத்து நிறைவேற்றியிருக்கும் தங்கள் சகோதரி அங்கயற்கண்ணியின் நினைவில் ஆழ்ந்தனர் அவர்கள். கண்கலங்க ஓடிப்போய் கடற்கரையில் நின்றனர் அந்த நள்ளிரவில்... எங்கேயிருந்து அங்கயற்கண்ணி விடைபெற்றாளோ அந்தக் கடற்கரையில் கண்ணீரோடு நின்றனர்.

'உங்கள் தோழி சமுத்திரகுமாரி ஆகிவிட்டாள் அவளை என் மடியில் ஏந்தியிருக்கிறேன்' - என்று சொல்வதைப் போல் கூப்பிடு தூரத்தில் உரத்த குரலில் பேசிக் கொண்டேயிருந்தது அலைகடல். வரலாறும் அங்கயற்கண்ணியை அப்படித்தான் அழைக்கிறது - 'கடலன்னையின் பெண்குழந்தை' என்று!

50 கிலோ ஆயுதம் ஒன்று 6300 டன் அசுரனைத் தகர்த்த இந்த வீர  வரலாறுஇ கோலியத்தை வீழ்த்திய டேவிட் கதையை வாசித்த எவரையும் அது உண்மையாகவே நடந்திருக்குமோ என்றுகூட  யோசிக்கவைத்திருக்கும்.

இனப்படுகொலைதான் செய்கிறது இலங்கை - என்பது தெரிந்தே சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்த ஈவிரக்கமற்ற அத்தனை நாடுகளுக்கும் அண்ணல் காந்தியைப் போல் தன்னுடைய வாழ்வையே செய்தியாக அனுப்பிவைத்தவள் அங்கயற்கண்ணி. 'இனப்படுகொலை செய்கிற இலங்கைக்கு நீங்கள் மேலும்மேலும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தாலும் எம் மக்களைக் காக்கப் போராடும் எங்களுக்கு ஆயுதமே வராது தடுத்தாலும் உயிராயுதம் இருக்கிறது எங்களிடம்... எச்சரிக்கை' என்பதே அந்தச் செய்தி. எக் காலத்துக்கும் பொருந்தக்கூடியது அந்த எச்சரிக்கை.

அங்கயற்கண்ணி சமுத்திரகுமாரியாக சரித்திரம் படைத்து உயிர் துறந்தது கொக்குவில்லில் அவளது தாய்க்குத் தெரியவந்தது. இரவில் தன் துணையில்லாமல் வெளியே போகப் பயப்படும் அந்தப் பிள்ளை 35 கிலோமீட்டர் தூரத்தை நீந்தியே கடந்திருக்கிறாள் - என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.   'பருந்துகிட்ட இருந்து குஞ்சுகளைக் காப்பாற்றும் தாய்க் கோழி மாதிரி வேலணையிலிருந்து நான் பாதுகாப்பாகக்  கூட்டி வந்த பிள்ளை' என்று சொல்லிச் சொல்லி அழுதாள். அந்தப் பருந்து எது என்பதை உணர்ந்தவர்கள் பெண் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காத அந்த பௌத்தப் பருந்துகளுக்கு அங்கயற்கண்ணி என்கிற கோழிக்குஞ்சு பாடம் புகட்டியிருப்பதை எண்ணி வியந்தனர்.

'நல்லூரில் திருவிழா நடக்கிற நேரம்தான் நான் சாகணும்' என்று அங்கயற்கண்ணி அடிக்கடி சொன்னதை நினைத்து அவளது தோழிகளான கடற்புலிகள் அழுதனர். ஏன் அப்படிச் சொல்கிறாள் - என்று புரியாமல் விளக்கம் கேட்டார்களாம் அவர்கள். அதற்கு அங்கயற்கண்ணி சொன்ன பதில் அவளது உயிர்த்தியாகத்தை விட உயர்ந்தது.

'நல்லூரில் திருவிழா நடக்கிற நேரத்தில்தான் கச்சான் வித்த காசு அம்மாகிட்ட இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் ஒவ்வொரு வருஷமும் என் நினைவு நாளுக்கு வீட்டுக்கு விசாரிக்கப் போகும் பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவால் நல்ல சாப்பாடு கொடுக்க முடியும்' என்று அங்கயற்கண்ணி சொன்னபோதே கண்கலங்கி அவளை அணைத்தவர்கள் அவள் இறந்த பிறகு அதைச் சொல்லிச் சொல்லி அழுதார்கள். எந்த அளவுக்கு அவளுக்குள் வைராக்கியம் இருந்ததோ அந்த அளவுக்கு அவளிடம் அன்பும் பரிவும் இருந்தது என்பதை அந்த வார்த்தைகள் உணர்த்தின. (கச்சான் - என்பது வறுத்த வேர்க்கடலை.)

உலகின் எந்த இலக்கியத்திலும் இப்படியொரு இதயத்தைப் பிழியும் பதிவு இருக்க வாய்ப்பேயில்லை. தன் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆண்டுதோறும் தன் நினைவுநாளுக்கு வீட்டுக்கு விசாரிக்கச் செல்வோருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும் அதற்கு வசதியாக - தாயின் கையில் காசு புழங்குகிற ஒரு பருவத்தில் தான் இறக்கவேண்டும் - என்று நினைக்கிற மனம் எங்காவது எவருக்காவதோ எங்கோ ஓர் இலக்கியத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரத்துக்கோ இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? எங்கள் இனத்தின் இன்னொரு அடையாளமாகவே இன்றுவரை திகழும் எங்கள் குலக்கொழுந்து அங்கயற்கண்ணியைத் தவிர வேறெவருக்கும் அப்படியொரு கவலை எழுந்திருக்க வாய்ப்பேயில்லை.

நெல்லியடியில் அமைந்திருந்த அரக்கர்களின் முகாமைத் தகர்த்த மாவீரன் மில்லரில் தொடங்கி முப்பது பேருக்கு மேற்பட்ட கரும்புலிகள் இலங்கைக்கு சர்வதேசமும் வாரிவழங்கிய ஆயுதங்களைத் தங்கள் உயிராயுதத்தால் தகர்த்து எறிந்திருந்தார்கள் அங்கயற்கண்ணிக்கு முன்பே. அவர்கள் அனைவரும் ஆண்கள். அவர்களின் பட்டியலில் பெருமிதத்துடன் தன்னை அவள் இணைத்துக் கொண்டாள் முதல் பெண் கரும்புலியாக!


கரும்புலிகளின் பாடலாக இன்றைக்கும் உலகமெங்கும் ஒலிக்கிறது ஒரு உருக்கமான பாடல்.

'கரும்புலி என்றொரு பெயர்கொண்டு
கடும்பகை தகர்க்கிற வெடிகொண்டு
பெரும்படை அணி இன்றிப் போகின்றோம்
எங்கள் உயிராலே பகை வென்று சாகின்றோம்!

எங்களின் சாவொரு வரலாறு
அதில் எழுதிய வெற்றிகள் பலநூறு
இங்கிது போல் வீரம் வேறில்லை
உயிர் ஈதலே அறத்துக்கு மேல் எல்லை'
என்று தொடங்குகிற அந்தப் பாடல் கண்ணீராலேயே எழுதப் பட்டிருக்கும் ஒரு உருக்கக் கவிதை.

இப்படியொரு கவிதையை வார்த்தைகளால் எழுதாமல் தன் வாழ்க்கையால் எழுதியவள் அங்கயற்கண்ணி. 'காத்தோடு காத்தாகப் போயிடுவேன் அம்மா' என்று அன்று அவள் சொன்ன வார்த்தைகளின் அழுத்தத்தை என்றைக்கும் எழுதமுடியாது எந்தக் கவிஞனாலும்!

அங்கயற்கண்ணியின் தியாகம் எதனோடும் எவரோடும் ஒப்பிடமுடியாத உயிர்த் தியாகம். பல நூறாண்டுகள் அவள் பேசப்படுவாள் வணங்கப்படுவாள் போற்றப்படுவாள். காங்கேசன்துறையின் காற்று வெளிகளிலும் யாழ்ப்பாணத்துக் கடல்வெளிகளிலும் என்றென்றும் காற்றோடு கலந்து நிற்பாள் அந்த சமுத்திரகுமாரி. அவளைப் போன்ற எண்ணற்ற மாவீரர்களின் உயிர்மூச்சுதான் ஈழ விடுதலையின் மூச்சுக் காற்றாக உலவிக் கொண்டிருக்கிறது இன்றைக்கும்! அந்தக் காற்றுக்கு வேலிபோட இயலுமா - இலங்கைப் பகைவர்களாலும் இந்தியக் கயவர்களாலும்!